கம்பு
கம்பு
கம்பானது பச்சை மற்றும் வெண்மை கலந்த ஒரு புன்செய் நில சிறுதானியப் பயிராகும்.
பொதுவாக ஆப்ரிக்கக் கண்டத்தில் இது தோன்றியதாகக் கருதப்படுகிறது. ஏறத்தாழ 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் கம்பு உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் கம்பு மனிதர்களுக்கு உணவாகவும், கால்நடைத் தீவனமாகவும், எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில், கம்பு 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது தெரியவருகிறது. கம்புப் பயிர் வறட்சியை தாங்கிக்கொண்டு வளரக்கூடியது.
அதிக தட்ப வெப்ப சூழலிலும், குறைவான ஊட்டமுள்ள நிலங்களிலும் கூட வளரும் தன்மை உடையது.
தமிழகத்தில் நெல், கோதுமை, சோளத்துக்கு அடுத்தபடியாக பயிரிடப்படும் உணவு பயிர் கம்பு ஆகும்.
உணவுத் தன்மையிலும் மற்ற தானியங்களை விட அதிகமான சத்துப் பொருள்களை பெற்றுள்ளது.
தற்காலத்தில் கம்பு உணவு அதிகம் சமைக்கப் படாததற்குக் காரணம், கம்பை உணவாக்குவதற்கு நிறைய வேலை செய்ய வேண்டியிருப்பதும், அதற்கு அதிக நேரம் தேவைப்படுவதும்தான்.
இக்குறைகளைப் போக்கி, எளிதாகக் கம்பு உணவினைத் தயாரிக்க, கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் உடனடி கம்புசாதக் கலவை ஒன்றை உருவாக்கி அதற்குக் காப்புரிமை பெற்றுள்ளது.
