உண்டாட்டுப் படலம் - 1062

bookmark

காரிகையொருத்தி களியால் தடுமாறல்

1062.

மின் என நுடங்குகின்ற
   மருங்குலாள் ஒருத்தி. வெள்ளை
இன் அமிழ்து அனைய தீம் சொல்.
   இடை தடுமாறி என்ன.
வன்ன மேகலையை நீக்கி.
   மலர்த் தொடை அல்குல் சூழ்ந்தாள்;
பொன்னரிமாலை கொண்டு.
   புரி குழல் புனையலுற்றாள்.
 
மின்   என நுடங்குகின்ற மருங்குலாள் ஒருத்தி - மின்னல் என
நெளிகின்ற  இடையினையுடையாள்  ஒருத்தி;  வெள்ளை இன் அமுது
என்ன  செஞ்சொல்  இடைதடுமாறி  -  வெண்ணிற இனிய அமிழ்தம்
போன்ற  செவ்விய பேச்சு   (மதுவின்  மயக்கால்) இடையில் குழறுண்டு;
அல்குல் வன்ன மேகலையை நீக்கி  மலர்த்தொடை  சூழ்ந்தாள் -
(தனது)  இடைப்  பகுதியில்   அணிந்திருந்த   அழகிய  மேகலையைக்
கழற்றிவிட்டு.   அங்கே   மலர்    மாலையைச்  சுற்றிக்   கொண்டாள்;
பொன்அரி   மாலை   கொண்டு  புரிகுழல் புனையல் உற்றாள்  -
அதுமட்டும் அன்றி. கழுத்தணியாகிய  பொன்அரி  மாலையை  எடுத்துச்
சுருண்ட கூந்தலில் அணியத் தொடங்கினாள்!

பொன்னரி     மாலை க ழுத்தணியாவதை. “சுடர்  மணித் தோளில்
தோன்றும்  பொன்  அரி  மாலை”  (கம்ப.   7636)  என்று   பின்னும்
குறிப்பர்.

மது   மயக்கு.   இடையில்   அணிவதைத்   தலை   அணியாக்கும்
தலையில் அணிவதை இடையணியாக்கும் என எள்ளுகின்றார்.

“இருதனத்து   இரவிக்கை  தனை அரையில் உடைதொடுவார்; இந்த
உடை  ரவிக்கையெனச்  சந்த   முலைக்கு   இடுவார்”  (குற்.  குற. 22)
என்பதும் இதனையொட்டி எழுந்தது எனலாம்.                    16