கணிதமேதை ராமானுஜம் - 1

கணிதமேதை ராமானுஜம் - 1

bookmark

சீனிவாச இராமானுஜன் இந்தியாவில் பிறந்த கணித மேதை. இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914 ஆண்டுக்கும் 1918 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 3000 க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும் (number theory), செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் 1997 இல் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

சீனிவாசனுக்கும் கமலத்தம்மாளுக்கும் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 22 ஆம் நாள் ஈரோட்டில் பிறந்தவர் இராமானுசன். இவர் பெற்றோருக்கு இவருக்குப் பின்னர் மூன்று குழந்தைகள் பிறந்து ஓரிரு ஆண்டுகளிலேயே இறந்துபோயினர். இராமானுஜனின் தந்தையாரும் தந்தைவழிப் பாட்டனாரும் துணிக் கடைகளில் எழுத்தராகப் பணியாற்றி வந்தனர். தாய்வழிப் பாட்டனாரும் ஈரோட்டு முனிசீப்பு அறமன்றத்தில் அமீனாக வேலை பார்த்தவர். இவர் எளிய குடும்பத்தில், ஏழ்மையான நிலையில் தான் இருந்தார்.

ராமானுஜருக்கு ஐந்து வயது நிரம்பியதும் வைதீக முறைப்படி பூணூல் அணிவிக்கப்பட்டு ஆரம்ப பாடசாலையில் சேர்த்தனர்.பிறப்பிலேயே இராமானுஜர் மிகுந்த அறிவுத் திறன் கொண்டு விளங்கினார்.தனது தாயார் அன்புடன் சுட்டுக் கொடுக்கும் முறுக்கில் கூட எத்தனை வளையங்கள் உள்ளன என்று கணக்கிடுவாராம்.அது மட்டும் அல்ல, அம்மாவின் கையால் செய்து கொடுத்த தேன் குழலில் எத்தனை எள்ளு உள்ளது, என்று அதற்கு ஒரு சூத்திரத்தைப் பயன்படுத்தி கண்டு பிடித்து விடுவாராம்.

இவரை கணித மேதை என்று சொல்வதை விட கணித விஞ்ஞானி என்று சொல்லலாம். இராமானுஜத்துக்கு பெருமாளே கணக்கு சொல்லிக் கொடுத்தார் என்ற ஆதாராம் இல்லாத செவி வழி செய்தியும் ஒன்று உண்டு. இதற்கு அவரது சிறு வயதில் நடந்த ஒரு சம்பவத்தை சான்றாகக் கூறுகின்றனர். அது என்னவெனில்

ஒரு முறை சிறு வயதில் இராமனுஜத்தை சில நாழிகைகள் காணாமல் அவரது தாய் பதறிப் போனார்கள். ஊர் முழுக்கத் தேடினார்கள்.கிடைக்கவில்லை.இராமானுஜத்தின் நெருங்கிய நண்பனை அழைத்து தேட வேண்டினர்.இராமானுஜன் அடிக்கடி தனது வீட்டுக்கு சிறிது தூரத்தில் இருக்கும் சாரங்கபாணி கோயிலுக்கு அடிக்கடி செல்வார் , அது அவரது நண்பனுக்குத் தெரியும்.சரி, அங்கு தான் இருப்பான் என்று அவரது நண்பன் போய்ப் பார்க்க இராமானுஜர் அங்கு தான் கோயில் மண்டபத்துக்குப் பின்னால் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தார்.அவரை சுற்றி சுண்ணாம்புக் கட்டியால் கணக்குத் தீர்வு வழிமுறைகள் எழுதப்பட்டு இருந்தன.

இராமானுஜத்தை தட்டி எழுப்பினார் நண்பர். தூக்கம் கலைந்த ராமானுஜர், தன்னை எழுப்பிய காரணத்துக்காக தனது உயிர் நண்பன் மீதே கோபப்பட்டுக் கத்தினார்.அவரது கோபத்திற்கான விளக்கத்தை அவரது நண்பர் கேட்க " நான் சிக்கலான கணக்கு ஒன்றிற்கு தீர்வு கண்டு கொண்டு இருந்தேன். நீ அனாவசியமாக என்னை எழுப்பி விட்டாயே!" என்றார். இவ்வாறு, ஒரு முறை அல்ல, பல முறை தனது வாழ்க்கையில் சிக்கலான பல கணக்குகளுக்கு தனது கனவின் மூலமே தீர்வு கண்டு இருக்கிறார் அந்தக் கணித மேதை.