கே. ஏ. தங்கவேலு
இவரின் வாழ்க்கைக் குறிப்பு:
பத்து வயதுமுதல் நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய தங்கவேலு 20 வயதில் ‘யதார்த்தம்’ பொன்னுசாமி நாடகக் குழுவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக மாறினார். அப்போது கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் புதிதாகத் தொடங்கிய தனது நாடகக் குழுவுக்குத் தன் நண்பரான தங்கவேலுவை இழுத்துக்கொண்டார்.
என்.எஸ்.கிருஷ்ணனும் தங்கவேலுவும் கந்தசாமி முதலியாரின் நாடகக் குழுவில் அண்ணன் தம்பியாகப் பழகியவர்கள். கந்தசாமி முதலியாரின் ‘பதிபக்தி’ நாடகம்தான் பின்னாளில் ‘சதி லீலாவதி(1936)’ என்ற படமாகத் தயாரிக்கப்பட்டது. அதில்தான் அறிமுகமானார் தங்கவேலு. சொந்த நாடகக் குழுவைத் தொடங்கி, பல நாடகங்களை நடத்திய தங்கவேலு சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் போனதும் 1994-வரை தொடர்ந்து நாடகங்களில் நடித்திருக்கிறார். தங்கவேலு 20 வயதில் மிகவும் ஒல்லியாக இருப்பார். அதனால் தனக்கு வசதியாக இருக்குமென்று கருதி வயதான வேடங்களையே ஏற்று நடித்தார். பணம், திரும்பிப்பார், இல்லற ஜோதி, சுகம் எங்கே உள்படப் பல படங்களில் 60 வயது வேடங்களில் நடித்தார்.
‘சிங்காரி’ என்ற படத்தில் டணால்... டணால்... என்று அடிக்கடி வசனம் பேசியதால் தங்கவேலுவின் பெயர் முன்னால் டணால் என்ற வார்த்தை ஒட்டிக்கொண்டது. கலைவாணர், எம்.கே.தியாகராஜ பாகவதர் தொடங்கி எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் வரை சுமார் 1,000 படங்களில் நடித்திருக்கிறார். நகைச்சுவை ஜோடிகளில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மதுரம் ஜோடிக்குப் பிறகு தங்கவேலு - எம்.சரோஜா ஜோடி சுமார் 50 படங்களில் இணைந்து நடித்துப் புகழ்பெற்றபின் காதல் திருமணம் செய்துகொண்டனர்.
மறைவு:
கடந்த 28- 09- 1994-ம் ஆண்டு தமது 77-வது வயதில் மறைந்த தங்கவேலு தி.மு.கவின் தீவிர உறுப்பினராக இருந்தார். அவர் மறைந்தபோது தி.மு.கவின் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன.
