நகர் நீங்கு படலம் - 1725

1725.
‘இருள் அற்றிட உற்று ஒளிரும்
இரவிக்கு எதிரும் திகிரி
உருளத் தனி உய்த்து, ஒரு கோல் நடையின்
கடை காண் உலகம்
பொருள் அற்றிட முற்றுறும்
அப் பகலில் புகுதற்கு என்றோ,
அருளக் கருதிற்று இதுவோ?
அரசர்க்கு அரசே!’ என்னும்.
‘அரசர்க்கு அரசே!’ - சக்கரவர்த்தியே; இருள் அற்றிட உற்று
ஒளிரும்இரவிக்கு - இருள் ஒழியும்படி பொருந்தி விளங்குகின்ற
சூரியனுக்கு; எதிரும் திகிரி -ஒப்பாகிய ஆணைச் சக்கரத்தை;
உருளத்தனி உய்த்து - உலகெங்கும் செல்லும்படி ஏகசக்ராதிபதியாகச்
செலுத்தி; ஒரு கோல் நடையின் - ஒப்பற்ற செங்கோல் செலுத்தப்
படுதலின்; கடைகாண் உலகம் - யாதொரு இடையூரும் இன்றி முடிவு
அழியும்படி; முற்றுறும் அப்பகலில் - முடிவடைகின்ற அந்த
ஊழிக்காலத்தில்; புகுதற்கு என்றோ அருளக்கருதிற்று - செல்லும்படி
நுழைதற்காகவோ நீ அருள்கொண்டு செய்யக் கருதிய செயல்; இதுவோ? -
இதுதானோ; என்னும் - என்பாள்.
மக்களது வறுமை, அறியாமை இருளகல விளங்குதல், நாட்டின் எல்லா
இடங்களிலும் செல்லுதல்ஆகியவற்றால் சூரியனுக்கு ஒப்பானது ஆணைச்
சக்கரம் என்பதாம். உன் அரசாட்சியில் நலம்பெற்றஉலகம் பிரளயகாலத்து
அழியை அடையக் கருதியோ இத்தகைய செயலைச் செய்யக் கருதியது
என்றுதயரதனை நோக்கிப் புலம்பினள் கோசலை. 31