உண்டாட்டுப் படலம் - 1091

bookmark

புல்லிய கை புடைபெயரப் புரவலன் வருந்துதல்

1091.

பொய்த் தலை மருங்குலாள் ஒருத்தி. புல்லிய
கைத்தலம் நீக்கினள். கருத்தின் நீக்கலள்;
சித்திரம் போன்ற அச் செயல். ஒர் தோன்றற்குச்
சத்திரம் மார்பிடைத் தைத்தது ஒத்ததே.
 
பொய்த்தலை மருங்குலாள் - (இடையுண்டென்பதைப்) பொய்யாக்க
வல்ல  (நுண்ணிய)  இடையுடையாள்  ஒருத்தி;  கருத்தின்  நீக்கலள்;
புல்லிய   கைத்தலம்  நீக்கினள்  -  (தன்)  மனத்திலிருந்து  (கூடும்
உணர்வை)  நீக்காதவளாய்.  (மதுமயக்கால்  புறத்தே  தன் கணவனைத்)
தழுவிய  கைகளை எட்டும் எடுத்து விட்டாள்;  சித்திரம் போன்ற அச்
செயல் - விசித்திர நிகழ்ச்சி போன்ற அந்தச்  செயல்; ஓர் தோன்றற்கு
-  கணவன் ஒருவனுக்கு;  சத்திரம் மார்பிடைத் தைத்தது ஒத்தது -
கைவாள்    ஒன்று     (அவன்)    மார்பின்   இடையே   உருவியது
போன்றிருந்தது.

“வீழும்     இருவர்க்கு இனிதே. வளியிடைப் போழப் படாமுயக்கு”
(திருக். 1108) ஆதலின். அவள்  கைத்தலம்  நீக்கியது.  அவனுக்கு வாள்
இடைப்புகுந்தது   போன்ற  துயர்  விளைத்தது   என்க.   சித்திரம்  -
விசித்திரம்.   “புல்லிக்கிடந்தேன்;    புடைபெயர்ந்தேன்   அவ்வளவில்
அள்ளிக்  கொள்வு  அற்றே   பசப்பு”   (திருக்.  1187) என்ப வாகலின்.
கைத்தலம்  நீக்கியது  (விசித்திரம்  போன்ற  செயல்  ஆனது. கருத்தின்
நீக்காதவள்    (மதுமயக்கத்தால்)    கைத்தலம்    நீக்கினள்    என்க.
மதுமயக்கம்  இல்லையெனில்.  கைத்தலம்  நீக்கல்  நிகழ்ந்தே இருக்காது
என்பதாம். “பூ இடைப் படினும்  யாண்டுகழிந்தன்ன  நீருறை  மகன்றில்
புணர்ச்சி  போலப்  பிரிவு  அரிதாகிய   தண்டாக்காமம்”   (குறுந். 57)
என்க.                                                    45