உண்டாட்டுப் படலம் - 1059

bookmark

ஒருத்தி கள்ளில், கண்நிழலை வண்டென ஓச்சுதல்

1059.    

‘யாழ்க்கும். இன் குழற்கும். இன்பம்
   அளித்தன இவை ஆம்’ என்ன
கேட்கும் மென் மழலைச் சொல் ஓர்
   கிஞ்சுகம் கிடந்த வாயாள்.
தாள் கருங் குவளை தோய்ந்த
   தண் நறைச் சாடியுள். தன்
வாள்-கணின் நிழலைக் கண்டாள்;
   வண்டு என ஓச்சுகின்றாள்.
 
யாழ்க்கும் இன்குழற்கும் இன்பம் அளித்தன இவை ஆம் என்ன
-   வீணையின்   இசைக்கும்.  இனிய  குழலிசைக்கும்  (இசை)  இன்பம்
கொடுத்தவை   இவள்  சொற்கள்தாம்  என்னுமாறு;  கேட்கும்  மென்
மழலைச்  சொல் ஓர் கிஞ்சுகம்  கிடந்தவாயாள்  - (இனிதான ஒலி)
கேட்கச்  செய்கிற   மெல்லிய   மழலை மொழியினையும். முருக்க மலர்
அனைய  சிவந்த  வாயினையும்  உடையாள்   ஒருத்தி; தாள் கருங்கு
குவளை   தோய்ந்த  தண்  நறைச் சாடியுள்  -  தண்டினையுடைய
கருங்குவளை  மலர்  இடப்  பட்டுள்ள   குளிர்ந்த   கள்ளினையுடைய
சாடியின்  உள்ளே;  தன்  வாள்க(ண்)ணின்  நிழலைக் கண்டாள்  -
தன்னுடைய  வாள்போன்ற கண்களின் நிழலைப்  பார்த்தாள்  (நிழலென
அறியாது.);  வண்டென  ஓச்சுகின்றாள்  -  (உள்ளே  உள்ள குவளை
மலர்களில்  மது  வுண்ண  வந்த வண்டுகள்  என்று)   தன்கண்நிழலை
ஓட்டலானாள்!

எல்லா   இனிமைப் பொருட்கும் இனிமைகொடுக்க வல்லவை குழலும்
யாழும்.  அவற்றுக்கும்  இனிமை  கொடுக்க  வல்லவை இவள் மழலைச்
சொற்கள் என்க. 

கட்   சாடியுள் மணத்திற்காகக் குவளை. தாமரை முதலிய மலர்களை
இட்டு  வைத்தல்  மரபு.  அந்த  மலர்களை மொய்க்க வண்டுகள் வந்து
விட்டன   என்று   கருதிச்  சாடியுள்  தெரிந்த   தன்   விழி  நிழலை
ஓட்டுகின்றாள்!   மதுப்பழக்கம்  நகைப்பிற்கு   இடம்   ஆனவற்றையே
செய்யும் என மேலும் உணர்த்தியவாறு.                          13