கடிமணப் படலம் - 1279

bookmark

1279.    

தேர்மிசை வருவாரும். சிவிகையில் வருவாரும்.
ஊர்தியில் வருவாரும். ஒளி மணி நிரை ஓடைக்
கார்மிசை வருவாரும். கரிணியில் வருவாரும்.
பார்மிசை வருவாரும். பண்டியில் வருவாரும்.*
 
தேர்மிசை   வருவாரும்  -  தேர்களின்   மேல்  வருபவர்களும்;
சிவிகையில்     வருவாரும்  -    பல்லக்குகளில்    வருபவர்களும்;
ஊர்தியில்  வருவாரும்   -  பிறவாகனங்களிலும்     வருபவர்களும்;
ஒளிமணிநிரை     ஓடைக்       கார்மிசை      வருவாரும்  -
ஒளிநிறையும்  மணிகள்  பதித்த  முகபடாம்    அணிந்த  மேகம்போற்
கரிய         (ஆண்)          யானைகளின்மேல்       வருவாரும்;
கரிணியில்       வருவாரும்      -      பெண்யானைகளின்மேல்
வருவாரும்;   பார்   மிசை   வருவாரும்  -  பூமியின்மேல்  நடந்து
வருபவர்களும்; பண்டியில் வருவாரும் -  வண்டிகளில்  வருபவர்களும்
(ஆயினர்).  

கார் -  மேகம்.  நிற  ஆகுபெயராய்  யானையைக்  குறித்தது.  கரி
என்பதன்  பெண்பாலாய். கரிணி என்பது பெண்  யானையைக்  குறித்து
நின்றது.  வருவார்   இத்தனை  வகையினர்  ஆயினர்  என்க.  கார் -
மேகம்  எனக்கொண்டு  உவமையாகு பெயராய்  யானையைக்  குறித்தது
எனினுமாம்.   அப்போது.  கார்மேகம்  யானைகளையும்  அவையணிந்த
முகபடாமின் ஒளிகள் மின்னலினையும் குறித்தன என்க.            35.