எழுச்சிப் படலம் - 886

bookmark

வசிட்டன் செல்லுதல்

சிவிகையில் வசிட்டர் செல்ல. பரதசத்துருக்கனர் அவர்பின் போதல்
 
886.

செவி வயின் அமிர்தக் கேள்வி
   தெவிட்டினார். தேவர் நாவின்
அவி கையின் அளிக்கும் நீரார்.
   ஆயிரகோடி சூழ.
கவிகையின் நீழல். கற்பின்
   அருந்ததி கணவன். வெள்ளைச்
சிவிகையில். அன்னம் ஊரும்
   திசைமுகன் என்ன. சென்றான்.
 
கற்பின்    அருந்ததி  கணவன்  -  கற்புடைய  அருந்ததிக்குக்
கணவனான  வசிட்ட  முனிவன்; செவி வயின் - (தம்) செவி மூலமாக;
அமுதக்  கேள்வி  -  அமுதம்  போல்  இனிய  நூற்  கேள்விகளை;
தெவிட்டினார்  - தெவிட்டும் அளவிற்கு மிகுதியாகக் கேட்டவர்களும்;
தேவர் நாவின் - தேவர்கள் நாவினால்; அவிகையின் - சுவைக்கின்ற
அவிசைத்  தம்  கைகளால்;   அளிக்கும்   நீரார்   -  கொடுக்கும்
இயல்புடைய   அந்தணர்களும்;  ஆயிரங்கோடி  சூழ  -  ஆயிரவர்
தன்னைச் சுற்றிவர; கவிதையின் நீழல்- குடை நிழலிலே; வெள்ளைச்
சிவிகையின்  - வெண்மையான  பல்லக்கிலே;  அன்னம்  ஊரும் -
அன்ன ஊர்தியிலே ஏறிச் செல்லும்; திசைமுகன் என்ன - நான்முகன்
போல; சென்றான் - போனான்.

அருந்ததி   கணவனான வசிட்டன் ஆயிரங்கோடி அந்தணர் சூழக்
கவிகையின்  நீழலில்  வெள்ளைப்  பல்லக்கில் நான்முகனைப் போலச்
சென்றான்  என்பது.  ஆயிரங்கோடி -  பலர். வெள்ளைச் சிவிகையில்
செல்லும்  வசிட்டனுக்கு  வெள்ளையன்னத்தில்  செல்லும்  நான்முகன்
ஊர்தியாலும் தொழிலாலும் ஒப்பாவன்.                        70