எழுச்சிப் படலம் - 848
848.
துணைத்த தாமரை நோவத் தொடர்ந்து. அடர்
கணைக் கருங் கணினாளை ஒர் காளைதான்.
‘பணைத்த வெம் முலைப் பாய் மத யானையை
அணைக்க. நங்கைக்கு. அகல் இடம் இல்’ என்றான்.
துணைத்த தாமரை- இரண்டான தாமரை போன்ற கால்கள்; நோவ
- வருந்தும்படி; தொடர்ந்து - தொடர்ந்து நடந்து வந்து; அடர்-
(தன்னை) வருத்துகின்ற; கணைக் கருங்கணினாளை - அம்பைப்
போன்று கூரிய கருங்கண்களையுடைய ஒரு பெண்ணைப் (பார்த்து);
ஒர் காளை - ஒரு வீரன்; நங்கைக்கு- இந்தப் பெண்ணின்; பணைத்த
வெம்முலை - பருத்த விரும்பத்தக்க முலைகளாகிய; மதம் பாய்
யானையை - மதநீர் ஒழுகும் யானையை; அணைக்க - தழுவிக்
கொள்ள; அகல் இடம் - (மார்பாகிய) விரிந்த இடம்; இல் என்றான் -
இல்லை என்று கூறினான்.
(வி.ரை) ஒருவனது மார்பில் அடங்காதவாறு இப் பெண்ணின்
தனங்கள் பருத்துள்ளன என்பது. கணைக் கணினாள் - உவமைத்
தொகை - உருவக அணி. 32
