சீரடி சாய்பாபா
சீரடி சாய்பாபா !!
👉 ஒவ்வொருவரும் இந்த பூமியில் மனிதனாக பிறப்பதற்கு ஒரு புண்ணியம் செய்திருக்க வேண்டும் என நம் முன்னோர்கள் அடிக்கடி கூறுவார்கள். அப்படி ஒவ்வொருவரும் புல், மரம், புழுவாக மற்றும் மேலும் பல உயிரினங்களாக பிறப்பெடுத்ததற்கு பிறகுதான் இந்த அரிய மானுட பிறப்பை எடுக்கின்றனர்.
👉 ஆனால், இம்மானுடப்பிறவியின் முக்கிய நோக்கம் என்னவென்று தெரியாமலே பலர் தவறான வழிக்குச் செல்கின்றனர். அவர்களை நல்வழிப்படுத்த சில ஞானிகள் தோன்றுவதுண்டு. அவ்வாறு தோன்றிய அவதார புருஷர்களில் அற்புதமானவர்தான் சாய்பாபா.
ஒரு மகானாக சீரடி சாய்பாபா :
👉 சீரடி சாய்பாபா தனது பதினாறு வயதில், ஒரு வேப்பமரத்தடியில் முதல் முதலாக தியானத்தில் ஆழ்ந்தார். தியானத்தில் ஈடுபட்டிருந்தபொழுது, ஒரு மகானாக காட்சியளித்தார். பின்னர், அவரை நாடிவந்த மக்களுக்கு சிறந்த ஆன்மீகத் தத்துவங்களை எடுத்துக்கூற தொடங்கினார்.
👉 அவரை தரிசிக்க அதிகளவில் மக்கள் வர ஆரம்பித்தனர். மேலும், தன்னிடம் 'உடல் நிலை சரியில்லை' என்று வருபவர்களுக்கு ஆசி வழங்கி அவர்களுடைய நோயைக் குணப்படுத்தினார்.
👉 அவருடைய ஆன்மீக போதனைகள், இந்து மற்றும் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், அனைத்துத்தரப்பு மக்களையும் கவர்ந்தது. அதுமட்டுமல்லாமல் அவருடைய போதனைகளும், தத்துவங்களும், கூற்றுகளும் பொதுமக்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு மிக எளிமையான மொழியில் இருந்தது. இவருடைய புகழ், இந்தியா முழுவதும் பரவியது.
👉 சாய்பாபாவின் அவதாரம் என்பது ஆழ்ந்த எல்லையற்ற பெருங்கடல் போன்றது. அந்த பெருங்கடலில் மூழ்கி அனைவரும் பக்தி, ஞானம், மனப்பக்குவம் உள்ளிட்ட பல்வேறு முத்துக்களை எடுத்துப் பயன்பெறலாம். ஆனால், ஒருபோதும் அந்த பெருங்கடலின் கரையை காண இயலாது.
👉 சாய்பாபா தினமும் அதிகாலையிலேயே எழுந்துவிடுவார். மசூதிக்குள் எரியும் நெருப்புக்குண்டத்தின் அருகில் உள்ள தூணின் மீது சாய்ந்து அமர்ந்த நிலையில், தியானத்தில் ஆழ்ந்துவிடுவார். அந்த தியானத்தில் அவர் என்ன செய்கிறார் என்பதே யாருக்கும் தெரியாது. ஏனெனில் அதிகாலை தியானத்தின்போது அவர் தம் அருகில் யாரையும் வரவிட்டது இல்லை.
👉 தியானத்தின்போது அவர் வாய், 'அல்லா மாலிக்' என்று முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். இதை தூரத்தில் இருந்து நிறைய பக்தர்கள் பார்ப்பதுண்டு. அவர்களில் பலர், பாபா ஏதோ மந்திரம் ஜெபிக்கிறார் என்று நினைத்ததுண்டு. அதோடு அந்த மந்திரம் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டதும் உண்டு. சில பக்தர்கள் தியானத்தின்போது பாபா என்ன கூறுகிறார் என்பது பற்றி பாபாவிடமே நேரில் கேட்டனர். ஆனால், அதற்கு பாபா எதுவும் பதில் கூறவில்லை.
யாருக்கும் உபதேசம் செய்யவில்லை :
👉 ஒரு சில பக்தர்கள் பாபாவிடம், 'பாபா... உங்களை நான் குருவாக ஏற்றுக் கொள்கிறேன். எனக்கு உபதேசம் செய்யுங்கள்' என்று கேட்டனர். ஆனால், சாய்பாபா சீரடியில் இருந்த 60 ஆண்டுகளில் தம் பக்தர்கள் யாருக்கும் எந்த மந்திரத்தையும் சொல்லிக் கொடுத்ததில்லை. உபதேசமும் செய்தது இல்லை.
👉 பாபாவிடம் உபதேசம் பெற்றுவிட வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்த அனைவரும் தோல்வியைத் தழுவினார்கள். இதுபற்றி நன்கு தெரிந்திருந்த ராதாபாய் என்பவர், ஒரு தடவை தன் ஊர்க்காரர்களுடன் சீரடிக்கு வந்திருந்தார். பாபாவை பார்த்து தரிசனம் செய்தார். அந்த தரிசனமே அவருக்கு ஆத்ம திருப்தி தருவதாக இருந்தது.
👉 பாபாவின் மீது அவருக்கு அளவு கடந்த பாசம் ஏற்பட்டது. சீரடி மசூதிக்குள் நுழைந்த மறுவினாடியே அவர் உள்ளம் பாபாவை குருவாக ஏற்றது. இதன் காரணமாக அவர் மனதிற்குள், பாபாவிடம் இருந்து எப்படியாவது ஏதாவது ஒரு உபதேசத்தை பெற்று விட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதைத் தவிர அவர் பாபாவிடம் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை.
👉 சாய்பாபா, ராதாபாய்க்கு எந்த உபதேசத்தையும் அளிக்க மறுத்துவிட்டார். இது ராதாபாய்க்கு மிகுந்த வேதனையை தந்தது. பாபா உபதேசம் தரும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார். சொன்னபடியே தான் தங்கியிருந்த இடத்திலேயே உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
👉 மூன்று நாட்கள் கழிந்தன. ராதாபாய் தண்ணீர் கூட குடிக்கவில்லை. பாபாவிடம் உபதேசம் பெற்றே தீர வேண்டும் என்பதில் வைராக்கியத்துடன் இருந்தார். அவர் உண்ணாவிரதம் இருக்கும் தகவல் சாய்பாபாவுக்கு தெரிய வந்தது. ஆனால், சாய்பாபா ராதாபாயை கண்டுகொள்ளவே இல்லை.
👉 அப்போது ஒரு பக்தர் சாய்பாபாவிடம், 'அவள் உயிருக்கு ஏதாவது ஆகிவிட்டால், இந்த உலகம் உங்களைத்தான் தூற்றும். எனவே, கருணை கூர்ந்து அவருக்கு ஆசியாவது வழங்குங்கள்' என்றார். அதை ஏற்றுக்கொண்ட சாய்பாபா, உடனே ராதாபாயை துவாரகமாயி மசூதிக்கு வரவழைத்தார். அவருக்கு ஆசி வழங்கி அறிவுரை கூறினார்...
👉 அம்மா... உண்மையிலேயே நீங்கள் என் தாய். நான் உங்கள் குழந்தை. ஆனால், நீங்கள் என்னிடம் உபதேசம் கேட்டு தேவையில்லாமல் உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக் கொள்கிறீர்கள். என் சொந்தக் கதையை இன்று உங்களுக்காக சொல்கிறேன். கவனமாக கேளுங்கள். அப்போது உங்களுக்கு சில விஷயங்கள் புரியும்.
👉 எனக்கு ஒரு குருநாதர் இருந்தார். அவர் மிகுந்த அன்பு கொண்டவர். அவருக்கு நான் சீடராக இருந்து நீண்ட நாட்கள் சேவை செய்தேன். அவரிடம் உபதேசம் பெற வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது. இப்போது நீ என்னிடம் உபதேசம் கேட்க எப்படி ஆசைப்படுகிறாயோ... அது மாதிரிதான் நானும் அப்போது ஆசைப்பட்டேன்.
👉 ஆனால், குருநாதர் எனக்கு எந்த உபதேசமும் சொல்லவில்லை. எந்த ஒரு மந்திரத்தையும் அவர் எனக்கு கற்றுத்தரவில்லை. ஒருநாள் அவர் என்னிடம் இருந்து 'உபதேசம் பெற வேண்டும்' என்ற தீவிரத்தை அறிந்தார். உடனே என்னை அழைத்தார். மொட்டை அடிக்கச் செய்தார். பிறகு இரண்டு காசுகளை தட்சணையாக கேட்டார்.
👉 காசு என்றால் இந்த இடத்தில் பணம் என்று அர்த்தம் இல்லை. 'நம்பிக்கை', 'பொறுமை' எனும் இரண்டையும் தான் அவர் தட்சணையாக கேட்டார். இந்த இரண்டையும் நான் என் குருநாதருக்கு அளித்தேன். 'இதனால், குருநாதர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். 12 ஆண்டுகள் நான் என் குருநாதருடன் இருந்தேன். அந்த 12 ஆண்டுகளும் என் மீது குருநாதர் அளவு கடந்த அன்பை காட்டினார்.
👉 அவரது அன்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அவரைப் போல குருநாதர் வாய்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல. நான் அவரை பார்க்கும் போதெல்லாம் அவர் ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்து விடுவார். அதை பார்க்க, பார்க்க எனக்குள்ளும் பேரின்பம் பெருகியது.
👉 சில சமயம் இரவு, பகல் பாராமல் நாங்கள் தியானத்தில் ஆழ்ந்து மூழ்கி விடுவோம். நாளடைவில் என் தியானத்திற்கு அவரைத் தவிர வேறு எந்தவொரு பொருளும் இல்லை என்ற நிலை உருவானது.
👉 குருவுக்கு பணிவிடை செய்வதை தவிர வேறு எந்த வேலையும் இல்லை என்ற நிலை சாய்பாபாவிற்கு ஏற்பட்டது. எனது ஒரே அடைக்கலம் குருதான் என்பது உறுதியானது. இதனால் என் மனம் முழுமையாக அவர் மீதே இருந்தது. இந்த உறுதியான நம்பிக்கை என்பது நான் என் குருநாதருக்கு கொடுத்த ஒரு பைசா தட்சணையாகும். மற்றொரு பைசா பொறுமை எனும் தட்சணையாகும். நான் என் குருவுக்கு மிக நீண்ட நாட்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பொறுமையாக சேவை செய்தேன். இந்த பொறுமையே பிறவிப் பெருங்கடலை நீந்தி முக்தி பெற உதவும்.
👉 மனிதர்களிடத்தில் எந்த அளவுக்கு பொறுமை உள்ளதோ, அந்த அளவுக்கு அது பாவத்தையும், வேதனைகளையும் விரட்டும். பொறுமையில் ஆழ்பவன் ஆபத்துக்களை கடந்து, பயம் நீங்கி எளிதில் வெற்றி பெறுவான். ஒருவன் எந்த அளவுக்கு பொறுமையாக இருக்கிறானோ, அவன் நல்ல பண்புகள் குவிந்துள்ள அரங்கம் போல் இருப்பான்.
👉 நம்பிக்கையும், பொறுமையும் இரட்டைப் பிறவிகள். ஒருவரை ஒருவர் நேசிக்கும் இரட்டைப் பிறவிகள் போல் நம்பிக்கையும், பொறுமையும் இருக்க வேண்டும். இதை நீ எப்போதும் மனதில் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
👉 என் குருநாதர் என்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. அதற்காக அவர் என்னை புறக்கணிக்கவுமில்லை. தாய் ஆமையானது, குட்டியினைப் பிரிந்து நீண்ட தொலைவில் இருந்தாலும், தன் அன்பை எண்ணத்தால் வளர்த்துவிடும். என் குருநாதரும் என்னிடம் அப்படித்தான் இருந்தார்.
👉 அவர் எனக்கு எந்த மந்திரமும், உபதேசமும் சொல்லித்தரவில்லை. அப்படி இருக்கும்போது நான் எப்படி உங்களுக்கு உபதேசம் செய்ய முடியும்? யாரிடமும் நீங்கள் உபதேசத்தை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் மனதில் என்னை நிலை நிறுத்துங்கள். உங்கள் எண்ணமும், செயலும் என்னை குறிக்கோளாக கொண்டு இருக்க வேண்டும். அப்படி என்னை நீங்கள் நோக்கினால், நானும் உங்களை நோக்குவேன்.
👉 குருவை மும்மூர்த்திகளின் அவதாரம் என்று மனதார நம்புங்கள். குருவே வழி நடத்துகிறார் என்று உறுதி கொள்ளுங்கள். அப்படி குருபக்தி உடையவர்கள்தான் உண்மையிலேயே உபதேசம் பெற்றதை போன்று ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள் என்று சாய்பாபா கூறினார்.
👉 அவர் தன் நீண்ட உரையை முடித்தபோது அவர் கண்கள் கருணை மழை பொழிவதாக மாறியது. ராதாபாய் கண்ணீர்விட்டார். அந்த நிமிடமே சாய்பாபாவின் அவதார சிறப்பை புரிந்து கொண்டார். உண்ணாவிரதத்தையும் கைவிட்டார்.
👉ராதாபாய் போலவே புரந்தரே என்பவரும் ஒரு தடவை உண்ணாவிரதம் இருந்து காரியத்தை சாதித்துக் கொண்டார். அவர் மும்பையில் இருந்து அழகிய மலர் செடிகளை சீரடிக்கு எடுத்து வந்தார். துவாரகமாயி மசூதியை சுற்றி அவற்றை நட்டு வளர்க்க ஆசைப்பட்டார். ஆனால் சாய்பாபா, அதற்கு அனுமதி கொடுக்கவில்லை.
👉சாய்பாபா அனுமதி கொடுக்காததால் வேதனை அடைந்த புரந்தரே, தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்தார். மூன்று நாட்களை கடந்தும் அவர் உண்ணாவிரதத்தை கைவிடவில்லை. அவரது மனவுறுதியை கண்ட சாய்பாபா, 'சரி போய் செடிகளை நடுங்கள்' என்று அனுமதி கொடுத்தார்.
👉ஆனால், அதற்குள் அந்த பூச்செடிகள் காய்ந்து சருகாகிவிட்டன. அவற்றை நட்டால், துளிர்க்குமா? என்று சந்தேகப்பட்டார். அப்போது சாய்பாபா அவரிடம், முதலில் செடிகளை நட்டு தண்ணீர் ஊற்றுங்கள், அவை வளரும் என்றார். சாய்பாபா சொன்னபடி இரண்டாவது நாளே.... அந்த காய்ந்த பூச்செடிகள் துளிர்த்தன. பசுமையாக மாறிய பூச்செடிகள் மசூதியை சுற்றிலும் நந்தவனமாக பூத்துக்குலுங்கின.
தண்ணீரில் விளக்கேற்றிய சாயிநாதர் :
👉ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் மசூதியில் தீபம் ஏற்றுவது சாய்பாபாவின் வழக்கம். அதற்காக தினமும் அவர் கடைத்தெருவிற்கு சென்று வியாபாரிகளிடம் எண்ணெய் வாங்கி தீபம் ஏற்றுவார். சிலநாட்கள் இப்படியே சென்றன.
👉ஒருநாள் கடைக்காரர்கள் அனைவரும் ஒன்றுக்கூடி இனி யாரும் சாய்பாபாவிற்கு எண்ணெய் கொடுக்கக்கூடாது என்று முடிவெடுத்தனர். சாய்பாபாவுக்கு கொடுக்கும் எண்ணெய்க்கு காசு வராது என்பதால்தான் அந்த முடிவுக்கு வந்தனர்.
👉வழக்கம் போல் சாய்பாபா எண்ணெய் கேட்டு வந்தார். அவர்களோ, 'எண்ணெய் இல்லை' என்று தீர்க்கமாகத் தெரிவித்துவிட்டனர். எண்ணெய் இருந்தது, ஆனால் கொடுக்கும் எண்ணம் இல்லை. இதனால் சாய்பாபா கோபமோ, குழப்பமோ அடையவில்லை. இதை அறிந்த மகானான சாய்பாபா, அவர்களுக்கு ஞானம் வழங்க விரும்பினார்.
👉காலி தகர டப்பாவுடன் மசூதிக்கு திரும்பினார். எண்ணெய் தர மறுத்த வணிகர்களுக்கு 'ஏதோ நடக்கப் போகிறது!' என்ற உணர்வு ஏற்பட்டது. வியாபாரத்தை விட்டுவிட்டு மசூதிக்குப் போய் அங்கு நடப்பவற்றை கவனிக்கத் தொடங்கினர். அனைத்தும் அறிந்த சாயிநாதர் எதுவும் பேசாமல் தன் மசூதிக்குச் சென்றார். அவர் என்ன செய்கிறார்? என்பதைக் காண எண்ணெய் வியாபாரிகள் அவரைப் பின் தொடர்ந்து சென்றனர்.
👉சாய்பாபா, எண்ணெய் இல்லாத விளக்குகளில் காய்ந்து போன திரிகளை நிதானமாக இட்டார். 'சாய்பாபா, என்ன செய்யப் போகிறார்?' என்று வணிகர்கள் யோசித்தனர். விளக்கு எரிக்க எண்ணெய் கொஞ்சம் கூட இல்லை.
👉திரிகளும் காய்ந்திருந்தன. இதைப்பற்றி எல்லாம் சாய்பாபா சிறிதும் கவலைப்படவில்லை. தகர டப்பாவின் உள்ளே, சில துளிகள் எண்ணெய் மட்டுமே ஒட்டிக் கொண்டிருந்தது. அதில் தண்ணீரை ஊற்றி கலக்கி அதை அனைத்து விளக்குகளிலும் நிரப்பினார். திரிகளைக் கொளுத்தினார். விளக்குகள் உயிர் பெற்று வெளிச்சத்தை வீசின.
👉இதைக் கண்ட வியாபாரிகள் அவரின் பாதத்தில் வீழ்ந்து வணங்கினர். பின்னர் சாய்பாபா அவர்களுக்கு ஞானம் வழங்கி ஆசி வழங்கினார். மேலும் என்றும், எவரிடமும் பொய் கூறக்கூடாது எனவும், எப்போதும் பொருளாசை இருக்கக்கூடாது எனவும் கூறினார்.
👉 இறைவனின் தூதராக கருதப்படும் சாய்பாபா இன்றும் தன்னை வழிபடுகிறவர்களுக்கு அருள்புரிகிறார். தன்னை வெறுப்பவர்களையும் அவர் வெறுத்ததில்லை. அப்படி தன்னை இகழ்ந்த ஒருவரை தனது பக்தனாக மாற்றிக்கொண்டார்.
தன்னை இகழ்ந்தவரையும் தன் பக்தனாக மாற்றிய சாய்பாபா :
👉 ஒருவர் சிறுவயதிலிருந்தே கடவுள் இல்லை என்ற கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அதன் காரணமாக இறைமறுப்பாளராகவும், துறவிகளையும், ஞானிகளையும் குறைத்து பேசும் குணம் கொண்டவராகவும் இருந்தார்.
👉 ஒருமுறை தன் உறவினர் ஒருவரின் இல்லத்திருமண விழாவில் பங்கேற்று, தன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும்போது ஒரு கடுமையான விபத்து அவருக்கு ஏற்பட்டது. அந்த விபத்தில் அவரது கால் உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
👉 அங்கு அவரை வைத்தியம் செய்த மருத்துவர்கள் அவரின் அந்த கால் கடுமையாக சேதம் அடைந்திருப்பதால் அவரால் முன்பு போல் நடக்க முடியாது என்றும், பாதிப்பு தீவிரமானால் அவரின் அந்த ஒரு காலையே எடுக்க வேண்டி வரும் என்றும் எச்சரித்தனர்.
👉 பாதிக்கப்பட்ட அவரை காண்பதற்கு அவரின் நண்பரும், சாய்பாபாவின் பக்தருமான ஒருவர் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அந்த நண்பர் வைத்திருந்த 'சாய்பாபாவின் சரிதம்' என்ற புத்தகத்தைக் கண்டு, தான் மருத்துவமனையில் நேரம் போக்க அந்த புத்தகத்தை படிக்கத்தருமாறு கேட்டு, தன் நண்பரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
👉 அந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்த அந்த இறைமறுப்பாளர் தன்னை அறியாமல் சாய்பாபாவின் பக்தராகவே மாறினார். தான் இதுவரை செய்த தவறுகளுக்காக சாய்பாபாவை நினைத்து மனம் வருந்தினார். பின்னர் அவரின் கால் குணமாகின. இப்போது மீண்டும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய கால் நன்றாக குணமடைந்து விட்டதாகவும், இனி அவர் பழையபடி நடக்க முடியும் என்றும் கூறினார்கள்.
👉 இது சாய்பாபாவின் கருணை என்று மகிழ்ந்த அவர், அந்த மருத்துவமனையில் இருந்து புறப்படும் சமயத்தில், அவர் விபத்தில் சிக்கியபோது, அவரிடம் இருந்த பொருட்களை மீண்டும் அவரிடம் ஒப்படைத்தனர். அதில் விபத்தில் சிக்கும் முன்பு, தான் ஒரு திருமணத்தில் பெற்றுக்கொண்ட தேங்காய் பையும் இருந்தது. அதை சற்று உற்று நோக்கியபோது அந்த பையில் தன் கையை உயர்த்தி ஆசிர்வதிக்கும் சாய்பாபாவின் படமிருந்ததை அப்போது தான் அவர் கவனித்தார்.
👉 சாய்பாபாவின் அருள் தனக்கு முன்பே இருந்திருப்பதால் தான், அந்த விபத்தில் உயிரிழக்காமல் காலில் காயம் ஏற்பட்டதோடு தப்பித்தோம் என்று எண்ணி அவர் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
மனஅமைதி அருளும் சாய்பாபா !!
👉 வாணி என்ற கிராமத்தை சேர்ந்த காகாஜி வைத்தியர் என்பவர் சப்தசிருங்கி தேவியின் ஆலயத்தில் பூசாரியாக இருந்தார். அவர் தினமும் தேவிக்கு பூஜை செய்துவந்த போதிலும் அவரது மனமானது வேதனைகளால் நிறைந்தும், அமைதியிழந்தும் இருந்தது.
👉 பல கோவில்களுக்கு சென்று தெய்வங்களை வழிபட்ட பின்னும் அவரது மனமானது அமைதியை பெறவில்லை. எனவே, மீண்டும் அவர் தன் கிராமத்திற்கு திரும்பினார்.
👉 மனஅமைதி பெற விரும்பிய அவர், தான் தினமும் வழிபடும் சப்தசிருங்கியிடம் வழி கேட்டார். அவர்மேல் இரக்கம் கொண்ட தேவி அவரை சாய்பாபாவை சென்று வணங்குமாறும் அதனால் மனமானது அமைதியடையும் என்றும் கூறினாள்.
👉 ஷீரடி எங்கிருக்கிறது? அங்கே போவது எப்படி? சாய்பாபா யார் என்று தெரியவில்லையே? ஷீரடி விஜயம் எப்படி நடக்கப் போகிறதென்றும் தெரியவில்லையே? என்று காகாஜி குழம்பினார்.
👉 நாம் கடவுளைக் காண வேண்டும் என்று நினைத்தால் மட்டும் அவருடைய தரிசனம் நமக்கு கிடைத்துவிடாது. கடவுளின் பூரண அனுக்கிரகம் நமக்கு இருந்தால் மட்டுமே அவரைக் காண இயலும்.
👉 ஆனால், சாய்பாபாவை ஒரு பக்தர் காண விரும்பினால், தன்னிடத்தே வரச்செய்ய வழியையும் அவரே செய்தும் கொடுப்பார்.
👉 சாய் தரிசனம் கண்ட காகாஜி மனம் மகிழ்ந்தார். அவருடைய இதயம் நெகிழ்ந்தது. சாய்பாபாவின் அருள் அவரின்மீது பொழிந்தவுடன் மனக்கவலைகள் பறந்தோடின. வியப்புறும் வகையில் மனதின் சஞ்சலங்கள் ஓய்ந்தன.
👉 'என்னிடம் சாய்பாபா ஒரு கேள்வியும் கேட்கவில்லை, சமாதானமும் செய்யவில்லை, ஆசீர்வாதமும் செய்யவில்லை. வெறும் தரிசனம் மட்டுமே எனக்கு மகிழ்ச்சியையும், சுகத்தையும் அளித்துவிட்டது'.
👉 'சஞ்சலங்களால் அலைபாய்ந்து கொண்டிருந்த என்னுடைய மனம், தரிசனத்தால் அமைதியுற்றது. இவ்வுலகுக்கு அப்பாற்பட்ட சந்தோஷத்தை நான் அடைந்திருக்கிறேன். இது தரிசன மகிமையே அன்றி வேறெதுவும் இல்லை.'
👉 சாய் பாதங்களில் பார்வை குவிந்தது. வார்த்தைகள் வெளிவர மறுத்தன. சாய்பாபாவின் லீலையை எண்ணி ஆனந்தம் பொங்கி வழிந்தது.
👉 சாயின் பாதங்களில் சரணடைந்தபோது அகத்தில் ஆனந்தம் பொங்கியது. பழைய சஞ்சலங்களை அறவே மறந்துவிட்டதாக கூறினார்.
சாய்பாபாவின் உத்தரவே தாரக மந்திரம் !!
👉 ஷீரடிக்கு யார் வர வேண்டும்? இல்லை யார் ஷீரடியிலிருந்து கிளம்ப வேண்டும் என்பதெல்லாம் சாய்பாபாவின் அனுமதி இருந்தால் மட்டுமே அது நிகழும்.
👉 இமாம்பாய் என்பவர் சாய்பாபாவின் அடியவர் ஆவார். இவர் சாய்பாபாவை தரிசித்தப் பிறகு தன் ஊருக்கு கிளம்புவதற்கு தயாராகி சாய்பாபாவிடம் விடைபெறச் சென்றார்.
👉 ஆனால், சாய்பாபா அவரை அப்போது ஊருக்குப் செல்ல வேண்டாம் என்றும், நிலைமை சரியில்லை என்றும் கூறினார். இமாம்பாய் தன் வீட்டிற்கு போகும் அவசரத்திலும், ஆர்வத்திலும் சாய்பாபாவின் வார்த்தையை மீறிப் புறப்பட்டார். மேலும், அவர் கால்நடையாக செல்லலாம் என்றும் தீர்மானித்தார்.
👉 ஷீரடியில் இருந்து பனிரெண்டு மைல் தொலைவு வரை எந்தவொரு இடையூறுமின்றி அவர் கடந்தார். சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் அவர் சுராலா என்ற நதிக்கரையில் நடந்து சென்றார். அப்போது வானிலை மோசமாக இருந்தபடியால் அங்கிருந்த ஓர் அதிகாரி அவரை மேலும் பயணத்தை தொடர வேண்டாம் என்று எச்சரித்தார்.
👉 இன்னும் நான்கு மைல் மட்டுமே எஞ்சியிருப்பதால், அவர் தான் செல்வதாக கூறி சென்றார். அவர் மூன்று மைல் தொலைவு சென்றதும், பலத்த காற்று வீசத் தொடங்கியது. அப்போது இமாம்பாய் ஆற்றில் இறங்கி சென்று கொண்டிருந்தார். இடியுடன் மழையும் பெய்தது.
👉 ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் கலக்கமுற்ற இமாம்பாய் சாய்நாதரை அழைத்தார். அப்போது வானில் ஒரு மின்னல் கீற்று வந்தது. அந்த ஒளியில் சாய்நாதரை தரிசித்தவர், சா ்பாபாவை பணிந்து வணங்கியபடி அந்த நதியை கடந்து சென்றார். அவர் நதியைக் கடக்கும் வரையில் தண்ணீர் அவரின் முழங்கால் அளவே இருந்தது.
👉 மறுகரைக்கு சென்றதும் அவர் திரும்பி ஆற்றினை நோக்கும்போது அதில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சாய்பாபாவின் அருளால்தான் தன்னால் ஆற்றினைக் கடக்க முடிந்தது என்பதை அறிந்து அங்கேயே சாய்பாபாவுக்கு இமாம்பாய் மனதார நன்றி கூறினார்.
உதி என்பது என்ன?
👉 சாயிநாதரின் திருக்கரங்களால் பக்தர்களுக்கு வழங்கப்படும் உதி மாமருந்தாகும். சாய்பாபாவால் ஏற்றி வைக்கப்பட்ட அக்னி குண்டம் இன்றும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. அதில் விறகு கட்டைகளை போட்டு எரித்துக் கொண்டிருப்பார் சாய்பாபா. அதன்முன் அமர்ந்து தினமும் தியானம் செய்வது அவரது வழக்கம்.
👉 தன் பக்தர்களுக்கு இந்த அக்னி குண்டத்திலிருந்து 'உதி' என்று அழைக்கப்படும் விபூதியை எடுத்துத் தருவார். இந்த 'உதி' மிகவும் சக்தி வாய்ந்தது. எல்லாவித ஊழ் வினைகளையும், வியாதிகளையும், சகல பாவங்களையும் போக்கும் சக்தி வாய்ந்தது.
உதியே மருந்து :
👉 சாய்பாபாவின் பரம பக்தரான ஒருவரது மனைவி, குழந்தை பிறந்து இரண்டு நாட்கள் கழித்து திடீரென்று வயிறு பெரியதாகி மூச்சு விடமுடியாமல் கஷ்டப்பட்டார்.
👉 பிரசவம் பார்த்த பெண் மருத்துவர், அந்தப் பெண்மணியை உடனடியாக வேறு பெரிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு கூறிவிட்டார்.
👉 அதைக் கேட்டு அவரது உறவினர்கள் அனைவரும் அழ ஆரம்பித்துவிட்டனர். அந்த சமயத்தில் சாய்பாபாவின் பக்தரான அப்பெண்ணின் கணவர், தயவு செய்து எனது மனைவியை காப்பாற்று! என்று சத்தம்போட்டு மனதார சாய்பாபாவை பிரார்த்தித்தார்.
👉 பின்னர் தன் மனைவியின் வலது மணிக்கட்டில் சாய்பாபா அருளால் கிடைக்கப்பெற்ற புனித கயிற்றைக் கட்டி, உப்பிய வயிற்றுப் பகுதியில் சிறிது உதியைத் தடவினார்.
👉 கொஞ்சம் உதியை அவரது வாயிலும் இட்டார். இது நடந்த சில நிமிடங்களில் உப்பியிருந்த வயிறு மீண்டும் சாதாரண நிலைக்கு வந்துவிட்டது.
👉 அந்தப் பெண் சீராக சுவாசிக்க தொடங்கினாள். சாய்பாபாவின் உதியே மருந்தாக விளங்கும் என்பதை எல்லோரும் உணர்ந்தார்கள்.
சாய்பாபாவின் மகிமைகள் !!
👉 சாய்பாபா, பக்தர்களுக்கு அவர்களின் இஷ்ட தெய்வங்களின் உருவங்களில் காட்சி தந்து, அருள்புரிந்த அற்புதங்கள் ஏராளம் உண்டு. மருத்துவர் ஒருவருக்கு வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் நண்பராக இருந்தார். மருத்துவர் தீவிர ராம பக்தர். அந்த அதிகாரியோ சாய்பாபாவின் தீவிர பக்தர்.
👉 ஒருமுறை வருவாய்த்துறை அதிகாரி ஷீரடி சென்று சாய்பாபாவை தரிசிக்க விரும்பினார். அவர் எங்கு சென்றாலும் மருத்துவ நண்பரும் உடன் செல்வது வழக்கம். எனவே, ஷீரடிக்கு தன்னுடன் வருமாறு மருத்துவரை அழைத்தார்.
👉 அப்போது மருத்துவர், 'நான் ஸ்ரீராமரையே தெய்வமாகக் கொண்டவன். எனக்கு எல்லாமே ஸ்ரீராமர்தான். அதனால் வேறு யாரையும் நான் வணங்குவதில்லை. அதனால் நீங்கள் மட்டும் போவதுதான் சரி... நான் வரவில்லை!' என்று கூறிவிட்டார்.
👉 நண்பரான வருவாய்த்துறை அதிகாரி, 'ஸ்ரீராமரின் மீது உங்களுக்கு உள்ள பக்தியை நான் அறிவேன். அதை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. மேலும், நீங்கள் சாய்பாபாவை வணங்கித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. யாரும் உங்களை வற்புறுத்தவும் மாட்டார்கள். நாம் இருவரும் சேர்ந்தே பயணம் செய்வது வழக்கம். எனது திருப்திக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் நீங்கள் வந்தாக வேண்டும்!' என்று உரிமையுடன் அழைத்தார்.
👉 நண்பரின் அன்புக்கு கட்டுப்பட்ட மருத்துவர், அவருடன் ஷீரடி சென்றார். இருவரும் சாய்பாபாவின் தரிசனத்திற்காக மசூதிக்குச் சென்றனர். அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.
👉 சாய்பாபாவின் பக்தரான வருவாய்த்துறை அதிகாரி, மகானை வணங்குவதற்கு முன் அவரை முந்திக்கொண்டு முன்னால் விரைந்து சென்ற மருத்துவர், எவரும் எதிர்பாராத விதமாக சாய்பாபாவின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். இரு கைகளையும் கூப்பி சாய்பாபாவை, பக்தியுடன் வணங்கினார்.
👉 மட்டற்ற வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்த அதிகாரி, மருத்துவரின் மனமாற்றத்திற்கான காரணத்தைக் கேட்டார். அந்த மருத்துவர், 'என் அன்புக்குரிய ஸ்ரீராமர் அந்த ஆசனத்தில் வீற்றிருக்கக் கண்டேன். அதனால் பணிந்து வணங்கினேன். மீண்டும் அந்த இடத்தைப் பார்க்கும்போது அங்கு சாய்பாபா இருந்தார். ராமர் வேறு அல்ல, சாயி வேறு அல்ல என்று உணர்ந்துகொண்டேன் என்று கூறினார். சாய்பாபா ஒரு முழுமையான யோகி. அவதார புருஷர்!' என்று நெகிழ்ச்சியுடன் கண்ணில் கண்ணீர் மல்க கூறினார்.
பாபா... சாய்பாபா ஆனது எப்படி தெரியுமா?
👉 சீரடி சாய்பாபாவிடம் எத்தனையோ பக்தர்கள் நெருக்கமாக இருந்தார்கள். ஆனால் பாபாவிடம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்த ஒரே பக்தர் மகல்சாபதி. சாய்பாபா - மகல்சாபதி இவர்களின் இருவரது வாழ்க்கையும் இரண்டற கலந்து இருந்தது.
👉 இன்று உலகத்தில் இருக்கும் கோடிக்கணக்கான பக்தர்கள் சீரடி சாய்பாபாவின் அதிசயத்தை உணர்ந்து அவரை பூஜை செய்து வழிபாடு செய்கிறார்கள் என்றால், அதற்கு மூலகாரணமாக இருந்தவர் மகல்சாபதி. சீரடிக்கு வந்த இளம் பாபா பெயரை 'சாய்பாபா' என்று மாற்றிய பெருமை மாமனிதரான இந்த மகல்சாபதிக்கே சேரும்.
👉 மேலும், சாய்பாபா என்ற மந்திர சொல்லில் பக்தர்கள் மயங்கிக் கிடப்பதற்கான காரணமும் இவரேதான். சீரடியில் சாய்பாபாவை நாற்பது வருடங்கள் பூஜித்து, ஆராதித்து, வழிபட்ட சிறப்பும் இவருக்கு உண்டு. சாய்பாபாவுக்கு அவர் வெறும் பக்தனாக மட்டுமல்லாமல், வேலைக்காரனாகவும் இருந்தார்.
யார் இந்த மகல்சாபதி?
👉 மகல்சாபதிக்கு வசதி வாய்ப்பு கிடையாது. பரம ஏழை. ஆனால், நல்ல மனிதர். மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வாழக்கூடியவர்.
👉 சீரடியில் உள்ள கண்டோபா கோவில், அவரது குலதெய்வமாகும். இந்த கோவிலில் குடிக்கொண்டிருக்கும் மூலவர் சிவனின் பெயர் மகல்சாபதி. இவருடைய பெற்றோர்கள் அந்த பெயரையே இவருக்கு வைத்திருந்தார்கள். அக்கோவிலின் பூசாரியாகவும் அவரே இருந்தார். பொற்கொல்லர் இனத்தைச் சேர்ந்த மகல்சாபதிக்கு குடும்பத் தொழில் ஏற்றதாக இல்லை. விவசாய நிலம் ஏழு ஏக்கர் இருந்தும் விளைச்சல் இல்லாததால் அதிலிருந்து அவருக்கு வருமானம் எதுவும் கிடைக்கவில்லை.
👉 வறுமையில் வாடிய அவர் கண்டோபா ஆலயத்தில் வரும் வருவாயை மட்டுமே சார்ந்து இருந்தார். அந்த வருமானமும் கோவில் நிர்வாக செலவுகளுக்கு சென்றது. மகல்சாபதியின் வாழ்க்கை வறுமையில் சிக்கியது. மனைவி, 3 மகள்கள், 1 மகனை காப்பாற்ற அவர் கடும் போராட்டங்களை எதிர்கொண்டார். இந்த சூழ்நிலையில் தான் முதன் முதலில் இளம் பாபாவை சந்தித்தார்.
👉 ஒரு வேப்ப மரத்தடியில் அமர்ந்திருந்த இளம் பாபாவின் செயல்பாடுகள் மகல்சாபதியை ஈர்த்தன. ஆனால் அவர் திடீரென மாயமாகிவிட்டார். பாபா மீண்டும் சீரடிக்கு திரும்பியபோது முதன் முதலில் மகல்சாபதிதான் அவரைப் பார்த்தார். மகிழ்ச்சி பொங்க அவர், 'ஆவோ சாய்' என்று அழைத்தார்.
👉 அன்று அவர் அப்படி அழைத்த பெயரே பாபாவுடன் இணைந்து 'சாய்பாபா' என மாறி இன்றுவரை நிலைத்து கொண்டிருக்கிறது.
பக்குவப்பட்ட மனமிருந்தால் சாய்பாபா அருள் கிடைக்கும்!
👉ஒருவருக்கு சாய்பாபா, தரிசனம் தரவேண்டுமென்று நினைத்துவிட்டால், அந்த நபர் எந்த முயற்சியும் செய்யாமலேயே அவருக்கு மகானின் தரிசனம் கிடைத்துவிடும்.
👉பம்பாயை சேர்ந்த லாலா லக்ஷ்மிசந்த் என்பவரின் கனவில் வயதான ஒருவர் தாடியுடனும், அவரைச் சுற்றி நான்கைந்து பேர் இருப்பது போலவும் கனவு கண்டார். அவர் அதற்கு முன்பாக சாய்பாபாவை தரிசிக்கவில்லை. ஆதலால், அந்த முதியவர் யாராக இருக்கக்கூடும் என்று சிந்தித்தார்.
👉அந்த தருணத்தில் அவரின் நண்பரின் இல்லத்தில் தாஸ்கணுவின் கீர்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக லக்ஷ்மிசந்த்க்கும் அழைப்பு வந்திருந்தது.
👉தாஸ்கணு எப்போது கீர்த்தனை செய்தாலும், சாய்பாபாவின் படத்தை முன்னால் வைத்து வணங்கிய பிறகே பூஜை செய்வது வழக்கம். லக்ஷ்மிசந்த் கீர்த்தனைக்கு வந்தபோது அவருக்கு ஓர் அதிசயம் காத்திருந்தது. தாஸ்கணு கொண்டு வந்திருந்த புகைப்படத்தில் இருப்பவரின் உருவமும், தான் கனவில் கண்டவரின் உருவமும் பொருந்தியிருந்தது. பின்னர் அவரே ஷீரடியில் வசிக்கும் சாயிநாதர் என்பதை அறிந்துகொண்டார்.
👉தாஸ்கணுவின் கீர்த்தனைகளைக் கேட்டவுடன் சாயிநாதர் மீது லக்ஷ்மிசந்த்துக்கு பக்தி உண்டாகியது. ஆனால், அவருக்கு எப்படி ஷீரடிக்குச் சென்று மகானை தரிசிப்பது என்பது புரியாமலிருந்தது.
👉ஆனால், சாய்பாபா லக்ஷ்மிசந்த்தை காண்பதற்கு திருவுள்ளம் கொண்டுவிட்டார். அதன்பிறகு அவரால் செல்ல முடியாமல் இருக்க முடியுமா?
👉லக்ஷ்மிசந்த்தின் நண்பரான சங்கரராவ் ஒருநாள் லக்ஷ்மிசந்த்தை சந்தித்து, தன்னுடன் ஷீரடிக்கு வருகிறாயா என்று கேட்டார். இந்த வாய்ப்புக்காகவே காத்திருந்த லக்ஷ்மிசந்த்தும் வருவதாக ஒப்புக்கொண்டார்.
👉ஆனால், அவரிடம் ஷீரடிக்கு செல்வதற்கு தேவையான பணம் இல்லை. எனவே, ஒருவரிடம் பதினைந்து ரூபாய் கடனாகப் பெற்றுக்கொண்டு சங்கரராவுடன் ஷீரடிக்குப் புறப்பட்டார்.
👉சாய்பாபாவுக்கு சமர்ப்பிப்பதற்காக சில கொய்யாப்பழங்கள் வாங்க வேண்டும் என்று விரும்பினார் லக்ஷ்மிசந்த். இவர்கள் செல்லும்போது சாய்பாபாவை பற்றி பாடல்கள் பாடிக்கொண்டு சென்றனர். அப்படி பாடுவதிலும், சுற்றி இருக்கும் இயற்கை காட்சிகளை காண்பதிலும் தன் கவனத்தை செலுத்தினார். இதன் காரணமாக அவர் கொய்யாப்பழங்களை வாங்க மறந்துவிட்டார்.
👉சாய்பாபாவை தரிசிக்கச் செல்லும் வழியில் சில முஸ்லீம் பக்தர்களும் பயணித்தனர். அவர்களிடம் லக்ஷ்மிசந்த் சாய்பாபாவை பற்றி விசாரித்தார். அந்த பக்தர்களும் சாய்பாபா ஒரு சிறந்த ஞானி என்றும், அவரை ஒரு மகான் வடிவத்தில் இருக்கும் கடவுள் என்றும் கூறினர். இதைக்கேட்ட லக்ஷ்மிசந்த் ஆனந்தமடைந்தார்.
👉வண்டி நெடுந்தூரம் சென்றபின் தான், சாயிநாதருக்கு தான் கொய்யாப்பழங்கள் வாங்க எண்ணியிருந்ததையும் ஆனால், அதை மறந்துவிட்டதையும் எண்ணி வருந்தினார். இந்தச் சிறிய விஷயத்தைக்கூட சாய்பாபா தனக்கு நினைவுப்படுத்தவில்லையே என்று தன் மனதினுள் கடிந்துகொண்டார்.
👉அவர் அப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போதே, ஒரு மூதாட்டி கொய்யாப்பழங்கள் நிறைந்த கூடையுடன் அங்கு வந்தாள். அவளிடம் தன் விருப்பம் போல கொய்யாப்பழங்களை வாங்கிக் கொண்டார். அந்தக் மூதாட்டி மீதியிருந்த பழங்களையும் அவரிடம் கொடுத்து தனது சார்பாக சாய்பாபாவிடம் அளிக்கும்படி வேண்டினாள்.
👉பின் இருவரும் ஷீரடிக்கு சென்றார்கள். துவாரகாமாயிக்கு சென்று சாய்பாபாவை தரிசித்தார்கள். அவரை தரிசித்ததுமே லக்ஷ்மிசந்த் மிகுந்த பரவசமடைந்தார். சாய்பாபா லக்ஷ்மிசந்த்தையும், சங்கரராவையும் ஆசீர்வதித்தார். பின்னர் சாய்பாபா லக்ஷ்மிசந்த்தை பார்த்து, இப்போதாவது என் மீது உனக்கு நம்பிக்கை ஏற்பட்டதா? ஒருவரிடம் கடன் வாங்கிக் கொண்டு என்னை தரிசிக்க வந்தாய். ஆனாலும், வழியில் என்னைப் பற்றி பிறரிடம் விசாரிக்கிறாய்? ஏன் பிறரை வினவ வேண்டும்? நீயே நேரடியாக தெரிந்துகொள்ளக்கூடாதா? என்று கேட்டார்.
👉இதைக் கேட்டவுடன் லக்ஷ்மிசந்த் மிகவும் ஆனந்தம் அடைந்தார். அவர் மீண்டும் ஒருமுறை சாய்பாபாவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி, உதியுடன் ஆசீர்வாதத்தையும் பெற்றார்.
👉இவ்வாறு சாய்பாபா தன் பக்தர்கள் எங்கிருந்தாலும் அவர்களை தம்மிடம் அழைத்து ஆசீர்வதிக்கவே செய்கிறார்.
👉நம்பிக்கை இருந்தால் சித்திரத்திலும் உயிருடன் இருப்பேன். ஸ்ரீசாயிநாதரின் இரண்டு மகத்தான உபதேசங்கள் நம்பிக்கையும், பொறுமையும்தான்.
சாய்பாபாவின் மகிமைகள்!
👉தார்க்காட் என்பவரின் மனைவியும், அவருடைய மகனும் தீவிரமான பாபா பக்தர்கள் ஆவார்கள். ஆனால், தார்க்காட் என்பவருக்கு பாபாவிடத்தில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. ஒருமுறை தார்க்காட்டின் மனைவியும், அவருடைய மகனும் சீரடிக்கு செல்ல விரும்பினர். ஆனால், அவர்களுக்குள் ஒரு தயக்கம்.
👉நாங்கள் இருவரும் சீரடிக்கு சென்றுவிட்டால், வீட்டில் இருக்கும் பாபாவின் திருவுருவப்படத்திற்கு தினசரி செய்யப்படும் நைவேத்தியம் தடைப்பட்டுவிடுமே என்று தயங்கினர்.
👉அவர்களுடைய விருப்பத்தை புரிந்துகொண்ட தார்க்காட், நீங்கள் இருவரும் தயங்காமல் சீரடிக்கு செல்லலாம். உங்கள் சார்பில் நானே சாயிநாதருக்கு நைவேத்தியம் செய்வதாகவும் உறுதி அளித்தார். அதனால், தாயும் மகனும் சீரடிக்கு சென்றனர்.
👉தார்க்காட், தினமும் காலையில் அலுவலகம் செல்வதற்கு முன்பாக ஏதேனும் பிரசாதம் தயாரிக்கச் சொல்லி, பாபாவுக்கு நைவேத்தியம் செய்துவிட்டு செல்வார். மதிய உணவில் பாபாவுக்கு படைக்கப்பட்ட நைவேத்தியம் பிரசாதமாகப் பரிமாறப்படும். ஆனால், மூன்றாவது நாள் பாபாவுக்கு நைவேத்தியம் செய்ய மறந்துவிட்டார்.
👉மதிய உணவுக்கு வந்தவர், உணவில் பாபாவின் பிரசாதம் பரிமாறாமல் போகவே, பணியாளிடம் விவரம் கேட்டார். பணியாள் சொல்லித்தான் அன்று தான் பாபாவுக்கு நைவேத்தியம் செய்யாமல் சென்றுவிட்டது தார்க்காட்டுக்கு தெரியவந்தது. மனைவிக்கும், மகனுக்கும் கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் போனது குறித்து மனம் வருந்திய தார்க்காட், அப்போதே சீரடியில் இருந்த தன் மனைவிக்கு நடந்த செய்தியை தெரிவித்து, இனிமேல் பாபாவின் நைவேத்திய விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பதாக உறுதி கூறி ஒரு கடிதம் எழுதினார்.
👉அவர் கடிதம் எழுதிக் கொண்டிருந்த அதேவேளையில், துவாரகாமாயில் பாபாவின் முன்பாக தார்க்காட்டின் மனைவியும், மகனும் அமர்ந்திருந்தனர். அவர்களைப் புன்னகையுடன் பார்த்த பாபா, 'இன்று மதியம் நான் உங்கள் வீட்டுக்கு சென்றிருந்தேன். மிகுந்த பசியுடன் இருந்த எனக்கு அங்கே உணவு எதுவும் கிடைக்கவில்லை' என்று கூறினார்.
👉சாயிநாதர் அப்படி கூறியதற்கான காரணம் தார்க்காட்டின் மனைவிக்கு புரியவில்லை. ஆனால், மகன் ஓரளவுக்கு விஷயத்தை யூகித்துக்கொண்டான். தன்னுடைய தந்தை பாபாவுக்கு நைவேத்தியம் செய்யவில்லை என்று தன்னுடைய தாயிடம் கூறினான்.
👉இப்போது இருப்பது போன்ற தகவல்தொடர்பு வசதிகள் அப்போது இல்லாத காரணத்தால், உடனே தார்க்காட்டிடம் பேசி விவரம் தெரிந்துகொள்ள முடியவில்லை. சம்பவம் நடந்த மூன்றாவது நாள் தார்க்காட்டின் கடிதம் சீரடிக்கு வந்து சேர்ந்தது. தார்க்காட்டின் மனைவி, தன் மகன் யூகித்து சொன்னது சரிதான் என்பதை தெரிந்துகொண்டாள்.
👉நம்பிக்கையுடன் அவருடைய திருவுருவப்படத்தை வணங்குபவர்களுக்கு, அவர் உடனுக்குடன் நன்மைகளை அருளவே செய்கிறார்.
சாய்பாபாவின் மறைவு..!!
👉சாய்பாபா ஜீவசமாதி அடைவதற்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அதற்கு முன்னதாக அவர், தனது ஆத்மா பிரிவு எப்படி ஏற்படும் என்பதையும், தனக்கு எங்கு, எப்படி மகாசமாதி அமைக்கப்பட வேண்டும் என்பதையும் பல தடவை பலரிடம் சூசகமாக கூறி இருந்தார்.
👉மகாசமாதி அடைவதற்கு 10 நாட்களுக்கு முன்பு சாய்பாபா தன்னை சந்திக்க வந்த ஒரு பக்தரிடம், 'அம்மா.... எனக்கு துவாரகமாயிலும், சாவடியிலும் மாறி, மாறி இருந்து சலித்துவிட்டது. நான் களைப்பாக உணர்கிறேன். எனவே, கோபால ராவ் பூட்டி, கட்டிக் கொண்டிருக்கும் புதிய கட்டிடத்திற்கு போய்விட போகிறேன். நான் அங்கு சென்ற பிறகு பெரிய, பெரிய மனிதர்கள் எல்லோரும் என்னைத் தேடி அங்கு வருவார்கள்' என்றார்.
👉அப்போது சிலர் மட்டும்தான், சாய்பாபா தனது மகாசமாதியை புதிய கட்டிடத்தில் அமைத்துக்கொள்ள விரும்புகிறார் என்பதை உணர்ந்து கொண்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகு சாய்பாபா வெளியில் செல்வதை குறைத்துக் கொண்டார். விஜயதசமிக்கு இரு தினங்களுக்கு முன்பு சாய்பாபா உணவு சாப்பிடுவதை முழுமையாக நிறுத்திவிட்டார். அவர் உடல்நிலை மேலும் பலவீனமாக மாறியது.
👉இதனால் சாய்பாபா அருகில் எப்போதும் அவரது தீவிர பக்தர்கள் இருந்தனர். ஒரு நிமிடம் கூட அவர்கள் சாய்பாபாவை விட்டு அகலவில்லை.
👉அச்சமயம் லட்சுமிபாயை அழைத்த சாய்பாபா, 'இதுவரை நான் உனக்கு எதுவுமே செய்ததில்லை. இதோ பிடி...' என்று கூறி தன் கபினி உடை பைக்குள் கையை விட்டு முதலில் 5 ரூபாயை எடுத்துக் கொடுத்தார். பிறகு மீண்டும் ஒரு தடவை பைக்குள் கைவிட்டு 4 ரூபாயை எடுத்துக் கொடுத்தார்.
👉மொத்தம் 9 ரூபாய்களை கொடுத்தார். சாய்பாபா கொடுத்த அந்த 9 ரூபாய் மிகப்பெரும் சொத்தாக தெரிந்தது. அது மட்டுமல்ல, சாய்பாபா கையால் நாணயம் பெற்று ஆசீர்வதிக்கப்பட்ட கடைசி நபர் என்ற சிறப்பும் அவருக்கு கிடைத்தது.
👉எப்போதும் தனக்கு குடை பிடித்து வருபவரும், தோல் நோயால் பாதிக்கப்பட்டவருமான பாகோஜி தோளில் சாய்பாபா சாய்ந்து கொண்டார். பிறகு பாகோஜிக்கு மட்டும் கேட்கும்படி, 'பூட்டியின் புதிய கட்டிடத்திற்கு என்னை அழைத்து செல்லுங்கள். அங்கு நான் சுகமாக இருப்பேன். எல்லோரையும் சுகமாக வைத்துக் கொள்வேன்' என்றார். அடுத்த வினாடி சாய்பாபா அப்படியே மூச்சைப் பிரித்து மகாசமாதி அடைந்துவிட்டார்.
👉இன்று அவர் இல்லாவிட்டாலும், சீரடியில் அவர் சமாதியான இடம் தற்பொழுது பல்லாயிரக்கணக்கானவர்கள் வணங்கும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.
👉இருபதாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்ட 'முதல் அவதாரப் புருஷர்' எனப் போற்றப்பட்ட சீரடி சாய்பாபா அவர்கள், 1918ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் நாள் இந்த உலக வாழ்க்கையை விட்டு நீங்கினார்.
