கார்முகப் படலம் - 773

bookmark

773.    

‘அன்று முதல். இன்று அளவும்.
   ஆரும் இந்தச் சிலை அருகு
சென்றும் இலர்; போய் ஒளித்த
   தேர் வேந்தர் திரிந்தும் இலர்;
“என்றும்இனி மணமும்இலை”
   என்று இருந்தேம்; இவன் ஏற்றின்.
நன்று; மலர்க் குழல் சீதை
   நலம் பழுது ஆகாது’ என்றான்.
 
அன்று முதல் இன்றளவும்- அன்று முதல் இன்று வரை; ஆரும்-
எந்த   அரசனும்;  இந்தச்  சிலை  அருகு  -  இந்தச்  சிவவில்லின்
பக்கத்தில்; சென்றும்  இலர் - சென்றதும் இல்லை; போய் ஒளித்த -
ஓடி   ஒளிந்து  கொண்ட;  தேர்வேந்தர்  -  தேர்வீரரான மன்னவர்;
திரிந்தும் சிலர் - திரும்பி வரவுமில்லை; இனி- இனிமேல்; என்றும் -
(சீதைக்கு)  எப்பொழுதும்;  மணமும்  இல்லை - திருமணம் நிகழாது;
என்று  இருந்தேம் - என்று கருதியிருந்தோம்; இவன் ஏற்றின்- இந்த
இராமன்   (இச்சிவதனுசை)  நாணேற்றினால்;   நன்று  -  நல்லதாகும்;
மலர்க்குழல்   சீதை   -  (அப்போது)  மலரணிந்த  கூந்தலையுடைய
சீதையின்;  நலம்  - கன்னிமை அழகும்; பழுது ஆகாது - வீணாகாது;
என்றான் - என்று கூறி முடித்தான்.

இராமன்     வில்லை நாணேற்றி   வளைத்தால்  சீதை இடர்க்கடல்
நீங்கும் என்பது. முன்பு சனகன் கூறியதை  இப்பொழுது   சதானந்தனும்
கூறி முடித்தான்.                                            24