கடிமணப் படலம் - 1271

1271.
வயிரம் மின் ஒளி ஈனும்.
மரகத மணி வேதி.
செயிர் அற ஒளிர் தீபம்
சிலதியர் கொணர்வாரும்.
வெயில் விரவிய பொன்னின்
மிடை கொடி. மதி தோயும்
எயிலினில் நடுவாரும்.
அகில் எரி இடுவாரும்.
வயிரம் மின் ஒளிஈனும் மரகத மணி வேதி- வயிரம் என்னும்
மணிகள் (சுற்றிலும்) ஒளிவீசும். பச்சை இரத்தினங்கள் பதிக்கப்பட்ட
மேடைகளில்; செயிர் அற ஒளிர்தீபம் சிலதியர் கொணர்வாரும் -
குற்றமற்று விளங்குகின்ற விளக்குகளை. பணிப்பெண்கள் கொண்டு வந்து
வைப்பர்; வெயில் விரவிய பொன்னின் மிடை கொடி - சூரிய
ஒளிக்குச் சமமான ஒளிபொருந்திய பொன்னால் ஆகிய காம்போடு
கூடிய கொடிகளை; மதிதோயும் எயிலினில் நடுவாரும் -
மதிமண்டலத்தை அளாவுகின்ற மதில்களின் மேல் நாட்டிவைப்பர்;
அகில் எரி இடுவாரும் - (எங்கும்) அகிற்கட்டைகளை (மணம்
பரப்புதற்கு) நெருப்பில் இடுவாரும் (ஆயினர்.)
மதிதோயும் எயில் - உயர்வு நவிற்சி. 27