உண்டாட்டுப் படலம் - 1090

bookmark

காதலி கண்ணீர் உகுக்கக் காதலன் வினாதல்

1090.

தொகுதரு காதற்குத் தோற்ற சீற்றத்து ஓர்
வகிர் மதி நெற்றியாள் மழைக் கண் ஆலி வந்து
உகுதலும். ‘உற்றது என்?’ என்று. கொற்றவன்
நகுதலும். நக்கனள். நாணும் நீங்கினாள்.
 
தொகுதரு     காதற்குத் தோற்ற - நிறைந்த காதலின் ஆற்றற்குத்
தோற்றுப்போன:    சீற்றத்து     ஓர்வகிர்மதி    நெற்றியாள்    -
வெகுளியையுடைய   (எண்ணாட்)     பிறை     போன்று    வகிர்ந்த
நெற்றியினையுடையாள்  ஒருத்தி;  மழைக்கண் ஆலிவந்து உகுதலும் -
(பிரிவுத்   துயர்   வெளிப்படுமாறு)   மழைபோன்று  கண்களிலிருந்து
கண்ணீர்த்  துளிகளை விட்டவுடன்; உற்றது என்? என்று கொற்றவன்
நகுதலும்  -  உனக்கு  என்ன  நேர்ந்தது?   என்று  கணவன் சிரித்த
அளவில்; நாணும் நீங்கினாள் - (அவளும் நாணம் நீங்கி); நக்கனள் -
சிரித்து மகிழ்ந்தாள்.

நான்    வந்தது அழுகைக் குரியதோ? சிரித்து மகிழ்தற்கு உரியதோ.
மகிழ்விற்குரியது   எனின்   நீ   சிரித்தாக   வேண்டும்  என.  வேறு
வழியின்றி. நாணம் விட்டுச் சிரித்தனள் என்க.                    44