எழுச்சிப் படலம் - 844

bookmark

சேனை போர்க் களத்தை யொத்தது எனல்

844.    

அமரர் அம் சொல் அணங்கு அனையார் உயிர்
கவரும் கூர் நுதிக் கண் எனும் காலவேல்.
குமரர் நெஞ்சு குளிப்ப வழங்கலால்.
சமர பூமியும் ஒத்தது - தானையே.
 
தானை  - அந்தச் சேனையானது; அம்சொல் அமரர் அணங்கு -
இனிய  மொழி  பேசுபவரும்.  தெய்வப்  பெண்ணை;  அனையார்  -
ஒத்தவருமாகிய  மகளிர்;  உயிர்  கவரும் - (தமக்கு  இலக்கானவரின்)
உயிரைக் கவரவல்ல; கூர் நுதிக்கண் எனும் - கூரிய நுனியோடு கூடிய
கண்கள்  என்று  சொல்லப்படுகின்ற;  காலன்வேல்  -   இயமனுடைய
வேற்படையை;   குமரர்  நெஞ்சு  -  காளையர்  நெஞ்சில்; குளிப்ப
வழங்கலால்   -   தைக்கும்படி   செலுத்துவதால்;  சமர  பூமியும் -
போர்க்களத்தையும்; ஒத்தது - ஒத்துள்ளது.

போர்க்களம்     வீரர் நெஞ்சு தைக்க வேல் வழங்குவது   போலத்
திருமணத்திற்காகச்  செல்லும்  சேனையில்  உள்ள  பெண்களின்  கண்
என்று  சொல்லக்கூடிய  கூற்றுவன் வேல் காளையர் நெஞ்சில்   பதியச்
செலுத்துவதால் தானை போர்க்களமாயிற்று என்பது - அவநுதியணி.  28