எழுச்சிப் படலம் - 889
அந்தணர் ஆசிகூற மாதர் பல்லாண்டிசைத்தல்
889.
இருபிறப்பாளர் எண்ணா
யிரர். மணிக் கலசம் ஏந்தி.
அரு மறை வருக்கம் ஓதி.
அறுகு நீர் தெளித்து வாழ்த்தி.
வரன்முறை வந்தார். கோடி
மங்கல மழலைச் செவ் வாய்ப்
பரு மணிக் கலாபத்தார். பல்
லாண்டு இசை பரவப் போனான்.
இருபிறப்பாளர் எண்ணாயிரர் - எண்ணாயிரம் அந்தணர்கள்;
மணிக் கலசம் ஏந்தி - இரத்தின கும்பங்களைக் கையில் ஏந்திக்
கொண்டு; அருமறை - உணர்வதற்கு அரிய வேதமந்திரங்களின்;
வருக்கம் ஓதி-தொகுதிகளை ஓதிக் கொண்டு; அங்கை நீர் தெளித்து
- (தம்) கையால் கலச நீரைத் தெளித்து; வாழ்த்த - வாழ்த்துக்
கூறவும்; மங்கல மழலைச் செவ்வாய் - மங்கலமான மழலைச்
சொல்லைப் பேசும் சிவந்த வாயையும்; பருமணிக் கலாபத்தார் -
பருத்த மாணிக்கங்களாலான மேகலையையும் உடையவர்களாகிய;
வரன்முறை வந்தார் - பரம்பரையாக அரசருக்குப் பல்லாண்டு பாடும்
குலத்தில் பிறந்தவர்களான; கோடி - கோடிக்கணக்கான பெண்கள்;
பல்லாண்டு இசை பரவ - பல்லாண்டை இசையோடு பாடிவரவும்;
போனான் - சென்றான்.
தசரதன் செல்லும்போது அந்தணர் வேத மந்திரங்களைச் சொல்லிக்
கலச நீர் தெளித்து வாழ்த்த. மங்கையர் பலர் பல்லாண்டு பாடினர்.
இரு பிறப்பாளர் - உபநயனத்திற்குமுன் ஒரு பிறப்பும்.
உபநயனத்தின்பின் ஞானப் பிறப்பான மற்றொரு பிறப்பும் ஆகிய இரு
பிறப்புடையவர் அந்தணர். மணிக் கலசம் - பூரண கும்பம் -
மங்கலத்திற்காகப் பூரண கலசம் எடுத்தல் மரபு. 73
