கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் - 2

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் - 2

bookmark

என்.எஸ். கே தான் எடுத்த படத்தில் எம்.ஆர். ராதாவை வில்லனாகப் போடாமல் போய் விடவே, அவரைக் கொல்ல துப்பாக்கியை தயார் செய்து கொண்டு இருந்த விஷயம் தெரிந்து என்.எஸ். கே நேரிலே வந்து, " ராதா நீ எவ்வளவு பெரிய நடிகன் ;உன்னை நான் இப்படி நடி அப்படி நடி என அதட்டி வேலை வாங்க முடியுமா ? அதான் போடலை" என்றதும் அவரிடம் துப்பாக்கியை நீட்டி தன்னைச் சுடச் சொன்னாராம் ராதா.

சோதனையும், வேதனையும் இந்த உலகத்தில் யாரையும் விட்டு வைக்க வில்லை .என். எஸ்.கே மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?. அவருக்கும் ஒரு சோதனை காலம் வந்தது. இந்து நேசன்' பத்திரிகை ஆசிரியர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில், கலைவாணருக்கும் தியாகராஜ பாகவதருக்கும் மறைமுகத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகத்தின் பேரில் இருவரும் கைதானார்கள் லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் கலைவாணர் விடுவிக்கப்பட்டார். 'உங்க அப்பா எப்படி ரிலீஸ் ஆனார்னு தெரியுமா? கொலை நடந்து அன்று கோவையில் காருக்கு பெட்ரோல் போட்டதுக்கான ரசீது அவரிடம் இருந்தது. அதை வைத்துத்தான் அவர் விடுதலை ஆனார்!' – கலைவாணர் குடும்பத்தினரைப் பார்க்கும்போது எல்லாம் நீதிபதி கற்பகவிநாயகம் இப்படி சொல்லிச் சிரிப்பார்!. அந்த வழக்கில் இருந்து தான் வெளிவர, என். எஸ்.கே, தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பாதிக்கு மேலான சொத்துக்களை செலவு செய்ய வேண்டி இருந்தது. அவை யாவும் என். எஸ்.கே வாழ்க்கையில் மனம் நொந்து போன நாட்கள்.

பிற்பாடு சிறையில் இருந்து விடுதலையான என்.எஸ்.கே-வுக்கு நடந்த பாராட்டு விழாவில் தான் அவருக்கு 'கலைவாணர்' என்று பட்டம் சூட்டப்பட்டது. பட்டம் சூட்டியவர் பம்மல் கே. சம்பந்தம் முதலியார் ஆவார். சிறையில் இருந்து வெளிவந்த பிறகு தியாகராஜ பாகவதர் நடித்த 'ராஜமுக்தி' படத்தில் என்.எஸ்.கே. தம்பதியரின் நகைச்சுவை இல்லை. 'என்.எஸ்.கே-பாகவதர் ஜோடி பிரிந்துவிட்டதாக' பரபரப்பாக எழுதினார்கள். அப்போது நடைபெற்ற மதுரத்தின் தம்பி திருமணத்துக்கு வந்த பாகவதர், 'எங்களை யாரும் பிரிக்க முடியாது. எம்.என்றால் மதுரம், கே.என்றால் கிருஷ்ணன், டி.என்றால் தியாகராஜ பாகவதர். இதுதான் எம்.கே.டி.!' என்று சொல்லி உணர்ச்சிவசப்பட்டார்.

அவரது நடிப்பையும், நகைச்சுவை உணர்வையும் பார்த்த மக்கள் அவரைப் பல விதங்களிலும் பாராட்டினார்கள். ஆனால், என்.எஸ்.கே. எந்த சூழ்நிலையிலும் தன்னடக்கத்துடன் தான் இருந்துள்ளார். என்.எஸ்.கே. தன்டைக்கமாக சொல்லுவார், " சிலர் என்னை தமிழ்நாட்டு சார்லி சாப்ளின் என்று அழைக்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன், சார்லி சாப்ளினை ஆயிரம் துண்டுகள் ஆக்கினால் கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்'' என்று.

ஒரு முறை பத்திரிகை நண்பர்கள். " அதிசிய மனிதர் ஈ .வே.ரா வரிசையில் இப்போது கலைவாணர்" என்று எழுதிவிட இதைப் பற்றி சில நிருபர்கள் பெரியாரிடமே கேட்டும் விட்டார்கள். அதற்குப் பெரியார், " தனக்கே உரிய வகையில் நானும் சீர்திருத்த கருத்துக்களைச் சொல்கிறேன்; கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனும் சொல்றாரு. நான் சொல்லும் போது அழுகிய முட்டையும், நாற்காலியையும் வீசி எறிகிறார்கள் ஜனங்க, இதையே கலைவாணர் சொன்னா காசு கொடுத்துட்டுக் கை தட்டிட்டு போறாங்க. அந்த வகையில என்னை விட அவரு உசந்துட்டாரு."என்றாராம்.