எழுச்சிப் படலம் - 864
மகளிர் கண்ணைப் பார்த்து ஆடவர்
கண்கள் களித்தன எனல்
864.
மண் களிப்ப நடப்பவர் வாள் முக
உண் களிக் கமலங்களின் உள் உறை
திண் களிச் சிறு தும்பி என. சிலர்
கண் களித்தன. காமன் களிக்கவே.
மண் களிப்ப- பூமிதேவி மகிழ; நடப்பவர் - மெல்லடி வைத்து
நடக்கும் மகளிரின்; வாள்முகம் - ஒளி பொருந்திய முகமாகிய; களி
உண் கமலங்களினுள் உறை - மது உண்டு தாமரையில் தங்கியுள்ள;
திண்களி - மிக்க களிப்புடைய; சிறு தும்பி என - சிறு வண்டுகளாகிய
கண்கள் (ஆடவரை மயக்கி மகிழ்வது போல்); காமன் களிக்க -
மன்மதனும் மகிழும்படி; சிலர் கண்களித்தன - சில ஆடவர்
கண்களும் மாதர் முகக்கமலம் கண்டு மகிழ்ந்தன. 48
