கடிமணப் படலம் - 1282

bookmark

பல செல்வமும் நிறைந்து மணநாள் சிறத்தல்

1282.    

உள்நிறை நிமிர் செல்வம்
   ஒரு துறை செல என்றும்
கண்ணுறல் அரிது என்றும்
   கருதல் அரிது அம்மா!
எண்ணுறு சுடர் வானத்து
   இந்திரன் முடி சூடும்
மண்ணுறு திருநாளே
   ஒத்தது-அம் மண நாளே.
 
உள்நிறை நிமிர் செல்வம் ஒரு துறை செல  என்றும் கண்ணுறல
அரிது -  மிதிலை நகரத்துள் நிறைந்துள்ள  செல்வம்  முழுவதனையும்
ஒரே   இடத்தில்   செல்லக்   காணுதல்   என்பது   என்றும்   அரிய
செயலாகும்; என்றும் கருதுதல் அரிது அம்மா! - அவ்வாறு செல்வதை
மனத்தால்   நினைத்துப்   பார்ப்பது    கூட   என்றும்   அரியதொரு
வியப்பாகும்!  (அன்று  அது  நிகழ்ந்தது!); எண்ணுறு  சுடர் வானத்து
இந்திரன்    -   மதித்தற்குரிய   ஒளியுலகாகிய   வான    நாடாளும்
தேவேந்திரன்;    முடி     சூடும்      மண்ணுறு      திருநாளே
ஒத்தது     அம்       மணநாள்     -       தூயதாக்கித்   தன்
திருமுடியைச்     சூடிக்     கொள்ள    (விழா)   எடுத்த    நாளைப்
போன்றதே ஆயிற்று. மிதிலையில் நிகழ்வுறும் அந்த மணநாள்.

மிதிலை     நகரத்துச்  செல்வம்  அனைத்தும்   மணநாள்  அன்று
வீதியில்   காணப்பட்டது  என்பது  முதல்   இரண்டடிகளின்   கருத்து.
நினைக்கும்  பொருள்  எல்லாம் நிறைந்து கிடக்கும்  அந்நெடு  வீதிகள்
மிக்க  அந்த  நீள்  நகர்  மிதிலை.   நினைக்கும்  பொருள்   எல்லாம்
நிறைந்து கிடக்கும் வானநாட்டு வேந்தன்  முடிசூடும்  அன்றுள்ள  வான்
நகரே  கவிஞர்  நினைவுக்கு  வந்தது  என்க.  மண்ணுறு   திருநாள் -
மகுடாபிடேகத்   திருநாள்.  இதனை.  “மண்ணுமங்கலம்  (புறப். வெண்.
பாடாண். 36) என்பர்.                                       38