கடிமணப் படலம் - 1268

bookmark

1268.    

சந்தனம். அகில். நாறும்
   சாந்தொடு. தெரு எங்கும்
சிந்தினர் திரிவாரும்.
   செழுமலர் சொரிவாரும்.
இந்திரதனு நாணும்
   எரி மணி நிரை மாடத்து.
அந்தம் இல் விலை ஆரக்
   கோவைகள் அணிவாரும்.
 
நாறும் சந்தனம் அகில் சாந்தொடு- மணக்கின்ற சந்தனம். அகில்
ஆகியவற்றைத் தேய்த்து அரைத்த குழம்பை; தெரு எங்கும்  சிந்தினர்
திரிவாரும்- வீதிகளில் எங்கும் தெளித்துத் திரிபவர்களும்;  செழுமலர்
சொரிவாரும்  - வாடா மலர்களை (வீதிகளில் எல்லாம்)  (மழை போல்)
பெய்பவர்களும்; இந்திர  தனுநாணும்  எரிமணி  நிரை  மாடத்து -
இந்திரவில்  எனப்படும் வானவில்   நாணுமாறு   ஒளிவீசும்   மணிகள்
பதிக்கப்பட்டுள்ள மாடங்களாகிய உப்பரிகைகளில்; அந்தம் இல் விலை
ஆரக்  கோவைகள்  அணிவாரும்  -  அளவற்ற  விலைமதிப்புடைய
முத்து வடங்களைத் தொங்க விட்டு அலங்கரிப்பவர்களும் (ஆயினர்).  

முந்தைய  பாடலில்.  முத்தும்   மணியும்   அணியாகப்  பெண்கள்
அணிந்ததைக்  கூறிய கவிஞர்பிரான். இப்பாடலில்  அவர்கள்  இருக்கும்
மணிமாட  வீடுகளும்   அவ்வணிகளை  யணியத்  தொடங்கின  என்று.
நகரத்தின் வள மிகுதி கூறுகின்றார்.  

அந்நகர   மங்கையரே  மணப்பொருள்களின்  சங்கமம்;  ஆதலால்.
அவர்கள்    செல்லுமிடம்    எல்லாம்     நறுமணங்களைச்    சிந்திச்
சென்றார்கள்  என்பார்.  “சந்தனம்.  அகில்.  நாறும்  சாந்தொடு  தெரு
எங்கும்  சிந்தினர்.  திரிவாரும்” என்றார்.  இல்லத்தை  நறுமணமாக்கிய
இவர்கள்.   இப்பொழுது.    தெருவில்   திரிந்து.   தெருவையெல்லாம்
நறுமணமாக்குகின்றனர்  என்க.  தாங்கள்  அணிந்தது  போக.  எஞ்சிக்
கிடந்த  விலைமதிப்பற்ற  முத்து.   மணிமாலைகளை  மாளிகைகளுக்குச்
சூட்டத் தொடங்கினர் என்பார். “நிரை மாடத்து  அந்தமில்  விலையாரக்
கோவைகள்  அணிவாரும்”  என்றார். அந்த  மணி  மாடங்கள் முன்பே
நவரத்தினங்கள்  பதிக்கப் பெற்று. இந்திரவில்லை  நாணும்படி  செய்யும்
ஒளியுடையன  என்பார்.  “இந்திர தனுநாணும்  எரிமணி  நிலை மாடம்”
என்றார்.   இம்மாடங்கள்   ஒன்பது  வகை  நிறமுடைய   நவமணிகள்
பதிக்கப்பெற்றவை;  வான  வில்லோ ஏழுநிறமே கொண்டது  ஆதலால்.
தாழ்வுணர்ச்சியால்   அது  நாணும்  என்பார்.  “இந்திர   தனுநாணும்”
என்றார்.  

சாந்து  -  தைலம்  எனினுமாம்.  இறை  திருமேனிகட்குச்  சாத்தும்
தைலக்காப்பை. “சாந்து சாத்துதல்” என்பர்.                     24