கும்பினியார் கொள்ளி வைத்தார்

bookmark

தென் பாண்டி நாட்டில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பின்னர் மக்களிடம் இருந்த ஆயுதங்களை ஆங்கிலேயர் பறிமுதல் செய்தனர், ஆயினும் வெள்ளையரால் தங்கள் உரிமைகள் பறிபோவதை உணர்ந்த மறவர் சாதித் தலைவர்கள், ஆயுதங்களை மறைத்து வைத்துக் கொண்டு கூட்டம் கூட்டமாக, அவர்களை எதிர்த்தனர். இச்சிறு கூட்டங்கள் கொடூரமாக அடக்கப்பட்டன. கலகக் கூட்டங்களைச் சேர்ந்தவர்களில் பலர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். அவர்களில் பலர் சிறைகளில் இறந்தனர். இறந்த செய்தி கேட்ட மனைவிமார் ஒப்பாரி கூறி அரற்றினர். அவ்வகை ஒப்பாரிகளில் மகன் கொள்ளி வைக்காமல்,கும்பினியார் கொள்ளி வைத்தார்கள் என்று வருந்தியும், பெருமையோடு மனைவி கூறுவாள். மனைவி பட்டணம்போய் அவனைப் பார்த்துத் திரும்பும்போது புதிய சேலை முழுதும் கண்ணீர் மழையால் நனைந்து போகுமாம். அடிக்கடி பார்க்கலாமென்றால் அவனிருக்கும் சிறையை தாழ்ப்பாள் போட்டு அடைத்துவிட்டார்களாம்.

மலையைக் கரியாக்கி
மாணிக்கச் சங்கூதி
சமுத்திரத்தில் நீர் மோந்து
குருவன் குழையடுக்கி
கும்பினியார் கொள்ளிவைக்க
கருங்கடல் நீந்தி
கர்னல் குடம் எடுத்து
தாமரை நூல் போட்டு
சமத்தன் தலை விரிச்சு
பிறந்தாரைப் பாக்கலியே
தேரூத்தாம் தண்ணியாம்
பெருங்குளத்து மாவிலையே-பிறந்த வாசலில
வேதனையா நின்னழுதோம்
செம்பு தூக்கி
செவந்தி மாலையிட்டு-தெருவில வாரயில
தேசத்தோடு நின்னழுதோம்
செகப்பு ரயிலேறி-நீ வாழ்ந்த
சீமைக்கே வந்தாலும்
சீலை எடுத்திருவ
சிறு நகையும் செய்திருவ-நான்
சீல எடுத்துக் கட்டி
சிறு நகையும் மேல் பூட்டி-நீ வாழ்ந்த
சீமைக்கே வந்தாலும்
சீமையிலே பேஞ்ச மழை
சீலையும் நனைஞ்சிருச்சே
சிறு நகையும் மங்கிருச்சே
பொன்னும் ரயிலேறி-நீ வாழ்ந்த
பூமிக்கே வந்தாலும்
புடவை எடுத்திருவ
பொன் நகையும் போட்டுருவ-நான்
புடவை மடிச்சுக்கட்டி
பொன் நகையும் மேல் பூட்டி-உன்னோட
சீமைக்கே வந்தாலும்
சீமையில் பேஞ்ச மழை
புடவையும் நனைஞ்சிருமே
பொன் நகையும் மங்கிருமே
பச்சுச ரயிலேறி நீ இருக்கும்
பட்டணமே வந்தாலும்
பட்டும் எடுத்திருவ
பரு நகையும் செஞ்சிருவ
பட்டு மடிச்சுடுத்தி
பரு நகையும் மேல் பூட்டி
பட்டணமும் வந்தாலும்
பட்டணத்தில் பேஞ்ச மழை
பட்டு நனைஞ்சிருமே
பரு நகையும் மங்கிடுமே
கல்லுகட்டி வில்ல மரம்
கைலாச தீர்த்துக் கரை
கண்டா வருவ மிண்ணு
கைத்தாப்பா போட்டடைச்சே
செங்கட்டி வில்ல மரம்
செவலோகத் தீர்த்தகரை
தெரிந்தா வருவோமின்னு
தெருத்தாப்பா போட்டடைச்சே

குறிப்பு: சிறையில் இறந்தவன் பிணத்தை கும்பினியார் காலத்தில் உறவினரிடம் கொடுக்காமல் தாங்களே எரித்து விடுவார்கள். மகன் பூணூல் போட்டு ஒற்றை வேட்டி கட்டி பிணத்தை குளிப்பாட்ட நீர் கொண்டு வருவான். அதையெல்லாம் ஒரு வெள்ளைப்பட்டாள அதிகாரியான கர்னல் செய்தானோ என்று மனைவி வினவுகிறாள்.

சிறையில் இறந்தவனுக்கு வீட்டுக் கருமாதி செய்து, ஒரு குருத்தோலையை இறந்தவனது அடையாளமாக வைத்து அழுது எரிப்பார்கள்.

அவன் சிறையிருந்த இடத்துக்ககு அடிக்கடி போக முடியாது.தாழ்ப்பாள் போட்டிருக்கும். இப்பொழுது விடுதலை பெற்று அவன் சென்றுள்ள கைலாசத்துக்குப் போய் அவனோடு இருக்கலாமென்றால், அங்கும் தாழ்ப்பாள் போட்டிருக்கிறது. அவளால் போக முடியாது.
-----------