எழுச்சிப் படலம் - 882

bookmark

சுமித்திரையைச் சூழ்ந்து மகளிர் செல்லுதல்

882.    

செங் கையில். மஞ்ஞை. அன்னம்.
   சிறு கிளி. பூவை. பாவை.
சங்கு உறை கழித்த அன்ன
   சாமரை. முதல தாங்கி.
‘இங்கு அலது. எண்ணுங்கால். இவ்
   எழு திரை வளாகம்தன்னில்
மங்கையர் இல்லை’ என்ன.
   மடந்தையர். மருங்கு போனார்.
 
எண்ணுங்கால்     - ஆராயுமிடத்து; இவ் எழுதிரை - இந்த  ஏழு
கடல்களால் சூழப்பெற்ற; வளாகம் தன்னில் - மண்ணுலகத்தில்;  இங்கு
அலது - இந்த இடத்தில் (அயோத்தி) அல்லாமல்; மங்கையர்  இல்லை
-  பெண்கள்  வேறு  இடத்தில்  இல்லை; என்ன - என்று  (கண்டவர்)
கருதுமாறு;(பெருந்திரளாக); மடந்தையர் - மகளிர்;    செங்கையில் -
தம்முடைய   அழகிய   கையில்;   மஞ்ஞை  அன்னம்  -   மயிலும்
அன்னமும்;  சிறுகிளி - சிறிய கிளியும்; பூவை பாவை - நாகணவாய்ப்
பறவையும்   பாவைகளும்;   சங்கு   உறை   கழிந்த    அன்ன  -
உறையிலிருந்து  அப்போது  தான்  எடுத்த  சங்குபோன்ற; சாமரை  -
வெண்மையான  சாமரையும்;  முதல  -  முதலியவற்றையும்;  தாங்கி -
தாங்கிக்  கொண்டு;  மருங்கு -  சிவிகையின்  அருகில்; போனாார் -
சென்றார்கள்.

பாங்கியர்     சூழச் செல்லும் சுமித்திரையின் தோழியர்  தம்முடைய
கைகளில்   மயில்   முதலானவற்றைத்   தாங்கிக்   கொண்டு   உடன்
சென்றார்கள் என்பது.                                       66