சார்லி சாப்ளின்

சார்லி சாப்ளின்

bookmark

சார்லி சாப்ளின்


😄 சார்லி சாப்ளின் அவர்கள், ஏப்ரல் 16ஆம் தேதி 1889ஆம் ஆண்டு லண்டனில் உள்ள வால்வோர்த்தில் (Walworth) சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் - ஹன்னா சாப்ளின் என்ற தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் சர் சார்லஸ் பென்ஸர் சாப்ளின் என்பதாகும்.

😄 இவரது குழந்தைப்பருவம் அவ்வளவு இனிமையானதாக இருக்கவில்லை. இவர் பிறந்த சில தினங்களிலேயே இசைக்கலைஞர்களான இவரது பெற்றோர் சார்லஸூம், ஹன்னாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

😄 சார்லி சாப்ளின் தனது சிறுவயதில் தனது தாய் மற்றும் சகோதரர் சிட்னியுடன் லண்டனில் உள்ள கென்னிங்டனில் (Kennington) வாழ்ந்தார். வாடகை தர முடியாத காரணத்தால் இவரது தாய் ஹன்னா, சகோதரர் சிட்னி, சாப்ளின் மூவரும் குடியிருந்த வீடுகளிலிருந்து அடிக்கடி மாற்றப்பட்டனர். சார்லி சாப்ளினின் தந்தை, சார்லஸ் சாப்ளின் இவர்களுக்கு நிதி உதவியையும் வழங்கவில்லை.

😄 இவர்களின் வாழ்க்கை நிலை மிகவும் மோசமடைந்ததால், சாப்ளின் ஏழு வயதாக இருக்கும்போது லம்பேத் பணிமனைக்கு (Lambeth Workhouse) அனுப்பப்பட்டார். அதன்பின் சார்லி சாப்ளின் 18 மாதங்களுக்கு பிறகு தனது தாயுடன் மீண்டும் சேர்ந்தார்.

😄 தொடர் குடும்பப் பிரச்சனைகளால் மன அழுத்தத்திற்கு ஆளானார் தாய் ஹன்னா. இதனால், பேசும் திறனை இழந்த ஹன்னாவிற்கு மனநலப் பாதிப்பு ஏற்பட்டது. எனவே, அவர் சிகிச்சைக்காக மனநலக் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார். தாய் மனநல மருத்துவமனையில் இருந்ததால், சாப்ளின் மற்றும் அவரது சகோதரர் சிட்னி ஆகியோர் தந்தையுடன் வசிக்க அனுப்பப்பட்டனர். அப்போது சார்லஸ் குடிபோதைக்கு அடிமையாக இருந்தார். அதன்பின் சாப்ளினின் தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு உடல்நல குறைவால் இறந்தார்.

😄 அதன்பின் ஆதரவற்ற சிறுவர்களுக்கான இல்லத்தில் சாப்ளின் சேர்க்கப்பட்டார். அங்கே சாப்ளின் சந்தித்ததெல்லாம் வாழ்வில் ஒருபோதும் எதிர்பார்த்திராத துயரங்களை மட்டுமே. தனிமையும், உடல் உபாதைகளும் அவரை மிகவும் வாட்டியது. ஆனால், அவை அத்தனையையும் சகித்துக் கொண்டு அங்கேயே இருந்தார் சாப்ளின். அதிக கண்ணீர் வடித்த நாட்கள் இவை என பின்னாளில் சாப்ளின் குறிப்பிட்டுள்ளார். இருந்தாலும் சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் இவருக்குள் ஓடியது.

முதல் நடிப்பு :

😄 முதன் முதலில் 1894ஆம் ஆண்டில் மியூசிக் ஹாலில் தனது ஐந்து வயதிலேயே தாய்க்கு பதிலாக ஒரு வேடத்தில் நடித்தார். பல நாட்கள் உடல்நல குறைவால் படுத்த படுக்கையாக இருந்தபொழுது, இரவுகளில் அவரது தாய் ஜன்னல் ஓரம் அமர்ந்து வெளியில் நடக்கும் நிகழ்வுகளை நடித்து காட்டுவார்.

😄 சாப்ளினுக்கு பத்து வயதாக இருந்த பொழுது சிட்னி, நகைச்சுவையான பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை வாங்கித் தந்தார். பின்பு சிறு சிறு நாடகங்களில் நடித்து வாழ்க்கையை நடத்தினார்.

😄 சாப்ளினின் குறும்புத்தனமான நகைச்சுவை நடிப்பு பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல், பின்னாளில் உலகத்தையே தன் நகைச்சுவை நடிப்பால் கட்டி போட போகிறவர் என்பது சிறுவயதிலேயே அவருக்கு இருந்த ரசிகர்கள் மூலம் உறுதியானது.

முதல் வேலை :

😄 சார்லி சாப்ளின் தான் நடிகராக வேண்டும் என்ற தனது லட்சியத்தை வளர்த்துக் கொண்டார். தனது 14வது வயதில், லண்டனில் உள்ள ஒரு நாடக நிறுவனத்தில் பதிவு செய்தார். அதன் மேலாளர் சாப்ளினின் திறமையை உணர்ந்து அவருக்கு ஹாரி ஆர்தர் செயிண்ட்ஸ்பரியின் ஜிம் (Harry Arthur Saintsbury"s Jim), ஒரு காதல் கொக்கெய்ன் (Romance of Cockayne) திரைப்படத்தில் நியூஸ் பாயாக நடிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

😄 இந்த நிகழ்ச்சி 1903ஆம் ஆண்டில் நடைபெற்றது. ஆனால் இந்த நிகழ்ச்சி தோல்வியை தழுவியது. இருப்பினும், சாப்ளினின் நகைச்சுவை செயல்திறன் பாராட்டப்பட்டது.

BODY LANGUAGE:

😄 சார்லி சாப்ளினுக்கு அப்போது 17 வயது இருக்கும். இங்கிலாந்தில் உள்ள ஒரு சர்க்கஸ் குழுவில் திரண்டிருந்த கூட்டத்தின் முன்பு சாப்ளின் நடித்தார். நீளமான வசனங்களை மிக அழகாக, தெளிவான உச்சரிப்புடன் பேசினார். ஆனால், கூட்டம் அதை ரசிக்கவில்லை. அவர்களின் முகம் வெளிறி காணப்பட்டது.

😄 இதை கவனித்த சாப்ளின், உடனே வசனத்தில் காமெடியை கலந்து மீண்டும் மீண்டும் பேசினார். அப்போதும் மக்கள் கூட்டம் சோகமாகவே நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த சாப்ளின், அதன் நிர்வாகியிடம் சென்று, யார் இவர்கள்? மனிதர்களா? மிருகமா? எந்த ஒரு உணர்வுமே இல்லாமல் இருக்கிறார்களே? என கேட்டார். அதற்கு அந்த நிர்வாகி, நீ நினைப்பது தவறு. அவர்களில் பல பேருக்கு இங்கிலீஷ; தெரியாது. அதனால் நீ பேசும் வசனங்கள் அவர்களுக்கு புரிய வாய்ப்பில்லை என்றார்.

😄 இதை கேட்ட பிறகு சாப்ளின் அதிர்ந்தாலும், அப்போதுதான் ஒரு புதிய முயற்சியில் இறங்கினார். BODY LANGUAGE என்று சொல்லும் பாணியை கடைபிடித்தார். வெறும் உடல் அசைவுகள், முக பாவனைகளை கொண்டு நடிக்க ஆரம்பித்தார். சோர்ந்து பார்த்து கொண்டிருந்த கூட்டம் முகமலர்ந்து கைகளை தட்டி ஆர்ப்பரித்தது. 17 வயதில் நடந்த அந்த நிகழ்வுதான் சாப்ளினை உலகம் முழுவதும் கொண்டு போய் சேர்க்க காரணமாக இருந்தது!

கலைஞன் :

😄 வறுமையும், ஏழ்மையும் ஒருசேர பின்னிப்பிணைந்து வளர்ந்த சாப்ளின் மெல்ல மெல்ல சம்பளம் வாங்கி நடக்கக்கூடிய கலைஞனாக உருவெடுத்தார். ஆனால், ஆரம்பக்கட்ட படங்கள் எல்லாமே தோல்வியை தழுவியது. அதனால் சாப்ளினை வைத்து படமெடுக்க யோசித்தனர் தயாரிப்பாளர்கள்.

😄 ஆனால், தயாரிப்பாளர் மாக் செனட் (Mack Sennett) சாப்ளினின் திறமையை கவனித்து அவரது நிறுவனமான கீஸ்டோன் திரைப்பட நிறுவனத்தில் (Keystone Film Company) சேர்த்துக் கொண்டார்.

😄 முதலில் சாப்ளினுக்கு கீஸ்டோன் நடிப்பு முறைக்கு தன்னை மாற்றிக் கொள்வது சற்று கடினமாக இருந்தது. ஆனால், மிக விரைவில் தன்னை பழக்கி கொண்டு கீஸ்டோனின் சிறந்த கலைஞராக வளர்ந்தார். அதிலும் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்த சார்லி சாப்ளின், மக்கள் மனதில் வேகமாக இடம்பிடித்து தனக்கென ஒரு பாணியினை உருவாக்கினார்.

சார்லி சாப்ளினின் புதிய பாணி :

😄 சார்லி சாப்ளினின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது அவர் தனக்கென்று உருவாக்கி கொண்ட நாடோடி வேடமும், நிறுவனத்தில் இவருக்கு இயக்கவும், புது படைப்புகள் படைக்கவும் கொடுக்கப்பட்ட உரிமையும் ஆகும்.

ஷூ - மீசை :

😄 தன்னுடைய சக கலைஞர்களின் உதவியால் குண்டாக இருந்தவரின் PANT-டையும், சிறிய சட்டையையும், காலுக்கு பொருந்தாத பெரிய ஷ_க்களையும், தொப்பியையும் வைத்து ஒத்திகை பார்த்தார். அந்த பெரிய ஷ_க்கள் அவர் காலை விட்டு விலகி போக, அதை கால்களில் மாற்றி போட்டார்.

😄 கையில் பிரம்புத்தடி ஒன்றை எடுத்து கொண்டு தன்னுடைய தோற்றத்தை கண்ணாடியில் பார்த்த சாப்ளின் தான் மிகவும் சிறியவனாக தெரிவது போல உணர்ந்து ஒரு மீசையை வரைந்தார். ஆனால், அந்த மீசை அவரது முக அசைவுகளை மறைத்தது. அதனால் சிறியதாக ஒரு மீசையை வெட்டி ஒட்டிக் கொண்டார்.

சிரிப்பு :

😄 ஒருவழியாக உடை, முக அலங்காரம் எல்லாம் முடிந்து நடக்க முடியாமல் நடந்து வந்தார் சாப்ளின். அப்போது குழுவில் இருந்தவர்கள் அதிசயமாக சாப்ளினை பார்த்தனர். கால்கள் இரண்டையும் அகலப்படுத்தி நடந்து வந்த சாப்ளின் எதிர்பாராத விதமாக எதிரே வந்த ஒருவர் மீது மோதி கீழே விழுந்து எழ முடியாமல் எழுந்தார். இதை பார்த்த அங்கிருந்த மொத்த கலைஞர்களும் அடக்க முடியாமல் சிரித்தனர்.

😄 இதை பார்த்த சாப்ளினோ தலையில் இருந்த தொப்பியை கழட்டி, அசைத்து மன்னிப்பு கேட்டார். இதை பார்த்தும் குழுவினர் ரசித்தனர். இந்த பாணி, இந்த புதுமை, இந்த நவீனம், இந்த அசைவுகள், இந்த நடிப்பில் அந்த கீஸ்டோன் நிறுவனம் விழுந்தே விட்டது. தொடர்ந்து 35 படங்களில் சாப்ளினை நடிக்க வைத்தது.

😄 ஆரம்பத்தில் 150 டாலர்களை மட்டுமே ஊதியமாக பெற்றுவந்த நிலையில், தனது அபரிவிதமான வளர்ச்சியினால் 1917ஆம் ஆண்டுகளில் ஒரு மில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

😄 அதனை தொடர்ந்து தனது அனுபவங்களை பயன்படுத்தி 1919ஆம் ஆண்டு யுனைடெட் ஆர்ட்டிஸ்ட் எனும் கலையகத்தை ஆரம்பித்தார். இந்நிலையில் திரையுலகில் கதை வசனமின்றி, தனது உடல் அசைவினாலும், தன்னிகரற்ற நடிப்பினாலும் நகைச்சுவைகளை வெளிப்படுத்தி அதன்மூலம் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு கலைஞராக சார்லி சாப்ளின் வளர்ந்தார்.

😄 1927ஆம் ஆண்டில் ஓசையுடன் கூடிய திரைப்படங்கள் வெளிவரத் துவங்கி மிகவும் பரவலானாலும், 1930ஆம் ஆண்டு வரை சாப்ளின் பேசும் படங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி கதாசிரியர், இயக்குநர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமையாளராக திகழ்ந்தார் சாப்ளின்.

😄 1952ஆம் ஆண்டில் வெளிவந்த லைம்லைட் திரைப்படத்தில் தயாரிப்பு, இயக்கம், நடன அமைப்பையும், 1928ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் "தி சர்க்கஸ்" படத்தின் தயாரிப்பு, இயக்கத்தையும் இவரே செய்தார். இவர் இசையமைத்த பாடல்களில் பெரும் புகழ் பெற்றது ஸ்மைல் ஆகும்.

சார்லி சாப்ளினின் திருமண வாழ்க்கை :

😄 சார்லி சாப்ளின் திரைப்படங்கள் மூலம் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருந்தாலும், இவரது வாழ்க்கை சற்று கடினமான வாழ்க்கையாகவே அமைந்தது. இவரது திருமணங்கள் அனைத்தும் விவாகரத்திலேயே சென்று முடிந்தது. மேலும், இவரது திரையுலக வெற்றிகள் மூலமாக இவருக்கு கிடைத்த புகழ் பலமுறை அவரது தனிப்பட்ட வாழ்வினால் பெரிதும் பாதிக்கப்பட்டது.

சார்லி சாப்ளின் - மில்ட்ரெட் ஹாரிஸ் (Mildred Harris) :

😄 16 வயதான மில்ட்ரெட் ஹாரிஸ் (Mildred Harris) 1918ஆம் ஆண்டில் சார்லி சாப்ளினை லாஸ் ஏஞ்சல்ஸில் தனிப்பட்ட முறையில் திருமணம் செய்து கொண்டார்.

😄 1919ல் இத்தம்பதியருக்கு பிறந்த குழந்தை, பிறந்த மூன்று நாட்களில் இறந்தது. அதன்பின் 1920ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்று கொண்டனர்.

சார்லி சாப்ளின் - லிதா கிரே (Lita Grey) :

😄 லிதா கிரே (Lita Grey), சார்லி சாப்ளினை தனது எட்டு வயதில் ஒரு ஹாலிவுட் கபேவில் முதன்முதலில் சந்தித்தார். தனது 12வது வயதில் "flirting angel" in The Kid முனை என்ற திரைப்படத்தில் சார்லி சாப்ளினுடன் பணியாற்றினார். அதன்பின் 15வது வயதில் தி கோல்ட் ரஷ் படத்திற்காக அழகி தேர்வு நடைபெறுவதை அறிந்து சார்லி சாப்ளினை மீண்டும் சந்தித்தார்.

😄 லிதா கிரே மீது காதல் கொண்ட சார்லி சாப்ளின் 1924ஆம் ஆண்டு இவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சார்லஸ் சாப்ளின் ஜூனியர் மற்றும் சிட்னி சாப்ளின் என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர்.

😄 இவர்களது திருமண வாழ்க்கை ஆரம்பத்திலிருந்தே பிரச்சனையாக இருந்தது. அதன்பின் 1927ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று கொண்டனர்.

சார்லி சாப்ளின் - பாலேட் கொடார்டு (Paulette Goddard) :

😄 சார்லி சாப்ளின் பாலேட் கொடார்டு (Paulette Goddard) என்பவரை 1936ஆம் ஆண்டு ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

😄 சில வருடங்கள் மகிழ்ச்சியாக சென்ற திருமண வாழ்க்கை விவாகரத்தில் முறிந்தது.

சார்லி சாப்ளின் - ஓ நீல் (O"Neill) :

😄 1942ஆம் ஆண்டில், அடுத்த படத்திற்காக முன்னணி நடிகையை தேடி கொண்டிருக்கும் சமயத்தில் வாலஸ் என்பவர் ஓ நீல்லை (O"Neill) சார்லி சாப்ளினுக்கு அறிமுகப்படுத்தினார்.

😄 இந்த சந்திப்பிற்கு பிறகு இருவரும் காதல் வாழ்க்கையில் இணைந்தனர். அதன்பின் 1943ஆம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவ்விருவருக்கும் எட்டு குழந்தைகள் பிறந்தனர்.

😄 ஜெரால்டின் லே (Geraldine Leigh)

😄 மைக்கேல் ஜான் (Michael John)

😄 ஜோசபின் ஹன்னா (Josephine Hannah)

😄 விக்டோரியா (Victoria)

😄 யூஜின் அந்தோணி (Eugene Anthony)

😄 ஜேன் சிசில் (Jane Cecil)

😄 அன்னெட் எமிலி (Annette Emily)

😄 கிறிஸ்டோபர் ஜேம்ஸ் (Christopher James)

😄 இத்திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் பல வருடங்கள் நீடித்தது. சீரான திருமண வாழ்க்கை சாப்ளின் மேற்கொண்டாலும் அவர் மீது எழுந்த ஒவ்வொரு கசப்பான அனுபவங்களும் அவரை மேலும் பாதித்தது.

காந்திஜி :

😄 தனது அயராத உழைப்பினாலும், மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் முயற்சியினாலும் காமிக்ஸ் கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்ட முதல் நடிகர் என்ற பெயர் பெற்றார் சார்லி சாப்ளின். மேலும், இவர் உலக திரைப்படங்களின் மூலமும் ஈர்க்கப்பட்டார்.

😄 வெறும் காமெடி மட்டுமல்லாமல் தன்னுடைய படங்களில் சோஷலிஸ கருத்துக்களையும் சொல்ல வேண்டும் என்று சாப்ளினுக்கு ஒரு எண்ணம் வந்தது. அதன் பாதிப்புதான் 1931-ல் வெளிவந்த CITY LIGHTS.

😄 வட்டமேசை மாநாட்டிற்காக லண்டன் வந்த மகாத்மா காந்தியின் பாராட்டை பெற்றார் சார்லி சாப்ளின். சினிமா உங்களுக்கு கிடைத்த சரியான ஆயுதம் என்று கூறினார் மகாத்மா காந்தி.

😄 காந்தியுடனான அந்த சந்திப்பை தன்னால் வாழ்நாளில் மறக்கவே முடியாது என்றார் சார்லி சாப்ளின். சுதந்திர போராட்டம் இந்தியாவில் உச்சத்தில் இருந்தபோது, தனது பகிரங்கமான ஆதரவை காந்திக்கு தெரிவித்தார் சாப்ளின்!!

விமர்சனங்கள் :

😄 சார்லி சாப்ளின் புகழின் உச்சிக்கு செல்ல செல்ல, விமர்சனங்கள் தலை தூக்கின. ஆனால், அதை அனைத்தையும் தன் திறமையால் மட்டுமே தூக்கி எறிந்தார் சாப்ளின்.

CITY LIGHTS:

😄 சார்லி சாப்ளின் CITY LIGHTS படத்தில் நடித்து கொண்டிருந்தபோதே உலகம் முழுக்க பேசும் படங்கள் வந்துவிட்டன. அப்போதும்கூட சினிமாவிற்கு மொழி தேவையில்லை, வெறும் இசையே போதும் என கூறினார்.

😄 பேசும் படம் வெளியாகிறது என்று விளம்பரங்கள் வெளிவந்தபோது, பின்னணி இசையுடன் ஊஐவுலு டுஐபுர்வுளு வெளிவருகிறது என்று துணிந்து விளம்படுத்தினார்.

பேசும் படம் :

😄 வசனங்கள் இல்லாமல் ஏழைகளின் உணர்வுகளை, முதலாளிகளின் ஆதிக்கத்தை மறைமுகமாகவும், நகைச்சுவையாகவும் வெளிப்படுத்திய சார்லி சாப்ளின், முதன்முறையாக பேசும் படத்தை எடுக்க முடிவு செய்தார்.

😄 1940ஆம் ஆண்டு, சார்லி சாப்ளின் தனது முதல் பேசும் படமான "தி கிரேட் டிக்டேடர்" (The Great Dictator)-ஐ ரிலீஸ் செய்தார். சர்வாதிகாரியாக செயல்பட்டு கொண்டிருந்த ஹிட்லரின் நடவடிக்கைகளை விமர்சித்து அப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

😄 "உலகம் ஒரு சர்வாதிகாரியின் கையில் சிக்கினால் மக்களின் நிலை என்னவாகும்?" என்பதே அப்படத்தின் கருவாக இருந்தது. உலகமே அஞ்சி நடுங்கி கொண்டிருந்த ஒரு மனிதனை பற்றி எவ்வித தயக்கமோ, பயமோ இல்லாமல் தைரியமாக விமர்சித்திருந்தார் சாப்ளின்.

😄 சாப்ளின் அடுத்தடுத்த படங்களிலும் தனது எதிர்ப்பை பகிரங்கமாக காட்டிவந்தார். இதனை தவறாக புரிந்து கொண்ட அமெரிக்க அரசும், அமெரிக்க மக்களும் சாப்ளின் கம்யூனிஸ்ட்களுக்கு ஆதரவாளர் என குற்றம் சாட்டப்பட்டு வழக்குகளை சந்தித்தார். மக்களுக்கு எதிரான பிரஜை போல சாப்ளினை சித்தரிக்க ஆரம்பித்தனர். இதனால் சாப்ளின் நிலை குலைந்து குழப்பம் அடைந்தார்.

😄 அமெரிக்காவில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் வெடித்தன. சாப்ளினின் படம் வெளியிட தடை செய்யப்பட்டன. உண்மையிலேயே அமெரிக்க மக்களை உளமாற நேசித்த சாப்ளின் அப்போது சூழ்நிலை கைதியானார்.

😄 ஆரம்பம் முதலே சாப்ளின் அமெரிக்காவில் குடியுரிமை இல்லாமல்தான் வாழ்ந்து கொண்டிருந்தார். இந்த சமயத்தில் 1952ஆம் ஆண்டு சாப்ளின் தனது "லைம் லைட்" படத்தின் வெளியீட்டுக்காக லண்டன் புறப்பட்டார். உடனே அமெரிக்க அரசு, சாப்ளினுக்கு ஒரு தந்தி அனுப்பியது.

தந்தியில் குறிப்பிடப்பட்ட செய்தி :

😄 "சாப்ளின்! இந்த நிமிடத்திலிருந்து நீங்கள் நாடு கடத்தப்பட்டுள்ளீர்கள். உங்கள் சொத்து பறிமுதல் செய்யப்படுகிறது. மீண்டும் நீங்கள் அமெரிக்காவில் காலடி எடுத்து வைத்தால், கைது செய்யப்படுவீர்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

😄 அமெரிக்க அரசாங்கத்தை எண்ணி வேதனைபட்டு கொண்டே லண்டன் சென்றடைந்தார். அதன்பிறகு தனது மனைவி மற்றும் எட்டு குழந்தைகளுடன் சுவிட்சர்லாந்திற்கு குடிப்பெயர்ந்தார் சாப்ளின். அங்கிருந்தபடியே மேலும் இரு படங்களை இயக்கினார். வருடங்கள் செல்ல செல்ல அமெரிக்க அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டது.

ஆஸ்கர் விருது :

😄 20 வருடங்கள் கழித்து ஆஸ்கர் விருதை வழங்க அமெரிக்கா அழைத்தபோது, அவமானப்படுத்திய நாட்டுக்கு போக வேண்டாம் என்று சிலர் சொல்லியும் பழைய நினைவுகளையெல்லாம் மறந்து அமெரிக்கா சென்றார் சாப்ளின்.

உற்சாக வரவேற்பு :

😄 அமெரிக்கா வந்து இறங்கிய சாப்ளினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. திரையுலகின் ஒப்பற்ற மேதையாகவும், திரைப்படத்துறையின் கதை, திரைக்கதை, இசை, இயக்கம் என சகல துறைகளிலும், நிகரற்ற கலைஞனாக தனது பங்களிப்பை தந்தமைக்காக சாப்ளினுக்கு 1972ஆம் ஆண்டு "கலையுலக வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கி பெருமைப்படுத்தியது. இச்செய்தி வாசிக்கப்பட்டபோது அரங்கம் அதிர 10 நிமிடத்திற்கும் மேலாக கைகள் தட்டப்பட்டு கொண்டே இருந்தன.

சார்லி சாப்ளினின் மறைவு :

😄 சார்லி சாப்ளின், 1977ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதியன்று கிறிஸ்துமஸ் நாளில் தனது 88வது வயதில் காலமானார். அதுவரை சார்லி சாப்ளினை பார்த்து சிரிக்க மட்டுமே செய்த உலகம் அன்று அவரை பார்த்து முதன்முறையாக அழுதது. அவரது உடல் வார்ட் நகரிலுள்ள கார்சியர்-சுர்-வேவே கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

😄 சாப்ளினின் நினைவாக வேவேவில் அவரது சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சாப்ளினின் மறைவுக்கு பின்னர் அவரை கௌரவிக்கும் வகையில், அவரது தீவிர ரசிகையான உக்ரைன் நாட்டு விண்வெளி வீராங்கனையான லியூட்மீலா கரச்கினா, ஒரு எரிகல்லுக்கு 3623 சாப்ளின் எனப் பெயர் சூட்டியது குறிப்பிடத்தக்கது.

சார்லி சாப்ளின் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் :

😄 சார்லி சாப்ளினுடைய கண்களின் நிறம் நீல நிறமாக இருந்தது. இவர் கருப்பு, வெள்ளை படங்களில் மட்டுமே நடித்திருந்ததால் இது யாருக்கும் தெரியாத விஷயமாக இருந்துவிட்டது.

😄 சாப்ளினின் புகழினால் சாப்ளினை போல் தோற்றம் அளிப்போருக்கான போட்டிகள் பலவற்றை நடத்தினார்கள். ஒருமுறை அப்போட்டி ஒன்றில் சாப்ளின் ரகசியமாக பங்கு பெற்றார். இதில் இவரால் மூன்றாம் பரிசையே வெல்ல முடிந்தது.

😄 1985ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு, இவரது உருவப்படத்தை அஞ்சல் தலை ஒன்றில் வெளியிட்டு பெருமை சேர்த்தது.

😄 1994ஆம் ஆண்டு அல் ஹிர்ஸ்ஃபெல்ட் வடிவமைத்த அமெரிக்க அஞ்சல் தலை ஒன்றிலும் இடம் பெற்றார்.

😄 1992ஆம் ஆண்டு இவரது வாழ்க்கை "சாப்ளின்" என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டது.

😄 2005ஆம் ஆண்டு நடைபெற்ற நகைச்சுவையாளர்களின் நகைச்சுவையாளர் எனும் கருத்துக்கணிப்பில் உலகத்தின் தலைசிறந்த 20 நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக சாப்ளின் தேர்வு செய்யப்பட்டார்.

😄 1975ஆம் ஆண்டு பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் அரசி சாப்ளினுக்கு "சர்" பட்டம் அளித்தார்.

😄 உலகம் போற்றும் நகைச்சுவை நாயகன்...

😄 தன் மீசையை நகைச்சுவையாக காட்டி அனைவரையும் சிரிக்க வைத்தவர்...

😄 துன்பத்தை மறைத்து சிரிப்பால் உலகத்தை வலம் வந்தவர்...

😄 தன் கண்ணீரை மறைத்து உலகிற்கு புன்னகையை பரிசாக அளித்தவர்...

😄 மௌனத்தின் மொழி மிகச்சிறந்தது என்பதை சார்லி சாப்ளினை தவிர வேறு யாரால் இனி உணர்த்திவிட முடியும்?!

சார்லி சாப்ளின் உதிர்த்த பொன்மொழிகள் :

😄 உலக பணக்காரர்களின் வரிசையில் நானிருந்தாலும், என்னால் ஏழையாகத்தான் சிந்திக்க முடிகிறது. பணம் இடையில் வந்தது. ஆனால், ஏழ்மை என் ரத்தத்தில் ஊறியது.

😄 மழையில் நனைந்து கொண்டு செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம், அப்போதுதான் நான் அழுவது மற்றவர்களுக்கு தெரியாது.

😄 நிலைக்கண்ணாடி போன்ற நல்ல நண்பன் எனக்கு வேறு யாரும் கிடையாது. ஏனென்றால் நான் அழும்போது அதற்கு சிரிக்க தெரியாது.

😄 உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு யாரையும் வேதனைப்பட வைக்கக்கூடாது.

😄 வாழ்க்கை வெகுதொலைவில் இருந்து பார்க்கும்போது மகிழ்ச்சிகரமானதுதான். அருகிலிருந்து பார்க்கும்போதுதான் அதில் உள்ள சோகத்தை நம்மால் கவனிக்க முடியும்.

😄 இந்த உலகில் எதுவுமே நிரந்தரமானதல்ல, நமக்கு வரும் துன்பங்கள் உட்பட.

😄 உன் மனம் வலிக்கும்போது சிரி, பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை.

😄 போலிக்குத்தான் பரிசும், பாராட்டும்... உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே...!

😄 ஆசைப்படுவதை மறந்து விடு, ஆனால் ஆசைப்பட்டதை மறந்து விடாதே...!

😄 நான் புரட்சியாளன் அல்ல, ஆனால் மக்களை ஆனந்தப்படுத்துகிற கலைஞன்.

😄 என் பிரச்சனைகளை என் உதடுகள் அறிவதே இல்லை. அவை என்றும் சிரித்துக்கொண்டே இருக்கும்.

😄 நகைச்சுவை என்பது தனக்காக மட்டுமில்லாமல் பிறருக்காகவும் இருக்க வேண்டும்.

😄 வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் வந்தாலும் சரி எளிதாக எடுத்துக்கொள். அப்பொழுதுதான் வெற்றியடைய முடியும்.

😄 பணம் பணம் என்று மனிதர்கள் உலகத்தில் ஓடி உழைக்கிறார்கள். ஆனால் நிம்மதியை தொலைத்து விடுகிறார்கள்.

😄 அறிவுக்கூர்மையை விட நமக்கு அதிகம் தேவை இரக்க உணர்வும், கண்ணியமுமே...

😄 நாம் மிக அதிக அளவு சிந்திக்கிறோம். ஆனால் மிக மிக குறைவான அளவுக்கே அக்கறை கொள்கிறோம்.

😄 வாழ்க்கை அழகானதும், அற்புதமானதும் கூட ஜெல்லி மீன் போல..

😄 நீ எப்போதும் வானவில்லை காண முடியாது உன் பார்வை கீழ் நோக்கியே இருந்தால்.

😄 ஒரு மனிதனின் உண்மையான சொரூபம்; அவன் குடித்திருக்கும்போது தெரிய வரும்.

😄 மதிப்புடைய வாழ்க்கையை தேடி கண்டுபிடிக்கலாம்... உன் புன்சிரிப்பால்.