உண்டாட்டுப் படலம் - 1089

bookmark

காதலி காதலன்வீடு தேடிச் செல்லக் காரணம் யாதனெல்

1089.

சினம் கெழு வாட் கை ஓர் செம்மல்பால். ஒரு
கனங் குழை மயில் அனாள் கடிது போயினாள்;
மனம் குழை நறவமோ? மாலைதான் கொலோ?
அனங்கனோ? யார் கொலோ. அழைத்த தூதரே?*
 
சினம்கெழு வாள்கை ஓர் செம்மல் பால்-வெகுளி மிகும் வாளைக்
கையில்கொண்டுள்ள  ஒரு  வீரனிடத்து;  ஒரு  கனம்  குழை  மயில்
அனாள்   கடிது    போயினாள் - பொற்குழை   யணிந்த    மயில்
போன்றாள்   ஒருத்தி.   விரைந்து  சென்றாள்;  அழைத்த  தூதர்  -
(அவ்வாறு   அவள்   தானே  விரைந்து   செல்வதற்குக்   காரணமாய்)
அவளை   அழைத்த  தூதுக்குரியவர்;  மனம்  குழை  நறவமோ?  -
மனத்தைக்    குழையச்    செய்யவல்ல   மது    தானோ?;   மாலை
தான்கொலோ?    -   மாலைப்பொழுது  தானோ?;   அனங்கனோ?
யார்கொலோ?  -  மன்மதன்  தானோ?  வேறு  யாரேனுமோ?  (யார்
அறிவார்?)

கொல்     - அசைநிலைகள். ஐயம் எனினுமாம். மதுவும். மாலையும்.
மன்மதனும்   நாண்துறந்து  ஏகுமாறு   காமவேட்கையை   மிகுவிக்கும்
பொருள்களாம்    என்றவாறு   அவளுக்குரிய    நாணைப்    பிரித்து
அழைத்துச்   செல்லுதலின்   கள்ளோ   என்றும்.   புலப்படா   நிறம்
தருதலின்  மாலையோ  என்றும்.  ஊரார்  உற்று  நோக்காது  விரைந்து
செலுத்துதலின்  அநங்கனோ என்றும்  ஒன்றும்  துணிய  இயலாமையின்
ஐயுற்று  யார்கொலோ  என்றும்   கூறினார்.  கள்.  நாணம்  போக்கும்
என்பது:  “நாண்  என்னும்  நல்லாள்   புறங்கொடுக்கும்  கள் என்னும்
பேணாப்  பெருங்குற்றத்  தார்க்கு”  (திருக்.  924)   உடம்பும்  உயிரும்
வாடியக்   காலும்.   என்னுற்றன   கொல்   இவையெனின்   அல்லது.
கிழவோற்   சேறல்  கிழத்திக்கு  இல்லை”   (தொல்   பொருளியல்  9)
என்பராதலின்.  மரபை மீறி இவள்  காதலனை  நோக்கிச்  சென்றதற்குக்
காரணம்  மதுவா.  மாலையா.  மன்மதனா?  இல்லை  மூன்றுமா? எனத்
தெரியோம் என்ற போக்கில் அதிகாரத்தால் மதுவைப் பழித்தவாறு.   43