எமனாட்ட விட்டேனே

நெடு நாட்கள் குழந்தையில்லாததால் எல்லாத் தெய்வங்களையும் வேண்டியும், பலவித நோன்புகள் அனுசரித்தும், விரதங்களைக் கைக்கொண்டும் பிறந்த குழந்தை அது. தாய் தன் உயிர் போன்ற அந்தக் குழந்தையைக் காற்றுகூட சற்று அதிகமாக அதன் மீது வீசாதபடி, இருட்டுகிற நேரத்தில் வெளியே கொண்டு போனால் பட்சி தோஷம் வரும் என்று வெளியே கொண்டு போகாமல், இருட்டில் போட்டால் இருள் அடித்துவிடக் கூடாது என்றெல்லாம் பராமரித்து வளர்த்த தன் மகன் இறந்து போனவுடன் கதறி அழுகிறாள். “என்னுடைய அடி வயிறையே அவன் பத்து மாதம் குடியிருக்கும் தொட்டிலாக்கிக் கொடுத்தேனே ; அவன் என்னுடைய குழந்தை எனக்கே சொந்தம் என்று எண்ணியிருந்த என் குழந்தையை எமன் எடுத்துக் கொண்டு போய்த் தொட்டிலாட்டும்படி விட்டு விட்டேனே”என்று மனம் வெதும்பி பெற்ற வயிறு பற்றியெரிய அழும் தாயின் பரிதாபமான கதறல்.
வரமா வரங்கெடந்து
வாசு தேவன் வரம் வாங்கி
பந்தலிலே போட்டாலே
பாவ தோஷம் அடிக்கிமிண்ணு
குழியிலே போட்டாலே
குழி தோஷம் அடிக்கிமிண்ணு
அங்கத்தை இறுக்கிக் கட்டி
அடி வயிறு தொட்டி லிட்டு
நானாட்டும் தொட்டிலிலே
எமனாட்ட விட்டேனே
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
-------------