கடிமணப் படலம் - 1276

1276.
கணிகையர் தொகுவாரும்.
கலை பல பயில்வாரும்.
பணி அணி இன முத்தம்.
பல இரு நில மன்னர்
அணி நெடு முடி ஒன்று ஒன்று
அறைதலின். உகும் அம்பொன்
மணி மலை தொகுமன்னன்
வாயிலின் மிடைவாரும்.
கணிகையர் தொகுவாரும் - நடனம் முதலிய கலைகளில் வல்ல
கணிகையர் திரளாகக் கூடுவாரும்; கலைபல பயில்வாரும் - அறுபத்து
நான்கு வகைக் கலைகளிற் பலவற்றின் திறங்காட்டப் பயின்று
கொண்டிருப்பாரும்; பல இருநில மன்னர் பணிஅணி இனமுத்தம் -
பல வகைப்பட்ட பெருநில மன்னர்களின் ஆபரணங்களில்
அணிந்துள்ள சிந்திய பலவகை முத்துக்களும்; அணிநெடுமுடி
யொன்று ஒன்று அறைதலின் உகும் அம்பொன்மணி-அழகிய நீண்ட
(தத்தம்) கிரீடங்கள் ஒன்றொடொன்று நெருங்குதலால் சிந்து
கின்றனவும் ஆகிய அழகிய பொன்களும் மணிகளும்; மலைதொகு
மன்னன் வாயிலின் மிடைவாரும் - மலையாகக் குவிந்து கிடக்கிற
சனக மன்னனின் அரண்மனை வாயிலிலே நெருங்குபவர்களும்
(ஆயினர்).
மன்னர்கள் நெருக்கத்தால். அற்றுவீழ்ந்த மணியணிகள்
அரண்மனையின் ஆசார வாசலில் மலையெனக் குவிந்தன என்க.
உயர்வுநவிற்சி. 32