கடிமணப் படலம் - 1274

1274.
தப்பின மணி காசும். சங்கமும். மயில் அன்னார்
ஒப்பனை புரி போதும். ஊடலின் உகு போதும்.
துப்பு உறழ் இள வாசச் சுண்ணமும். உதிர் தாதும்.
குப்பைகள் என. வாரிக்கொண்டனர் களைவாரும்.
மயில் அன்னார் - மயில் அனைய சாயற் பெண்டிர்; ஒப்பனை
புரிபோதும் - அலங்காரம் செய்கின்ற காலத்தும்; ஊடலின்
உகுபோதும் - ஊடற்காலத்தில் வெகுண்டு வீசுகிற காலத்தும்; தப்பின
மணிகாசும் சங்கமும் துப்புறழ் இளவாசச்சுண்ணமும் உதிர்தாதும் -
உதிர்ந்து வீழ்ந்த மணிகளையும். (தங்கக்) காசுகளையும். சங்கு
வளையல்களையும். பவழம்போன்று சிவந்த மெல்லிய வாசமுடைய
நறுமணப்பொடிகளையும். உதிரும் இயல்புடைய பூந்துகள்களையும்;
குப்பைகள் எனவாரிக் கொண்டனர் களைவாரும் - (களையத்தக்க)
குப்பைகள் போல. குவியலாக வாரித்திரட்டிக்கொண்டு போய் அப்பால்
எறிபவர்களும் (ஆயினர்).
விலையுயர்ந்த வெனக்கருதும். பொருள்கள் எல்லாம் அந்நகரப்
பெண்டிர்க்கு மிக இழிந்த குப்பைகளாயின என்று நகரின் மிகுவளம்
கூறியவாறு. மிதிலை நகரத்துக் குப்பைகளின் மூலப் பொருள்கள்
இவையென வியந்த வாறுமாம். 30