எழுச்சிப் படலம் - 890

bookmark

மண்டலாதிபர்கள் நெருங்கிச் செல்லுதல்

890.

‘கண்டிலன் என்னை’ என்பார்;
   ‘கண்டனன் என்னை’ என்பார்;
‘குண்டலம் வீழ்ந்தது’ என்பார்;
   ‘குறுக அரிது. இனிச்சென்று’ என்பார்;
‘உண்டுகொல். எழுச்சி?’ என்பார்;
   ‘ஒலித்தது சங்கம்’ என்பார்;
மண்டல வேந்தர் வந்து
   நெருங்கினர். மயங்க மாதோ.
 
சங்கம் ஒலித்தது- (சிலர்) சங்கு ஒலித்தது; என்பார் - என்பவரும்
;  எழுச்சி  உண்டு கொல்  -  (அரசன்) புறப்பாடு இருக்கும்போலும்;
என்பார் -  என்பார்களும்;  மண்டல  வேந்தர்  -  பெருந்திரளான
அரசர்கள்; மயங்க  வந்து  -  ஒன்றாகச்  சேர்ந்து வந்து; என்னைக்
கண்டிலன் - (சிலர்) என்னைக் (இவ்வரசன்) காணவில்லை; என்பாரும்
-  என்பவரும்; என்னைக் கண்டனன் - (சிலர்) என்னைக் கண்டான்;
என்பாரும் - என்பவரும்;  குண்டலம்  வீழ்ந்தது  -  (சிலர்) எனது
குண்டலம்  கீழே  வீழ்ந்து விட்டது; என்பாரும் - என்பவரும்; இனிச்
சென்று - (சிலர்)  இனிமேல் போய்; குறுக அரிது என்பார் - (அந்த
அரசனை)   அணுக   முடியாது  என்பார்களுமாகி;  நெருங்கினர் -
(அரசனைத் தொடர்ந்து) நெருங்கி நின்றார்கள்.

வந்திருந்த   மண்டல  அரசர்கள்    ஒவ்வொருவரும்   இவ்வாறு
கூறிக்கொண்டே வந்து தசரதனை நெருங்கினர் என்பது.           74