எழுச்சிப் படலம் - 887
பரத சத்துருக்கனர் செல்லுதல்
887.
பொரு களிறு. இவுளி பொன் தேர்
பொலங் கழல் குமரர். முந்நீர்
அரு வரை சூழ்ந்தது என்ன.
அருகுபின் முன்னும் செல்ல.
திரு வளர் மார்பர். தெய்வச்
சிலையினர். தேரர். வீரர்.
இருவரும். முனி பின் போன
இருவரும் என்ன. போனார்.
பொரு களிறு - போர் செய்வதற்கான யானைகளும்; இவுளி
பொன்தேர்- குதிரைகளும் அழகிய தேர்களும்; பொலங் கழல் குமரர்
- பொன்னாலான வீரக் கழல் பூண்ட காளையரும்; முந்நீர் அருவரை
- கடத்தற்கரிய மலையைக் கடலானது; சூழ்ந்தது என்ன - சூழ்ந்தாற்
போல; அருகு முன் பினும் செல்ல - (தமக்குப்) பக்கமாக முன்னும்
பின்னும் செல்ல; திருவளர் மார்பர் - வீரலக்குமி தங்கிய
மார்பையுடையவர்களும்; தெய்வச் சிலையினர் - தெய்வீகத்
தன்மையுள்ள வில்லை யுடையவர்களும்; தேரர் வீரர் -
தேர்களையுடையவரும். வீரர்களுமாகிய; இருவரும் - (பரத -
சத்துருக்கன்) இருவரும்; முனிபின் போன - (விசுவாமித்திர) முனிவன்
பின்னே சென்ற; இரு வரும் என்ன - (இராம லக்குவர் என்ற)
இருவரும் போல; போனார் - (வசிட்ட முனிவன் பின்னே)
சென்றார்கள்.
அருவரை பரத சத்துருக்கனர்களுக்கும். கடல் நால்வகைப்
படைகளுக்கும் உவமையாம். வசிட்டன் பின்னே செல்லுகின்ற பரத -
சத்துருக்கனர்களுக்கு விசுவாமித்திரன் பின்னே சென்ற
இராமலக்குமணர் உவமையாவர். 71
