சாமுவேல் மோர்ஸ்

சாமுவேல் மோர்ஸ்

bookmark

சாமுவெல் ஃபின்லே பிரீஸ் மோர்ஸ் ஒற்றைக்-கம்பி தந்தி முறை மற்றும் மோர்ஸ் தந்திக் குறிப்பு ஆகியவற்றைக் கண்டுபிடித்த அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும் வரலாற்றுக் காட்சிகளை வரையும் ஓவியரும் ஆவார்.

சாமுவெல் மோர்ஸ் மாஸ்ஸாசுசெட்ஸில் அமைந்துள்ள சார்லஸ்நகரத்தில் புவியியலாளர் மற்றும் போதகரன ஜேடிடியா மோர்ஸ் மற்றும் எலிசபத் ஆன் ஃபின்லே பிரீஸ் ஆகியோருக்கு முதல் குழந்தையாகப் பிறந்தார். ஜேடிடியா கால்வினச நம்பிக்கையில் சிறந்த போதகராகவும், அமெரிக்க கூட்டிணைப்புக் கட்சியின் ஆதரவாளராகவும் இருந்தார். மாஸ்ஸாசுசெட்ஸின் ஆண்டோவரில் உள்ள பிலிப்ஸ் அகாடெமியில் கல்வி பயின்ற பிறகு யேல் கல்லூரியில் சமய தத்துவம், கணிதம் மற்றும் குதிரைகளைப் பற்றிய அறிவியல் போன்ற பாடங்களை சாமுவெல் மோர்ஸ் பயின்றார். யேலில் பயின்ற போது அவர் பெஞ்சமின் சிலிமன் மற்றும் ஜெரிமியா டே ஆகியோரின் மின்சாரம் தொடர்பான விரிவுரையைக் கேட்டார். அவர் ஓவியம் வரைந்து பணம் சம்பாதித்தார். 1810 ஆம் ஆண்டில் அவர் பட்டம் பெற்றார்.

லாண்டிங் ஆஃப் பில்கிரிம்ஸ் ஓவியத்தில் எளிமையான உடைகள் அத்துடன் மிக்க எளிமை வாய்ந்த முகத்தின் தனிச்சிறப்புக்களை வரைந்ததன் வழியாக சாமுவேல் மோர்ஸின் கால்வினச நம்பிக்கைகள் வெளிப்பட்டிருக்கின்றன. சாமுவெல் எஃப். பி. மோர்ஸ் தனது ஓவியத் திறனை மேம்படுத்துவதற்காக 1830–1832 ஆகிய மூன்று ஆண்டுகள் இத்தாலி, சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்தார். அதன் பயனாக அவர் லௌவ்ரேவின் பிரபலமான 38 ஓவியங்களின் சிறுவடிவமைப்பு நகல்களை வைத்து (6 ft. x 9 ft) அளவுள்ள ஓவியம் வரையும் துணியில் “த கேலரி ஆப் லெளவ்ரே” என்ற பெயரிடப்பட்ட ஓவியங்களை வரையத் தொடங்கினார்.

1825 ஆம் ஆண்டில் வாஷிங்டனில் கில்பர்ட் டு மோட்டியர், மார்க்விஸ் டெ லஃபாயெட்டெ படத்துக்காக நியூயார்க் நகராட்சி சாமுவேல் மோர்ஸுக்கு $1,000 வழங்கியது. ஓவியம் வரைந்து வந்த இடைப்பட்ட காலத்தில் குதிரையில் செய்தி கொண்டு வருபவன் ஒருவன் சாமுவேல் மோர்ஸின் தந்தை அனுப்பிய ஒரு கடிதத்தை அவரிடம் ஒப்படைத்தான். அதில் ஒரு வரியில் "உன் மனைவி இறந்துவிட்டாள்" என்று மட்டும் குறிப்பிட்டிருந்தது. சாமுவேல் மோர்ஸ் உடனடியாக லஃபாயெட்டெவின் படத்தை வரைவதை நிறைவு செய்யாமலேயே நியூஹாவனில் உள்ள அவரது இல்லத்திற்கு செல்வதற்காக வாஷிங்டனை விட்டு வெளியேறினார். ஆனால் அவர் சென்று சேர்ந்த நேரத்திற்கு முன்னரே அவரது மனைவியின் உடல் புதைக்கப்பட்டிருந்தது. நெடுநாட்களாக அவரது மனைவி உடல்நலக்குறைவாக இருந்தது அவருக்குத் தெரியாமல் போனது மற்றும் அவரது தனிமையான மரணம் போன்றவை சாமுவேல் மோர்ஸின் இதயத்தை நொறுக்கியது. அதனால் அவர் ஓவியம் வரைவதிலுருந்து விலகி நெடுந்தொலைவுத் தொடர்புகளைத் துரிதப்படுத்துவதற்கான வழிதேடும் முயற்சியில் இறங்கினார்.

மின்சாரத்தின் உதவியால் செய்திகளை உடனடியாக அனுப்பக் கூடிய கருவிகளை மோர்ஸ் உருவாக்கினார். அதன் வெளிப்பாடாக தந்தி அனுப்பும் முறையில் தீவிரமாக ஈடுபட்டார், அதன் விளைவாக " மோர்ஸ் கோடு" என்னும் தந்தி முறையைக் கண்டு பிடித்தார். மோர்ஸ் அவருடைய உறவினர் " ஆல்பிரட் வெயில்" என்பவருடன் சேர்ந்து ஆங்கில எழுத்துக்களுக்கும், எண்களுக்கும் " புள்ளி" மற்றும் "கோடு" போன்ற குறியீடுகள் கொடுத்து அதன் மூலம் தந்தி அனுப்பும் சங்கேத முறையை அமைத்தார். 1838 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் நாள் மோர்ஸ் தந்தி அனுப்பும் முறையை செய்து காட்டினார். சில வருடங்களுக்குப் பிறகு தனது கண்டுபிடிப்புக்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றார்.

1843 ஆம் வருடம் அமெரிக்க நாடாளுமன்றம் முதல் தந்திக் கம்பியை அமைக்க நிதி வழங்கியது. அமெரிக்க தந்தி நிறுவனக் கண்காணிப்பாளராக அமர்த்தப்பட்டார் மோர்ஸ் . ஜனநாயகக் கட்சி மாநாட்டின் செய்திகள் தந்தி மூலம் வாஷிங்டன்னுக்கு அனுப்பிய பின்பு தான் தந்தியின் பயனையும் அதன் முக்கியத்துவத்தையும் மக்கள் புரிந்து கொண்டார்கள். மறுபுறம் தந்தி அமைப்பதில் அரசாங்கம் முழுமையாக ஆர்வத்தைக் காட்டவில்லை. சில தனியார் நிறுவனங்கள் மட்டும் தந்தி வியாபாரத்தை தொடங்கின.

இங்கிலாந்தையும், அமெரிக்காவையும் தந்திக் கம்பி மூலம் இணைக்க மோர்ஸ் முயற்சி செய்தார். ஆனால், அது வெற்றி பெறவில்லை. எனினும் 1866 ஆம் ஆண்டில் அட்லாண்டிக் கடலில் தந்திக் கம்பியை அமைத்து வெற்றி கண்டார். இவ்வாறாக செய்தித் தொடர்புத் துறையில் தனக்கென ஓர் இடம் பிடித்து சாதனை புரிந்த மோர்ஸ் 1872 ஏப்ரல் 2 அன்று தனது நியூயார்க் நகர இல்லத்தில், 80 ஆவது வயதில் இறந்தார். அவர் இறக்கையில் 81 ஆவது பிறந்தநாளுக்கு 25 நாட்களே இருந்தது. அவரது உடல் நியூயார்க்கின் புரூக்லின் நகரத்தில் உள்ள கிரீன்-உட் கல்லறையில் புதைக்கப்பட்டது.