எழுச்சிப் படலம் - 845
சேனையின் செறிவு
845.
தோள் மிடைந்தன. தூணம் மிடைந்தென;
வாள் மிடைந்தன. வான்மின் மிடைந்தென;
தாள் மிடைந்தன. தம்மி மிடைந்தென;
ஆள் மிடைந்தன. ஆளி மிடைந்தென;
தூணம் - கல்தூண்கள்; மிடைந்து என - நெருங்கினாற் போல;
தோள் மிடைந்தன - (வீரர்களின்) தோள்கள் நெருங்கின; வான்மின் -
வானத்து மின்னல்கள்; மிடைந்து என - நெருங்கியிருந்தாற் போல;
வாள் மிடைந்தன - (அவர்களின்) வாட்படைகள் நெருங்கின; தம்மி
மிடைந்து என - தாமரைமலர் பின்னிய போல; தாள் மிடைந்தன -
பாதம் நெருங்கின; ஆளி மிடைந்து என - யாளிகள் நெருங்கினாற்
போல; ஆள் மிடைந்தன - காலாட் படைகள் நெருங்கின.
வீரர்கள் ஒருவரோடு ஒருவர் கைகலந்தாற் போல அவர்கள்
பாதங்களும் நெருங்கின. உவமையணியும். சொற்பொருள் பின்வரு
நிலையணியும் சேர்ந்து அமைந்துள்ளன. தூணம் - தூண் (அம் -
சாரியை) 29
