உண்டாட்டுப் படலம் - 1053
மகளிர் கள்ளுண்டது
1053.
மீனுடைய விசும்பினார். விஞ்சை நாட்டவர்.
ஊனுடை உடம்பினார் உருவம் ஒப்பு இலார்.
மானுடை நோக்கினார் வாயின் மாந்தினார்-
தேனுடைய மலரிடைத் தேன் பெய்தென்னவே.
மீன் உடை விசும்பினார் - விண்மீன்களையுடைய வானுலக
மங்கையரும்; விஞ்சை நாட்டவர் - வித்தியாதர உலகத்து வித்தியாதர
மகளிரும்; ஊனுடை உடம்பினார் - ஊன் உடம்பினராகி இம்
மகளிர்க்கு; உருவம் ஒப்பிலார் - அழகில் ஒப்பாகார் (எனத் தக்க) ;
மாதனுடைய நோக்கினார் - மானை வென்ற விழியினராகிய மங்கையர்;
தேனுடை மலரிடை - தேனையுடைய மலரின் கண்ணே; தேன்
பெய்தென்ன - (மேலும்) தேனைச் சொரிந்தாற் போல; வாயில்
மாந்தினர் - (தங்கள் மலர்) வாயால் மதுவுண்டனர்.
மகளிர் வாய். மலர் போன்றும். அதில் ஊறும் நீர். தேன்
போன்றும் இருத்தலால். அவர்கள் மேலும் தேன் எனப்படும்
மதுவையுண்ணுதல் “தேனுடை மலரிடை தேன் பெய்ததற்கு” நிகர்
ஆயிற்று. வால் எயிற்று ஊறிய நீர் தேன்
என வள்ளுவரும் உரைப்பார். (திருக். 1121) விண்ணக மகளிரும்
வித்தியாதர மகளிரும் ஒளிமேனிப் படைத்தவர் ஆயினும். ஊன்மேனி
படைத்த இவ்வுலகப் பெண்களுக்கு ஒப்பாகார். அவர்கள் இமையா
நாட்டம் பெற்றவர் ஆயினும் இமைத்து மருட்டும் இம்மடந்தையர்க்கு
ஈடாகார் என்பார் “மான் உடை நோக்கினார்” என்ற நுட்பம் உணர்க.
உடைதல்; தோற்றல். 7
