கடல் தாவு படலம்

bookmark

 சுந்தர காண்டம்

கம்பராமாயணத்துள் மிகவும் போற்றக்கூடிய பகுதியாக விளங்குவது சுந்தர காண்டமாகும். இங்கு சுந்தரன் என்று குறிக்கப் பெறுபவன் அனுமன் ஆவான். சொல்லின் செல்வன் என்று கம்பர் அனுமனது பெருமையை விளக்குகிறார். இராமனைப் பிரிந்த சீதைக்கும், சீதையைப் பிரிந்த இராமனுக்கும் இடையில் பிள்ளையைப் போலத் தூது சென்று அவர்தம் உள்ளக்கருத்தை உள்ளபடி உரைத்தபாங்கினாலேயே இதற்குச் சுந்தர காண்டம் எனப் பெயர் ஏற்பட்டது. சுந்தரம் என்றால் அழகு என்று பொருள். இன்றும் கணவன்-மனைவி ஆகிய தம்பதியரிடையே ஏற்படும் உளவேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு சுந்தர காண்டம் படிப்பது வழக்கமாக உள்ளது. சுந்தரகாண்டம் பதினான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது

கடல் தாவு படலம்

(அனுமன் மகேந்திர மலையிலிருந்து தென்பெருங்கடலைக் கடந்து பவள மலை வரையில் பாய்ந்த செய்தியைக் கூறுகிறது இப்படலம். இப்படலத்தில் மைந்நாகன், சுரசை, அங்காரதாரை என்னும் மூன்று பாத்திரங்களை அனுமன் சந்திக்கின்றான். பேருருக் கொண்டு அனுமன் கடல் கடந்து செல்லும்போது அவனுக்கு உதவி செய்வதற்காக மைந்நாகமலை கடலிலே தோன்றி, அனுமனைத் தன் மீது தங்கி இளைப்பாறிச் செல்ல வேண்டுகிறது. அனுமன், 'இராமன் திருத்தொண்டு செய்யும் நான் ஓய்வை விரும்பேன். திரும்பி வரும்பொழுது உன்னைக் காண்கிறேன்' என்று சொல்லிக் கடந்து செல்கிறான். கடந்து செல்கிற அனுமனைத் தேவர்கள் ஏவலால் சுரசை தடுக்கிறாள். அவள் 'எனக்குப் பசியாக இருக்கிறது. உன்னை உண்பேன்' என்று வாயைத் திறக்கிறாள். அனுமன் அவள் வாய்க்குள் புகுந்து வெளியே வருகிறான். சுரசையை வென்ற அனுமன் அங்கார தாரையைச் சந்திக்கின்றான். அங்கார தாரை அனுமனை விழுங்குகின்றாள். அனுமன் அவள் உடலைப் பிளந்து வெளிப்படுகிறான். அரக்கி இறக்கிறாள். தேவர்கள் அனுமனை வாழ்த்துகின்றனர். அனுமன், வருகின்ற இடையூறுகள் எல்லாம் நீங்க வேண்டும் என்று கருதி, இராம நாமத்தைத் தியானிக்கின்றான். மூன்று தடையைக் கடந்த அனுமன் பவள மலை வரையில் பாய்ந்து இலங்கையின் வளங்களை நோக்குகிறான். இவையே இந்தப் படலத்தில் கூறப்படும் செய்திகள் ஆகும்)

மகேந்திர மலையில் பேருருவம் கொண்டு நின்ற அனுமன், தனக்குச் சமீபத்தில் காணப்பட்ட தேவலோகத்தைக் கண்டான். அவ்வுலகம் பொன் மயமாகக் காணப்பட்டதால் அதுவே இலங்கை என்று எண்ணினான். பிறகு அவ்விடத்தில் சீதா பிராட்டி உள்ளார்களா என்று பார்த்தான் அனுமான். ஆனால், சீதை அவ்விடத்தில் இல்லாததுடன், அங்கு தேவர்கள் சஞ்சரிப்பதைக் கண்டு இலங்கை நகரம் அது இல்லை, அவ்விடமே தேவர்கள் வசிக்கும் சுவர்க்கம் எனத் தெளிந்தான் மாருதி. அவ்வுலகத்தின் மீது செலுத்திய தனது பார்வையை மீட்டு, எதிரே நீண்டு கிடந்த கடலைப் பார்த்தான். அப்போது நீண்ட தூரத்தில் இருந்த இலங்கையை அனுமான் கண்டான். ஆர்வத்துடன் அந்த நகரத்தை உற்றுப் பார்த்தான் அனுமான். அவ்விடத்தில் இருந்தபடியே இலங்கையின் வானளாவிய மதில்களையும், சோலைகளையும், வெற்றிக் கொடி நாட்டப்பட்ட நகர வாயிலையும், முழுக்க முழுக்கப் பொன் கொண்டு கட்டப்பட்ட மாட, மாளிகைகளையும் அனுமன் கண்டு தனது கைகளைத் தட்டி தேவர்களே நடுங்கும் படியான ஆரவாரத்தை செய்தான்.

உடனே தனக்கு முன் நீண்டு கிடந்த கடலைத் தாண்டி இலங்கையைச் சேர எண்ணி அனுமன், தனது கால்களை அந்த மலையில் அழுத்தி ஊன்றினான். அந்தக் கணத்தில்...

அந்த மலையின் குகையில் வாழ்ந்து வந்த கொடிய மலைப் பாம்புகள் பிரளயம் தான் வந்து விட்டதோ எனப் பயந்தது, அந்த பயத்தின் காரணமாக விஷத்தைக் கக்கிக் கொண்டே வெளியே வந்தது. பறவைகளோ அந்த மலையை விட்டு வானில் பறந்து சென்று பிழைத்தால் போதும் என எங்கோ சென்று மறைந்தன. அந்த மலையே அனுமனின் வலிமையான கால்கள் ஊன்றப்பட்டதால் சுக்கல், சுக்கலாகப் பிளவு பட்டது. அப்போது அதில் இருந்த பாறைகள் ஒன்றோடு, ஒன்று உரசிக்கொள்ள பெரும் தீப்பொறி எழுந்தது. அப்போது பூமியே பிளவுபட்டது போல பெரும் சத்தத்துடன் அந்த மலையில் இருந்த பாறைகள் உடைந்தன. அதனால் யானை, சிங்கம் முதலிய வன விலங்குகள் கூடத் திகைத்துப் போய் நின்றன. புலிகளின் கூட்டமோ தங்கள் குட்டிகளை வாயில் கவ்விக் கொண்டு இங்கும், அங்கும் செய்வதறியாது ஓடின. இன்னும் சொல்லப் போனால் சூரியனும், சந்திரனும், நக்ஷத்திரங்களும் தனது முடி மேல் தவழ்ந்து விளையாடும் படி கம்பீரமாக நின்று இருந்த அந்த மலை, அனுமனின் வலிமையானக் கால்கள் ஊன்றப்பட்டதால் அவைகள் எல்லாம் தனக்கு வெகு தூரத்தில் உயரத்தில் இருக்கும் படி மிக மிகத் தாழ்ந்து விட்டது. அந்த மலையில் ஒழுங்காக ஓடிய அருவிகள் கூட திசை கெட்டு ஓடியது. அப்போது அந்த அருவிகளின் தெளிந்த நீர் மணலின் நிறத்தைப் பெற்று காண்பதற்கு அந்த மலையின் இரத்தம் போலக் காட்சி தந்தது .

அனுமன் அவ்வாறு மகேந்திர மலையில் கால் ஊன்றி நின்ற சமயத்தில், தேவர்களும் முனிவர்களும் மற்ற உலகங்களில் வாழ்கின்ற பெரியோர்களும் விரைந்து அவன் அருகே வந்தார்கள். அவன் மேல் கொத்து கொத்தாக வாசனைப் பொருட்களான சந்தனம், மலர்கள், உட்பட அனைத்தையும் தூவி மகிழ்ந்தார்கள். அவனைப் பார்த்து," மாவீரனே! சென்று வெற்றியுடன் திரும்பி வருவாயாக!" என்று வாழ்த்தி விடை கொடுத்தார்கள்.

முனிவர்கள் மற்றும் பெரியோர்களின் வாழ்த்துதலைப் பெற்ற அனுமான் மிகவும் மகிழ்ந்து இலங்கைக்குப் புறப்பட மேலும் அந்த மலையில் தனது கால்களை விசையுடன் அழுத்தி ஊன்றினான். அதனால், அந்த மலையில் இருந்து வானத்தைக் கிழித்தபடி வாயுவேகத்தில் பறந்தான் அனுமான். அனுமான் சென்ற வேகத்தில் அந்த மலை, தனது மலை என்ற அந்தஸ்த்தையே இழந்து நிலத்துக்கு சமமாக மாறியது.

அனுமன் சென்ற வேகத்தால், இராமபிரானின் கட்டளையை நன்கு மதித்துத் தாமும் இலங்கையை நோக்கிச் செல்வது போல, மரங்களும், மலைப் பாறைகளும், யானை முதலிய பிற பிராணிகளும் கூடவே எழுந்து வானத்தில் படர்ந்தன. அவ்வாறு எழுந்த அனைத்தும் கடலைத் தாண்டுவதர்க்குரிய வேகம் இல்லாததால் ஆங்காங்கு கடலில் விழுந்தன. அனுமான் காற்றின் வேகத்தை விட அதிக வேகம் கொண்டு பறந்து சென்றதால். கடலும் கிழிய நாகலோகம் வெளிப்பட்டது. அந்த மாணிக்கமயமான உலகத்தைக் கண்ட அனுமான்," இந்த உலகத்தை நான் காண்பது இராம பிரானின் தனிப் பெரும் கருணை தான்" என தனக்குள் கூறிக் கொண்டான். அப்போது அனுமான் வானில் பறப்பதைக் கண்ட நாகங்கள் அனைத்தும் " கருடன் தான் நம்மைக் கொல்வதற்கு இப்படிப் பறந்து வருகிறான் போல!" என்று சொல்லிக் கொண்டே நிலைக் கெட்டு எட்டுத் திசைகளிலும் சிதறி ஓடின.

மேலும், அனுமன் சென்ற வேகத்தால் எழுந்த காற்று கடல் அலைகளை உந்தித் தள்ள, அதனால் அவன் வரவைச் சொல்வது போல அவைகள் அவனுக்கு முன் சென்று, தன்னுள் வாழ்கின்ற மகர மீன்களும், சுறா மீன்களும், முதலைகளும், மற்றுமுள்ள உயிரினங்களும் மரண வேதனையால் துடிக்க இலங்கை நகரின் மேல் மோதின!

ஆயிரங் கண்கள் கொண்ட இந்திரனும் காண முடியாத வேகத்தில் சென்ற அனுமன் அப்போது கயிலை மலையே வானத்தில் பறப்பதைப் போலக் காணப்பட்டான். மாருதி, தனது வேகத்தை இன்னும் அதிகரித்தான். அதனைக் கண்ட தேவர்கள் பலர்," இனி அரக்கர்களுக்கு அழிவு காலம் தொடங்கி விட்டது" என எண்ணி மிகவும் மகிழ்ந்தனர்.

இவ்வாறாக அனுமான் பல யோசனை தூரம் கடந்து சென்றதும் திருப்பாற்க் கடலில் இருந்து ஐராவத யானை தோன்றியது போல, அந்த உவர் கடலில் இருந்து அனுமனை உபசரிப்பதற்காக மைனாக மலை வெளிப்பட்டுத் தோன்றியது. அந்த மலை ஆயிரம் சிகரங்களையும் பல பொன்மயமான நீரருவிகளையும் கொண்டது. அப்போது ஆயிரம் முடிகளையும், பீதாம்பரத்தையும் உடைய ஸ்ரீ மகாவிஷ்ணுவைப் போல அந்த மலை காணப்பட்டது. இன்னொரு புறம் அந்த மலை முன்பு பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட மந்திர மலையைப் போலவும் காண்டப்பட்டது. வெகு காலம் கடலில் இருந்ததால் தேவர்களால் கடையப்பட்டு பாற்கடலில் இருந்து வெளிவந்த சந்திரனைப் போல அம்மலை காட்சி அளித்தது. அந்த மலை யுகங்கள் தாண்டி வெளியே வந்த காரணத்தால், முன்பு அம்மலை கடலுக்கு அடியில் இருந்த போது அதில் தூங்கிக் கொண்டு இருந்த மகர மீன்கள் இப்போது துயில் நீங்கித் தத்தளித்தன. தவிர கடலில் இருந்து தான் அந்த மலை வெளிவந்தது என்பதற்கு சாட்சியாக முத்துச் சிப்பிகள், பாசிகள், பளிங்குப் பாறைகள், சங்கு, முத்துக்கள், மற்றும் பல நவரத்தினங்கள் அந்த மலையில் எங்கும் கொட்டிக்கிடந்தன.

ஒருவன் கடலில் மூழ்கிப் பல வண்ண இரத்தினங்களைக் கைகளில் எடுத்துக் கொண்டு வெளிப்பட்டு வந்தது போல, இரத்தினங்கள் நிறைந்து அந்த மைனாகமலை காணப்பட்டது! அந்த மலையில் முன்பு வாழ்ந்து வந்த பனைமீனும் திமிலும், அந்த மலை மேலெழவே,' இனி நாம் இங்கிருந்தால் இறந்து போவோம்!' என்று எண்ணி, அம்மலையின் வற்றாத நீர்ச்சுனைகளில் குதித்து உயிர் தப்பின. அந்தமலை வெளிப்பட்டவுடன் அது நீரில் மூழ்கி இருந்த காலத்தில் அதன் குகைகளிலே மூச்சடக்கி வருத்தத்துடன் வாழ்ந்து கொண்டு இருந்த மழைப் பாம்புகள் இப்போது பெருமூச்சு விட்டு, முன்னே கொண்டிருந்த வருத்தம் நீங்கி மகிழ்ந்தன.

தீடீரென்று கடலில் இருந்து வானத்துக்கும் பூமிக்கும் வியாபித்து இருந்த மைனாக மலையைக் கண்ட ஹனுமான், ' இது என்ன?' என்று சந்தேகித்தான். அந்தக் க்ஷணத்தில், அந்த மலையைத் தனது பலம் கொண்ட மார்புகளால் ஒரு தள்ளு தள்ள அந்த மைனாகமலை நிலை மாறித் தடுமாறியது. அப்போது அந்த மலை அறைகூவல் கூட விடாமல் தன்னை எதிரியாக நினைத்து அனுமன் வீழ்த்தியதை நினைத்து கொஞ்சம் வருந்தியது. எனினும், பிள்ளையின் செயல்களை கோபித்துக் கொள்ளாத தாய் போல அந்த மலை அனுமனைத் தொடர்ந்து அதே வேகத்தில் மீண்டும் வந்தது. இப்போது அந்த மலை ஒரு மானிட உருவம் எடுத்து வந்தது.

அனுமன் தன்னைத் தொடர்ந்து வந்த அந்த மலையைக் கோபத்துடன் பார்த்தான். ஆனால், அந்த மைனாக மலையோ அனுமனை ஒரு தாய் மகனைப் பார்ப்பதை விட, மிகுந்த பாசத்துடன் பார்த்தது. அப்போது அந்த மலை அனுமநிடத்தில்,"அனுமனே! என்னை நீ அசுரன் என்றோ மாற்றாரது இனத்தைச் சேர்ந்தவன் என்றோ நினைக்க வேண்டாம். நான் ஒன்றும் உனக்குப் பகைவன் அல்ல. ஒரு காலத்தில் கிருத யுகத்தில் மலைகளுக்கு எல்லாம் சிறகுகள் இருந்தது. அப்போது அவை நினைத்த நேரத்தில், நினைத்த இடத்துக்கு சென்று வந்தன. அதனால், அவைகள் கண்ட, கண்ட இடங்களுக்கு எல்லாம் சென்று வர உலகத்துக்குப் பேரழிவு ஏற்பட்டது. அதனால், மக்கள் மிகுந்த துன்பம் அடைந்தனர். தேவர்கள் உட்பட அனைவரும் தேவேந்திரனிடம் இது பற்றிக் கூற, கோபம் கொண்ட தேவேந்திரன் தனது வஜ்ராயுதம் கொண்டு அனைத்து மலைகளின் இறக்கைகளையும் வெட்டித் தள்ளினான். அப்போது ஹிமவானின் மகனும் ஒரு வகையில் தேவி பார்வதியின் சகோதரனுமாகிய என் மீது இறக்கம் கொண்ட வாயு தேவன். தனது காற்றின் பலத்தால் பத்திரமாக நான் பறக்க உதவி, இந்தக் கடலுக்குள் என்னை பத்திரமாக அமர்த்தினார். மேலும், இனி நீ இந்தக் கடலுக்கு அடியில் தான் இருக்க வேண்டும், மக்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று ஆணை இட்டார். என்னை காப்பாற்றி கடல் சேர்த்த வாயுதேவனின் ஆணைப் படி அன்று முதல் நான் இந்த ஆழ் கடலுக்கு அடியில் தான் தஞ்சம் கொண்டு உள்ளேன். இப்போது என்னைக் காப்பாற்றிய வாயு தேவனுக்கு என்னால் முடிந்த ஒரு சிறு உதவியை வீர அனுமானே வாயுதேவனின் மகனான உன் மூலம் நான் செய்ய நினைக்கிறேன். தயை கூர்ந்து எனது அன்பைப் புரிந்து கொள். இன்னும் இங்கு இருந்து இலங்கைப் பல யோசனை தூரம் உள்ளது. இவ்வளவு தூரம் கடலைத் தாண்டி வந்த நீ சோர்வு அடைந்து இருக்கலாம். அதனால், எனது மலை மீது தங்கி இளைப்பாறிவிட்டு செல். என்னால் உனக்கு சுவை மிக்க கனி வகைகளைத் தர முடியும். இந்த அற்பன் உன்மீது கொண்ட பேரன்பு காரணமாக உன்னிடம் யாசகம் கேட்பது போல கேட்கிறேன். நான் உனக்கு உதவி செய்யும் ஒரு நல்ல வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடு" என்றான்.

மைனாகனின் வார்த்தைகளைக் கேட்ட அனுமான் கோபம் தணிந்தான். பிறகு புன்னகையுடன் மைனாகனிடம்," நான் இப்படி வெகு தூரம் செல்வதால் கலைப்படைபவன் இல்லை. காரணம் இராமபிரானின் கருணை என்னிடத்தில் நிறைந்து உள்ளது. அவரது தூதுவனாக நான் சீதா பிராட்டியைக் காண இலங்கைக்கு சென்று கொண்டு இருக்கிறேன். அவர்களைக் கண்டு உடனே இராமபிரானின் செய்தியைக் கூறுவதில் முனைப்புடன் உள்ளேன். இப்போதைக்கு அதைத் தவிர எனக்கு வேறு எண்ணம் கிடையாது. மேலும், உன்னுடைய அதிகமான அன்பு என்னிடத்தில் உண்டான பொழுதே, நான் உன் மீது தங்கி இளைப்பாறி விருந்தும் உண்டவன் ஆனேன். நீ இன்னும் எனக்குக் கொடுக்க வேண்டியதும் உண்டோ? இந்த அன்பைக் காட்டிலும் இந்த உலகத்தில் வேறொன்றும் உண்டோ? இந்த உலகத்தில் உயிரை விட உயரிய பொருள் அன்பு தான். ஆதலால், நீ எனக்கு இதை விடச் செய்ய வேண்டியது வேறு ஒன்றும் இல்லை. இப்போதே விரைந்து சென்று இலங்கையை அடைந்து, இராமபிரான் கட்டளையை நிறைவேற்றித் திரும்புவேனானால், பின்பு நீ மனம் விரும்பிச் செய்யும் உனது விருந்தை மகிழ்ந்து உண்பேன்!" என்று சொல்லி, மைனாகன் அன்புடன் பார்த்துக் கொண்டு இருக்கையில், அவன் கண் பார்வைக்கு எட்டாத தூரத்தில் அதிவேகமாகச் சென்றுவிட்டான் அனுமான்.

மாருதி அவ்வாறு சென்ற வேகத்தில் சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும் மேகங்களும் தங்களுக்குரிய இடங்களில் இருந்து நிலை மாறிப் போய் அவை எல்லாம் ஓரிடத்தில் திரண்டன! அப்போது அனுமனைக் கண்ட சூரியன்,"குழந்தையாய் இருக்கும் போதே எனது தேரின் மீது துள்ளிக் குதித்து எழுந்த இவன், இப்போது கட்டிளங்காளையாய் இருக்கும் இந்தச் சமயத்தில் இப்படிப் பாய்ந்து செல்வது ஒன்றும் வியப்புக்குரிய விஷயம் இல்லை" எனக் கூறிக்கொண்டான். அப்போது சூரியனின் ஒளிக் கிரணங்களையே பூமியில் விழாமல் மறைத்தபடி அனுமான் விஸ்வ ரூபம் எடுத்துப் பறந்து கொண்டு இருந்தான். அதனால் இரவும், பகலும் பூமியில் ஒரே நேரத்தில் வந்தது போலக் காணப்பட்டது.

மறுபுறம்...

பேருருவம் கொண்டு மகேந்திர மலையும் கீழே அழுந்தும் படி மேலே எழுந்ததும், மைனாக மலையை மார்பால் தள்ளியதும் ஆகிய இரு செய்கைகளாலும் அனுமனின் பல பராக்கிரமத்தைக் கண்டிருந்தும், தேவர்கள்,' இவனால் நமது காரியத்தை சாதிக்க முடியுமா?" என்று சந்தேகம் கொண்டனர். அந்த சந்தேகத்தால் அவர்களின் மனதில் நம்பிக்கை குறைந்தது. உடனே அனுமனின் வலிமையைப் பரிசோதிக்க எண்ணினார்கள். அக்கணமே நாகமாதாவான சுரசை என்பவளை நோக்கி,"அரக்கர்களை ஒழித்து, பூமியில் நன்மையை விளைவிக்க வந்து கொண்டு இருக்கிறான் அனுமான். அவனது உண்மையான பலத்தை நீ எங்களுக்கு உணர்த்துவாயாக!" என்று வேண்டினார்கள். தேவர்களின் வேண்டுதலுக்கு இணங்கினாள் சுரசை. மறுகணம் அவள் அரக்கி வடிவம் கொண்டு அனுமனுக்கு எதிரில் வந்து நின்றாள். அவனைப் பார்த்து," கொழுப்புப் பொருந்தி நல் உணவாகக் காணப்படும் குரங்குக் குட்டியே எனது பசிப் பிணியைத் தீர்க்கத் தான் வந்தாயோ?" என்று கேலியாகக் கூறிவிட்டு, பயங்கரமாகச் சிரித்தாள், அத்துடன் தனது தலை வானத்தின் உச்சியைத் தொடும் படி வளர்ந்து நின்றாள்.

மீண்டும் அனுமனிடம் அவள்," வலிமை உடையவனே! அக்கினியைப் போன்று உடம்பை எரிக்கின்ற எனது கொடிய பசியாகிய இந்த நோய் தீருவதற்காக, விரைந்து என்னருகில் நீ வந்தாய் போலும்! நான் பிடித்துப் புசிக்காமல் நீயாகவே கோரத்தந்தங்களை உடைய எனது பெரிய வாயினுள் புகுவாயாக! நீ என்னிடமிருந்து தப்பிச் செல்லவும் முடியாது. ஏனெனில் நீ தப்பிச் செல்லவும் ஆகாயத்தில் வேறு வழி இல்லை!" என்று கூறினாள்.

அவளது வார்த்தைகளைக் கேட்ட அனுமான் சிறிதும் கோபம் கொள்ளாமல் தனது நண்பனிடம் பேசுவது போல ,"ஒரு பெண்ணாகிய நீ பசித்துன்பம் உன்னை வருத்துவதால் என்னை உண்பதாகக் கூறுகிறாய். அதனால் நான் உன் மீது கோபம் கொள்ள மாட்டேன். ஆனால், நீ ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும், நான் இப்போது ஸ்ரீ ராமனின் காரியமாக இலங்கைக்கு சென்று கொண்டு இருக்கிறேன். அதனை வெற்றிகரமாக நிறைவேற்றித் திரும்பும் போது, நீ உனது பசி தீர என்னை உண்ணலாம். நானும் அதற்கு உடன்படுவேன்!" என்றான்.

அனுமனின் வார்த்தைகளைக் கேட்ட சுரசை மீண்டும் சிரித்தாள்! அந்தச் சிரிப்புடன்," எனக்கு இப்போது பசிக்கிறது என்கிறேன் ஆனால் நீயோ பிறகு உணவாகிறேன் என்கிறாயே? போகும் வழியில் இன்னும் நிறைய அரக்கர்கள் இருக்கலாம், அதனால் நீ அவர்களுக்கு உணவு ஆவதற்குள் நான் முந்திக் கொண்டு உன்னை உண்டு விடவேண்டும். மேலும், உன்னைப் போல ஒரு கொழுத்த தீனி எனக்கு மீண்டும் கிடைக்க பல காலங்கள் ஆகும். அதனால், இப்போதே நான் உன்னை விழுங்கப் போகிறேன். தயராக இரு" என்றாள்.

அது கேட்ட அனுமான் சிரித்துக் கொண்டே, " என்னையும் விழுங்கக் கூடிய அரக்கிகள் இந்த உலகத்தில் உள்ளார்களா என்ன? சரி. உனக்கு என்னை விழுங்கும் அளவுக்கு வல்லமை இருந்தால், நான் உனது வாய்க்குள் புகுந்து வெளிவருவேன். முடிந்தால் என்னை உனது பற்கள் கொண்டு அரைத்து விடு பார்க்காலாம்!" என்றான்.

மாருதி தானே அவள் வாயில் செல்வதாக இசைந்ததும், அவள் மேலும் தனது வாயை இன்னும் அகல விரித்தாள். அவளது அந்த அகல வாய், காண்பதற்கு இந்த உலக உருண்டைக்கே உறை போட்டது போல இருந்தது. அது கண்ட அனுமன் கோபம் கொண்டான். அவளது அகல வாயைக் காட்டிலும், இன்னும் பெரிய பேருருவத்தை எடுத்தான். சுரசை அனுமனின் அந்தப் பெரிய பேருருவம் கண்டு திகைத்து நின்றாள். அதனால், அவனை எப்படி உண்ணுவது என்று அவள் சிந்தித்தால். ஆனால், மறுபுறம் அனுமனுக்கோ, இதனால் மிகவும் காலதாமதம் ஏற்பட்டதால், அவனும் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தான். இப்போது தனது உடலை மிகவும் சிறியதாக சுருக்கிக் கொண்டான். சுரசையின் வாயினுள் புகுந்தான். தன் வாயில் புகுந்த அவனை விழுங்க நினைத்து, அவள் செயல்படும் முன்னரே கண் இமைக்கும் நேரத்தில் அனுமன் திரும்பி வெளியே வந்தான்.

இச்செயலை தேவர்கள் கண்டார்கள். இத்துடன் மூன்றாவது முறையாக அனுமனின் வலிமையை நேரில் கண்டதால் தேவர்கள் அவன் மீது மீண்டும் அளவற்ற நம்பிக்கை கொண்டார்கள். அனுமனைப் போற்றினார்கள்." இனி அரக்கர்களின் கொட்டம் ஒரு முடிவுக்கு வந்து விடும்" என்று கூறிக் கொண்டார்கள்.

மறுபுறம் கட்டை விரலின் அளவு சிறுத்து அவளது வாயில் கண்மூடித் திறப்பதற்குள் புகுந்து வெளி வந்த அனுமன், மீண்டும் பேருருவம் கொண்டு கருமமே கண்ணுடையவனாகத் தென்திசை நோக்கிச் செல்லத் தொடங்கினான். அவனது திறமையைக் கண்ட சுரசை, தனது உண்மையான ரூபத்தை எடுத்தாள். அனுமனின் முன்னாள் போய் நின்று, பெற்ற தாயை விட அன்புடன் அவனை நோக்கினாள் பின்னர் அனுமானிடம் ," வீர அனுமனே! இனிமேல் உன்னால் முடிக்க முடியாத செயல் உலகத்தில் ஒன்றுமே இல்லை! எத்தனைக் கடினமான காரியத்தையும் நீ மிக எளிதில் முடித்து விடுவாய் !" என்று சொல்லி, இனிமையாகப் புகழ்ந்து நின்றாள் நாகமாதா!

நாகமாதாவின் வாழ்த்துக்களைப் பெற்ற அனுமான் அந்த மகிழ்ச்சியில் மேலும் இலங்கை நோக்கி விரைந்தான். அது கண்டு கின்னரர்கள் கீதம் இசைக்க, தேவ மகளிர் "கொடிய அரக்கர்களிடம் இருந்து நமக்கும் ஒரு விடிவு காலம் வந்தது" எனக் கூறி ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.

அனுமன் இலங்கையை மிக அருகில் நெருங்கும் சமயம் ஆலகால விஷத்தைக் காட்டிலும் கருத்து, மலை போல தோற்றம் கொண்ட கொடிய அரக்கியான அங்காரதாரை என்பவள் அனுமன் தன் மீதாகச் செல்வதைக் கண்டுக் கோபம் கொண்டாள். அந்தக் கோபத்துடன் கடலின் மேல் மற்றும் ஒரு கடல் விளங்குவது போல," இங்கு யாரடா என்னைத் தாண்டிச் செல்வது?" என்று அதட்டிக் கொண்டே, கடலின் மீது அவனது வழிக்குக் குறுக்கே வந்து நின்றாள். பிறைச் சந்திரனைப் போன்று அவளுடைய கடித்த வாய் வழியே கோரப் பற்கள் வெளிப்பட்டு ஒளி வீசின. அப்போது அந்த அரக்கி பெரும் தோற்றத்தைப் பெற்று அலைவீசுகின்ற நீண்ட கடல் நீர் தனது வலிய கால்களைக் கழுவவும், தனது தலை ஆகாய உச்சியை முட்டவும் உயர்ந்து நின்றாள். ஆராயும் திறனுள்ள அனுமன் அந்த கொடிய அரக்கியைக் கண்டு நொடிப் பொழுதில்," அறத்தையும், அருளையும் விழுங்கி விட்ட பெண் என்ற ரூபத்தில் வந்த பிசாசு தான் இவள்" என்று அவளது இயற்கை சுபாவத்தைக் கணித்து விட்டான். மேலும் அனுமான்,' இவளது திறந்த வாயினுள் சென்றாலன்றி, பெரிய பூமியிலும் ஆகாயத்திலும் தான் வேறாகச் செல்ல வழியில்லை' என்பதை அறிந்து சிறிதே துன்பம் கொண்டான். அத்துன்பத்தை சற்றே ஒதுக்கிய அவன் அவளது வாயினுள் புகுந்தான். அந்த அரக்கி," ஆகா..., பலி ஆடு தானாக தேடி வந்தது போல, நமக்கு சிரமம் கொடுக்காமல் இந்தக் குரங்கே நமது வாய்க்குள் புகுந்து விட்டதே. பழங்களை உண்டு, உண்டு இதன் ஈரல்கள் சுவையாக இருக்கும். இன்று அருமையான உணவு கிடைத்து விட்டது" என்று மகிழ்ந்து கொண்டு இருந்தாள். மறுபுறம், தேவர்களோ," ஐய்யோ! அனுமன் தானே நமது நம்பிக்கை நக்ஷத்திரம் அவனுக்கு என்ன ஆனதோ?" என்று திகைத்து நின்றனர்.

அப்போது, ஒரு பெரும் கூக் குரலை வானில் நின்ற தேவர்கள் செவி மடுத்தனர். அது அந்த அரக்கியின் கூக்குரல் தான். ஆம்! அங்காரதாரை என்ற பெயர் கொண்ட அந்த அரக்கியின் வாயினுள் சென்ற அனுமான், தூணைப் பிளந்து கொண்டு நரசிம்ம மூர்த்தி கிரதயுகத்தில் வெளியே வந்தது போல, இப்போது வீர அனுமனும் அந்த அரக்கியின் குகை போன்ற வயிற்றை கிழித்துக் கொண்டு வெளிப்பட்டான். அப்படி வெளிப்பட்ட அனுமனின் கைகளில் அந்த அரக்கியின் குடல்கள் காணப்பட்டன. அப்போது அனுமன் மலைக்குகையினுள் நுழைந்து அங்கு வாழ்கின்ற பாம்புகளைத் தூக்கிக் கொண்டு மேலெழுந்த கருடனைப் போல் காட்சி அளித்தான். அனுமனின் அச்செயலைக் கண்ட தேவர்கள் மகிழ்ந்து ஆர்பரித்தனர். "இதை விட அனுமனின் வீரச் செயலுக்கு இனி வேறு என்ன சான்று தேவை?" என்று கூறிக் கொண்டனர். பிரமதேவனும், சப்த ரிஷிகளும் கூட அனுமனின் வீரச்செயலைப் பாராட்டினார்கள். அவன் மீது மலர் தூவினார்கள்.

இவ்வாறாக அரக்கி அங்காரதாரையை வதைத்து ஒழித்த அனுமான், மீண்டும் தனது பயணத்தை ஆகாய மார்க்கமாகத் தொடர்ந்தான். அவன் மேற்கொண்டு தாமதம் ஆவதை உணர்ந்து, இனி நமக்கு அரக்கர்களால் எந்த தொந்தரவும் வரக் கூடாது என்றால், அதற்கு ஸ்ரீ ராமபிரானின் மந்திரத்தை உச்சரிப்பது தான் ஒரே வழி என்ற முடிவுக்கு வந்தான். உடனே தடைகளைக் கடக்க "ஜெய் ராம், ஸ்ரீ ராம்,ஜெய் ஜெய் ராம்" எனக் கூறிக் கொண்டே எவ்வித இடையூறும் இன்றி இலங்கையை அடைந்தான். ஆனால், அங்கும் அரக்கர்களால் ஏதேனும் வலை விரிக்கப் பட்டு இருக்கலாம் என்று சாதுர்யமாக உணர்ந்த அனுமான். இலங்கையை அடைந்து இருந்தும், இலங்கையில் கால் பதிக்காமல், அதற்கு மிக சமீபத்தில் தீவு போலக் காணப்பட்ட பவள மலையில் வேகமாக வந்து தனது பலமான கால்களைப் பதித்தான். அப்போது அனுமனின் பாரத்தைத் தாங்காத அந்த மலை தள்ளாடித் தன்னிடம் இருந்த நவ ரத்தினங்களை கீழே சிந்தியது.

பவள மலையின் மீது நின்ற அனுமான், இலங்கை நகரத்தை அங்கு இருந்த படியே உற்று நோக்கினான். அவ்வாறு பார்த்த அனுமன் இலங்கையின் எழிலையும், சிறப்பையும் கண்டு வியப்புற்றான்.' தேவர்கள் வாழ்கின்ற தேவலோகம் கூட இந்த அழகுக்கு ஈடாகுமா? இல்லை இலங்கைக்கு உவமையாகத் தான் தேவ லோகத்தைக் கூற முடியுமா? இலங்கையின் உள்ளிடத்தின் அளவு எழுநூறு யோசனை தூரம் என்று அறிந்தோர் கூறுவர். ஆயினும், அந்தப் பேர் அறிஞர்கள் கூட மிக்க பரப்பினுடைய இந்நகரின் எல்லை இல்லாத காட்சிகளை எல்லாம் தமது கண்ணோடு முழுவதுமாகக் காண்பது அரிது! ஆம், இலங்கை மாநகரம் அத்தனை அழகும், சிறப்பும் வாய்ந்தது!" என்று எண்ணினான் அனுமான். அதே சமயத்தில் இவ்வளவு அழகு கொண்ட தங்கத்தால் ஆன இந்த சுவர்ண இலங்கை இராவணின் தீய செயலால் அழியப் போகின்றதே என நினைத்து வருந்தவும் செய்தான் ஆஞ்சநேயன்.' பகைவருக்கும் அருள்வாய் நல்ல நெஞ்சே' என்பது போல மிகுந்த கனிவு மிக்க அனுமான் இவ்வாறாக பவள மலையில் இறங்கி இலங்கையை மேலும் ஆராயத் தொடங்கினான்.