எழுச்சிப் படலம் - 858

bookmark

அந்தணர் மிதிலைக்குச் செல்லுதல்

அந்தணர் முற்பட்டுச் செல்லுகை
 
858.    

குடையர். குண்டிகை தூக்கினர். குந்திய
நடையர். நாசி புதைத்த கை நாற்றலர்.--
கட களிற்றையும் காரிகையாரையும்
அடைய அஞ்சிய. அந்தணர் - முந்தினார்.
 
கட    களிற்றையும் - மத   யானையையும்; காரிகையாரையும் -
மகளிரையும்;  அடைய  -  பக்கத்தில்  செல்ல; அஞ்சிய அந்தணர் -
அச்சம்  கொண்டுள்ள அந்தணர்; குடையர் - குடை   பிடித்தவர்களும்;
குந்திய    நடையர்   -   குதிகால்   தரையில்   படாமல்   உந்திச்
செல்பவர்களும்;    குண்டிகை    தூக்கினர்    -    கமண்டலத்தை
ஏந்தியவர்களும்;  நாசி  புதைத்த  கை  -  மூக்கை  மூடிய  கையை;
நாற்றலார்  -   எடுக்காதவர்களுமாகிய;   முந்தினார்  -  முற்பட்டுச்
சென்றார்கள்.

குந்திய   நடையினர்: தம் நடையால் எவ்வுயிர்க்கும் தீங்கு வராதபடி
பாதத்தால் உந்தி நடக்கும் நடையை உடையவர். நாசி புதைத்த   கை -
பிராணாயாமம்  செய்யும் வலக்கையைக்  கீழே  தொங்கவிடமாட்டார்கள்.
மாதரை   நெருங்கினால்   ஈட்டிய   தவமும்.   புண்ணியப்   பயனும்.
உயிரினும்.   மேலான   ஒழுக்கமும்  அழியும்.  அதனால்   அவர்கள்
நெருங்க அஞ்சினர்.                                        42