ஜோன் ஆஃப் ஆர்க் - 1
ஜோன் ஆஃப் ஆர்க் சரித்திரத்தில் மிக இளம் வயதில் சாதித்த பெயர்களில் முக்கியமான பெயர். உலக சரித்திரத்தில் அழியாத இடம் பெற்ற ‘ஜோன் ஆப் ஆர்க்’ என்ற இளம் பெண்ணைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்வது அவசியம்.
அது 15 ஆம் நூற்றாண்டு. இங்கிலாந்து& பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே கடும் போர் நடந்து கொண்டிருந்த காலம். இங்கிலாந்து, பிரான்ஸின் பல பகுதிகளைக் கைப்பற்றியது. பிரான்ஸ் அரசனான ஏழாவது சார்லஸ், அதிகாரங்கள் எதுவுமற்ற பொம்மையாக இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டான்.
பிரான்ஸ் தேசத்தில், ‘தோம்ரிமி’ என்ற சிறிய கிராமத்தில், எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவள் ஜோன். இவள், தனது தாய்நாடான பிரான்ஸ், இங்கிலாந்திடம் அடிமைப் பட்டுக் கிடப்பதைப் பற்றி, தன் தந்தையின் மூலம் அறிந் திருந்தாள். எப்பாடுபட்டாவது தாய் நாட்டை அந்நிய ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற விருப்பம் அவளுக்குள் தோன்றியது. நாளடைவில் இந்த விருப்பம், தீவிரமானது. ‘தாய் நாட்டை காக்கவே நீ பிறவி எடுத்திருக்கிறாய். அதற்கான முயற்சியில் உடனே ஈடுபடு!’ என்ற பொருளில் காட்சிகளும், குரல்களும் அடிக்கடி தனக்குள் தோன்றுவதாக சொல்லத் தொடங்கினாள் ஜோன். அது மட்டுமில்லை, இந்த உயரிய குறிக்கோளுக்காகவே இறைவன் தன்னைப் படைத் திருப்பதாகவும் அவள் நம்பத் தொடங்கினாள். இதை, தன் தாய் தந்தையரிடமும், கிராமத்துப் பெரிய வர்களிடமும் அவள் சொன்னபோது, அவர்கள் நம்ப மறுத்தனர். ‘இது, வெறும் கற்பனை!’ என்றவர்கள், திரு மணம் செய்து, பிள்ளைகள் பெற்றுக் கொண்டு வாழும் வழியைப் பார்க்குமாறு அவளுக்கு அறிவுரை கூறினர்.
இது கற்பனை அல்ல; கடவுளின் ஆணை!’ என்று உறுதி யாக நின்ற அவளை மெதுவாக நம்பத் தொடங்கினர் சிலர். அவர்களது உதவியுடன் பிரான்ஸ் அரசன் ஏழாவது சார்லஸை சந்தித்தாள் ஜோன். தான், இங்கிலாந்தின் ஆதிக்கத்தில் இருந்து பிரான்ஸை மீட்க வந்திருப்பதாக அரசனிடம் பணிவுடன் தெரிவித்தாள். மேலும், தென் பிரான்ஸில் இருந்த ‘ஆர்லேன்ஸ்’ என்ற முக்கிய நகரை மீட்க, பிரெஞ்சுப் படையைத் தன் தலைமையில் அனுப்புமாறு வேண்டினாள். பெரும் தயக்கத்துக்குப் பின் அவளது கோரிக்கையை ஏற்றான் அரசன்.
போர்க் கவசம் அணிந்து, ஒரு கையில் உருவிய கத்தி, மறு கையில் அல்லிப் பூக்கள் வரையப்பட்ட வெண் கொடியுடன் குதிரையின் மீது அமர்ந்து, ஐந்தாயிரம் பிரெஞ்சுப் போர்வீரர்களுடன் புறப்பட்டாள் ஜோன். இது நடந்தது 1429 ;ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம். அப்போது அவளது வயது 18. இளம் பெண் ஒருவளது தலைமையில் ஆர்லேன்ஸ் நகரை நெருங்கிய பிரெஞ்சுப் படையைப் பார்த்து முதலில் சிரித்தனர் ஆங்கிலேயப் படையினர். ஆனால், சுதந்திர வேட்கை மிகுந்த ஜோனின் உணர்ச்சியூட்டும் தலைமையின் கீழ் வீரப் போர் புரிந்த பிரெஞ்சுப் படையினரின் தாக்குதலில், நகரின் கோட்டைகள் ஒவ்வொன்றாக வீழத் தொடங்கின. மிக முக்கியமான கடைசி கோட்டையைக் கைப்பற்றும் போரில் காயம் அடைந்து, மருத்துவ சிகிச்சைக்காக ஜோன் போரிலிருந்து விலக நேர்ந்தது. இதைக் கண்டு மனம் தளர்ந்த பிரெஞ்சு வீரர்கள் பின்வாங்கத் தொடங்கினர்.
