எழுச்சிப் படலம் - 863
மகளிர் சிலம்பும் குதிரையும் ஒலித்தல்
863.
உழை கலித்தன என்ன உயிர்த் துணை
நுழை கலிக் கருங் கண்ணியர் நூபுர
இழை கலித்தன; இன் இயமா. எழும்
மழை கலித்தென. வாசி கலித்தவே.
உயிர்த்துணை நுழை- ஆண்களின் உயிர்வரை சென்று நுழையும்;
கலி - வலிமையுள்ள; கருங்கண்ணியர் - கரிய கண்களையுடைய
மாதர்கள் பூண்ட; நூபுரம் இழை - சிலம்பென்னும் அணிகள்; உழை
கலித்தன என்ன - மான்கள் செருக்கி எழுந்தன எனத்தக்க
தோற்றமுடைய உழை என்னும் பண் ஒலித்தாற் போல; கலித்தன -
ஒலித்தன; இன் இயமா - (அவ்வாறு ஒலித்தவற்றுக்கு) இனிய
பக்கவாத்தியமாக; எழுமழை கலித்து என -(வானத்தில்) எழும் மேகம்
இடித்தாற் போல; வாசி கலித்த - குதிரைகள் கனைத்தன.
ஒருவர் பாடுகையில் அதனைச் சிறப்பித்தற்காக மத்தளம் முதலிய
வாத்தியங்கள் முழக்கப்படுவது மரபு; அதுவே பக்கவாத்தியம்
எனப்படும். மாதர் சிலம்புகள் ஒலிக்க அந்த இசைக்குப் பக்க
வாத்தியம் என்று சொல்லுமாறு குதிரைகள் கனைத்தன. இழை -
இழைத்துச் செய்யப்பெறும் ஓர் அணி. 47
