எழுச்சிப் படலம் - 856
குதிரை ஒருபெண்ணைத் தூக்கிச் செல்லுதல்
மாது ஒருத்தியைக் கொண்டு ஓடும் குதிரைத் தோற்றம்
856.
‘இம்பர் நாட்டின் தரம் அல்லள். ஈங்கு இவள்;
உம்பர் கோமகற்கு’ என்கின்றது ஒக்குமால் -
கம்ப மா வர. கால்கள் வளைத்து ஒரு
கொம்பு அனாளைக் கொண்டு ஓடும் குதிரையே!
கம்ப மா வர- யானை தொடர்ந்து வர; ஒரு கொம்பு அனாளை -
பூங்கொம்பு போன்ற ஒருத்தியை; கொண்டு - சுமந்து கொண்டு;
கால்கள் வளைத்து - முன்னங் கால்களை வளைத்து; ஓடும் குதிரை -
ஓடுகின்ற குதிரையானது; ஈங்கு இம்பர் நாட்டின் - இங்கே
இவ்வுலகத்திலே (வாழ்வதற்கு); தரம் அல்லள் - ஏற்றவளாக இல்லை;
இவள் - இந்தப் பெண்; உம்பர் கோமகற்கு - தேவர்கள் தலைவனான
இந்திரனுக்கு (உரியவள்); என்கின்றது - என்று கூறுவதை; ஒக்கும் -
ஒத்திருக்கும்.
ஒரு குதிரை ஒரு பெண்ணையேற்றிக் கொண்டு தாவிச்
செல்லும்போது வானத்தில் செல்வதுபோல் உள்ளது. அது தேவர்களின்
தலைவனான இந்திரனுக்கு உரியவள் இவள் என்று அவனிடம்
அவளைக் கொண்டு செல்வது போன்றுள்ளது என்றார் -
தற்குறிப்பேற்ற அணி. கம்ப மா - யானை. 40
