கடிமணப் படலம் - 1288

bookmark

மண்டபம் பொன் மலையை ஒத்தல்

மண்டபம் மேருமலையாதல்
 
1288.    

மன்னரும். முனிவரும். வானுளோர்களும்.
அன்ன மென் நடை அணங்கு அனைய மாதரும்.
துன்னினர் துவன்றலின். சுடர்கள் சூழ்வரும்
பொன் மலை ஒத்தது - அப் பொரு இல்கூடமே.
 
மன்னரும்   முனிவரும்  வானுளோர்களும்   -    அரசர்களும்
முனிவர்களும் வானத்துத் தேவர்களும்; அன்னமென் நடை  அணங்கு
அனைய  மாதரும்  துன்னினர் துவன்றலின் - அன்னப் பறவையென
மெது  நடை  நடக்கும்  தேவ  மகளிரை ஒத்த பெண்டிரும்   நெருங்கி
நிறைதலால்;அப்பொரு  இல் கூடம் சுடர்கள் சூழ்வரும் பொன்மலை
ஒத்தது  - ஒப்புவமையில்லாத அத் திருமண மண்டப மானது  சூரியன்
முதலிய    எல்லாச்    சுடர்களும்    சூழ்ந்து     வலம்    வருகின்ற
மேருமலையைப் போன்றதாயிற்று.

சுடர்கள்     சுற்றி நிற்பதாலும்.  பொன்  மயமாய்ப்  பொலிவதாலும்
மணமண்டபம்   பொன்மயமான   மேருமலைக்கு    நிகர்    ஆயிற்று.
மன்னர்கள்   முனிவர்கள்  சூரியன்  ஆயினர்;  மாதர்கள்    சந்திரன்
ஆயினர்;  அவர்கள்  சூழ  இருப்பதால்.  சூரிய சந்திரர்  ஆகிய  இரு
சுடர்கள்  சுற்றிவரு    மேருகிரியாயிற்று    அத்திருமண    மண்டபம்
என்பதாம்.                                                44