கடிமணப் படலம் - 1265

bookmark

கதிரவன் வருகை

சூரியன் தோற்றம்
 
1265.    

‘அஞ்சன ஒளியானும்.
   அலர்மிசை உறைவாளும்.
எஞ்சல் இல் மணம். நாளைப்
   புணர்குவர்’ எனலோடும்.
செஞ் சுடர் இருள் கீறி.
   தினகரன். ஒரு தேர்மேல்.
மஞ்சனை அணி கோலம்
   காணிய என. வந்தான்.
 
அஞ்சன  ஒளியானும்- அஞ்சன மை போன்ற கருநிறங்  கொண்ட
(திருமாலாகிய)  இராமனும்;  அலர்மிசை  உறைவாளும்  -  தாமரைப்
பூவில் வாழ்பவளாம்  திருமகளாகிய  சீதையும்;  எஞ்சல் இல்  மணம்
நாளைப்   புணர்குவர்  எனலோடும்   -  நாளை  (ஒருவகையிலும்)
குறைவில்லாத  திருமணம் கூடுவார்கள்   என்று   முரசறைந்த  செய்தி
கேட்டவுடன்; தினகரன்.  மஞ்சனை  அணிகோலம்  காணிய  எனச்
செஞ்சுடர்  இருள்கீறி ஒருதேர்மேல் வந்தான் - சூரியன். தனது குல
மைந்தனான இராமனின்  திருமணக்  கோலத்தைக்  காணத்  (அவாவிப்
புறப்பட்டான்   போல)    தனது   ஒப்பற்ற   தேர்மேல்  தன் சிவந்த
ஒளிக்கற்றைகளால் இருளைக் கீறிக் (கீழ்வானில்) உதித்தான்.  

குலப்பாட்டன்     கொள்ளுப்பேரன் திருமணம் காண வந்தாற்போல
வந்தான்   எனச்   சூரிய   உதயத்தை   இடம்   காலத்திற்கேற்றவாறு
புனைந்துரைக்கும் திறம் காண்க. ஏதுத்தற்குறிப்பேற்ற அணி.  

அஞ்சனம்     கருமை   நிறம்   உடையதேனும்.  அதுவும்   ஒளி
கூடியதாயின்   இராமன்   நிறத்துக்கு  ஒவ்வும்  என்பார்.   “அஞ்சன
ஒளியானும்” என்றார்.  எனவே.   கருமையில்  ஒளிகூடின்   காகுத்தன்
நிறமாகும்    என்றவாறு.  “அலர்   மிசை   உறைவாளும்”   என்பது.
அஞ்சன   ஒளியானின்   இதய   அலர்மிசை   உறைவாளும்   எனும்
பொருளும்   தோன்ற  நிற்பது  காண்க. அவள்  விளையாடிடம்   என்
மனம்  (கம்ப. 1177)  என்று  சற்று   முன்பு  பெருமான்  கூறியுள்ளமை
காண்க.                                                   21