கார்முகப் படலம் - 768
768.
‘சித்திரம் இங்கு இது ஒப்பது
எங்கு உண்டு - செய்வினையால்
வித்தகமும் விதி வசமும்
வெவ்வேறே புறம் கிடப்ப.
அத் திருவை அமரர் குலம்
ஆதரித்தார் என. அறிஞ!
இத் திருவை நில வேந்தர்
எல்லாரும் கதாலித்தார்!
அறிஞ- யாவும் அழிந்தவனே; செய்வினையால் - (தாம்) செய்யும்
தொழிலைக் கொண்டு; வித்தகமும் - தம் (வில் வன்மை முதலிய
திறமையும்; விதி வசமும் - ஊழ்வினையின் பயனும்; வேறுவேறு புறம்
- வேறுவேறான இடத்திலே; கிடப்ப - பிரிந்து கிடந்த நிலையில்; அத்
திருவை - (திருப்பாற் கடலிலிருந்து தோன்றிய) அத்திருமகளை; குல
அமரர் - தேவர் கூட்டத்தார்; ஆதரித்தார் என - விரும்பியவாறே;
இத் திருவை - (எமக்குக் கிடைத்த) இந்தச் சீதையை; நில வேந்தர்
எல்லாரும் - நிலவுலகை ஆளும் அரசர் எல்லாரும்; காதலித்தார் -
விரும்பினர்; இது ஒப்பது - இச்செய்தியை ஒப்பதாகிய; சித்திரம் -
அதிசயம்; இங்கு - இவ் வுலகத்தில்; எங்கு உண்டு - எங்கே உள்ளது
(எங்கும் இல்லை).
செய்வினையால் வித்தகம்: சிவதனுசை வளைத்து நாணேற்றி அம்பு
எய்யக் கூடிய திறமை. ‘சிவ தனுசை வளைத்தவனுக்கே சீதை
உரியவள்’ என்ற விதி உள்ளது. தவிர. இவளைப் பெறக்கூடிய இராமன்
அவதரித்துள்ளான். இவ்வாறு இருக்கத் தம்மிடம் அவ்வகைத் திறமை
சற்றுமில்லாத மற்றை நிலவேந்தர்கள் இச் சீதையை விரும்பினார்களே!
இது என்ன அதிசயம்! 19
