எழுச்சிப் படலம் - 870
மகளிர் யானையைக் கண்டு மருண்டார் எனல்
யானை வரவு கேட்டு மகளிர் நிலைகெட்டு ஓடுதல்
870.
பந்தி அம் புரவிநின்றும்
பாரிடை இழிந்தோர். வாசக்
குந்தள பாரம் சோர.
குலமணிக் கலன்கள் சிந்த.
சந்த நுண் துகிலும் வீழ.
தளிர்க் கையால் அணைத்து. ‘சார
வந்தது வேழம்’ என்ன.
மயில் என இரியல் போவார்.
பந்திஅம் புரவி நின்றும்- வரிசையாகச் செல்லும் அழகிய
குதிரைகளிலிருந்து; பாரிடை இழிந்தோர்- நிலத்தில் இறங்கின மகளிர்;
வேழம் சார - யானை அருகே; வந்தது என்ன - வந்தது என்று;
வாசக் குந்தளம் - மணம் கமழும் கூந்தல்; பாரம் சோர - சுமை
அவிழ்ந்து தொங்கவும்; குல மணிக் கலன்கள் - இரத்தினங்கள் பதித்த
அணிகலன்கள்; சிந்த - கீழே சிதறவும்; சந்தம் நுண்துகிலும் -
அழகிய நுண்ணிய ஆடையும்; வீழ - கீழே விழ; தளிர்க் கையால்-
(ஆடையை) தளிர் போன்ற கையால்; அணைத்து - (ஆடை விழாமல்)
பற்றிக் கொண்டு; மயில் என - மயிலைப் போல; இரியல் போவார் -
நிலை தடுமாறி ஓடினார்கள்.
பந்தி: குதிரை லாயம் - தன்மை நவிற்சியணி. குதிரையிலிருந்து
இறங்கின மகளிர். அருகே யானை வரக்கண்டு அஞ்சித் தமது கூந்தல்
விரிந்ததையும். அணிகள் சிதறுவதையும் பொருட்படுத்தாமல்
அரையாடை அவிழ்ந்ததனால் மானத்திற்கு இழுக்கு நேருமே என்ற
கருத்தில் அதனை மட்டும் அவிழாவாறு கைகளால் தழுவிப் பிடித்துக்
கொண்டு மயில்போல நிலைகெட்டு ஓடலாயினர் என்பது. 54
