கடிமணப் படலம் - 1277

bookmark

1277.    

கேடகம் வெயில் வீச. கிளர் அயில் நிலவு ஈன.
கோடு உயர் நெடு விஞ்சைக் குஞ்சரம்அது போல.
ஆடவர் திரிவாரும். அரிவையர் களி கூர.
நாடகம் நவில்வாரும். நகை உயிர் கவர்வாரும்.
 
கேடகம்   வெயில் வீச- (இடக்கையில் ஏந்தும் பொன்  பொதிந்த)
கேடயம் (பொன்னிற) வெயிலை உமிழவும்; கிளர் அயில் நிலவு ஈன -
(வலக்கையில்  ஏந்திய)  கூர்மையான சேல் நிலவின்  ஒளியை  வீசவும்;
கோடு உயர்நெடுவிஞ்சைக் குஞ்சரம் அதுபோல- கொம்புகள் நீண்ட
போர்த்   தொழில்வல்ல  யானைகள்போல்; ஆடவர்  திரிவாரும்  -
ஆண்கள்  (பீடுநடையோடு)  உலாவவும்; அரிவையர் களிகூர நாடகம்
நவில்வாரும் - பெண்டிர்.  (அந்த ஆடவர்)  மகிழ்ச்சி   மிகுதற்கு ஏது
வான  நடனங்களை ஆடவும்; நகை உயிர் கவர்வாரும் -  (அவ்வாறு
அவர்  ஆடும் நடனத்திடையே) புன்னகை பூக்கவும்.  ஆடவர்  உயிரை
அவர்கள் கொள்ளை கொண்டனர்.  

விழாக்     காலங்களில் விளையாட்டுப் போர் நிகழ்த்திக் காட்டுதல்
வழக்காதலின். அவர்கள் கேடயமும். வேலும் ஏந்தி.  போர்த்திறங்களை
நடித்துக்  காட்டினர் என்க. “ஆடவர் திரிவார்;அரிவையர்   கவர்வார்”
என்று அழகுறக் கூறினார்.                                   33