கடிமணப் படலம் - 1280

bookmark

1280.    

முத்து அணி அணிவாரும்.
   மணி அணி முனிவாரும்.
பத்தியின் நிமிர் செம் பொற்
   பல கலன் மகிழ்வாரும்.
தொத்து உறு தொழில் மாலை
   சுரி குழல் அணிவாரும்.
சித்திர நிரை தோயும்
   செந் துகில் புனைவாரும்.
 
முத்து  அணி  அணிவாரும்-   முத்துக்களாலான   நகைகளைப்
(புதிதாக)  அணிபவர்களும்;  மணி  அணி  முனிவாரும்  -  முன்பே
அணிந்திருந்த    மணியாபரணங்களை    வெறுத்து    நீக்குபவர்களும்;
பத்தியின்  நிமிர் செம்பொன்  பலகலன்  மகிழ்வாரும்  -  வரிசை
வரிசையாக.  உயர்ந்த  செம்பொன்னால்  ஆகிய  பல்வகை  நகைகளை
அணிந்து  மகிழ்பவர்களும்; தொத்துஉறு  தொழில்  மாலை சுரிகுழல்
அணிவாரும்   -   பூங்கொத்துகளை  வைத்து   கைத்திறன்  காட்டிப்
புனையப்  பட்ட  மாலைகளை.  நெளிந்த  கூந்தலில்  அணிபவர்களும்;
சித்திர நிரை தோயும்  செந்துகில் புனைவாரும் - ஓவிய வரிசைகள்
அமையப்பெற்ற செந்நிறப் பட்டாடையை உடுப்பவர்களும் (ஆயினர்).  

புதியன     புனைதற்கு மகளிர்க்கு உள்ள விருப்பம் சுட்ட.  “முத்து
அணி  அணிவாரும்  மணியணி   முனிவாரும்”  என்றார்.   பெண்மை
அழகுருவம்  ஆதலின்.  அழகு  மேலும் மேலும்  ஆரா  அழகுபெறத்
தவிக்கும்  தவிப்பை இப்பாடல் சுட்டுவது காண்க.  இத்தனை  வகையில்
அணிந்து வந்தனர் என்க.                                    36