எழுச்சிப் படலம் - 849
849.
சுழியும் குஞ்சிமிசைச் சுரும்பு ஆர்த்திட.
பொழியும் மா மத யானையின் போகின்றான்.
கழிய கூரிய என்று ஒரு காரிகை
விழியை நோக்கி. தன் வேலையும் நோக்கினான்.
சுழியும் குஞ்சிமிசை- சுருண்டுள்ள (தன்) தலைமயிர் மேல்;
சுரும்பு - வண்டுகள்; ஆர்த்திட- ஆரவாரிக்க; மாமதம் பொழியும் -
மிக்க மதநீரைப் பொழிகின்ற; யானையின் - யானையைப் போல;
போகின்றான் - செல்கின்ற ஒருவன்; ஒரு காரிகை விழியை- ஒரு
பெண்ணின் விழிகளை; கழிய கூரிய என்று நோக்கி -
மிகக்கூர்மையானவை என்று பார்த்து; தன் வேலையும் - (கண் போல
இவ்வேற்படை கூர்மையானதா என்று) தன் வேற்படையையும்;
நோக்கினான் - பார்த்தான்.
வீரன் கையில் பிடிக்கும் வேலைக் காட்டிலும் அந்தப் பெண்ணின்
கண்கள் மிகக் கூர்மையானவை என்பது. சுழிதல்: சுழிசுழியாகச்
சுருண்டிருத்தல். உயிரின் பாய்ந்து துளைக்கும் இயல்புடைய
கண்களைவிட உடலில் மாத்திரம் பாய்ந்து துளைத்துச் செல்லும் வேல்
இழிந்தது என்று அவ்வீரன் கருதினான். 33
