உண்டாட்டுப் படலம் - 1060
1060.
களித்த கண் மதர்ப்ப. ஆங்கு ஓர்
கனங் குழை. கள்ளின் உள்ளால்
வெளிப்படுகின்ற காட்சி
வெண் மதி நிழலை நோக்கி.
‘அளித்தனென் அபயம்; வானத்து
அரவினை அஞ்சி நீ வந்து
ஒளித்தனை; அஞ்சல்!’ என்று ஆங்கு.
இனியன உணர்த்துகின்றாள்.
ஆங்கு. ஓர் கனங்குழை - அங்கே. பொன்னாலியன்ற
குழையணிந்தாள் ஒருத்தி; கள்ளின் உள்ளால்வெளிப்படுகின்ற காட்சி
வெண் மதி நிழலை - மதுவின் உள்ளே பிரதிபலித்துக் தோன்றுகின்ற
அழகிய வெள்ளைத் திங்களினது பிம்பத்தை; களித்த கண் மதர்ப்ப
நோக்கி - கள்ளுண்டதனால் வந்த களிப்பு. தன் கண்களில்
தோன்றுமாறு பார்த்து; நீ வானத்து அரவினை அஞ்சி வந்து
ஒளித்தனை - மதியே. நீ வானத்தில் உன்னைத் தீண்ட வரும்
பாம்புகளுக்கு அஞ்சி இங்கு வந்து ஒளிந்திருக்கின்றாய்;
அளித்தனென் அபயம் அஞ்சல் - (ஆகையால். நான் உனக்கு)
அபயம் அளித்தேன்; அஞ்சற்க; என்று ஆங்கு இனியன
உணர்த்துகின்றாள் - என்பன போன்ற இனிய மொழிகளைக்
கூறுபவள் ஆனாள்.
சந்திர பிம்பத்தை வெண்மதி எனப் பிழையாகக் கருதி. அதற்கு
அபயமும் கொடுக்கின்றாள் என்பதனால். மது வெறி. பிழையின் மேல்
பிழைபுரிவிக்க வல்லது என உணர்த்தியவாறு. குடிவெறியினும் அபயம்
நல்கும் குணமுடையார் கோசல நாட்டார் என்பதும் குறித்தவாறு. 14
