உண்டாட்டுப் படலம் - 1052
மகளிர் மதுக் குடித்தல்
1052.
பூக்கமழ் ஓதியர். போது போக்கிய
சேக்கையின் விளை செருச் செருக்கும் சிந்தையர்.
ஆக்கிய அமிழ்து என. அம் பொன் வள்ளத்து
வாக்கிய பசு நறா. மாந்தல் மேயினார்.
பூக்கமழ் ஓரியர் - பூக்களின் நறுமணம் கமழ்கின்ற
கூந்தலையுடைய பெண்டிர்;போது போக்கிய சேக்கையின் விளைசெரு
- மலர்கள் (மிகப்) பரப்பிய படுக்கைகளிலே விளைகின்ற கலவிப்
போரிலே; செருக்கும் சிந்தையர் - களிக்க வேண்டுமென்ற
மனத்தினராய்; ஆக்கிய அமிழ்தென - அப்போரில் வெல்வதற்கென
ஆக்கப்பட்ட அமிழ்தம் போல; அம்பொன் வள்ளத்து வாக்கிய பசு
நறை - அழகிய பொற்கிண்ணத்தில் ஊற்றிய புதுமதுவைப்; மாந்தல்
மேயினார் - பருகத் தொடங்கினர்.
சோர்வு. களைப்பு ஆகியவை போக்கி. இறப்பு நீக்கி. இளமை நல்க
வல்லது அமிழ்து ஆதலின். கலவிப் போர்க்கு இவை செய்யும்
அமிழ்தென்று மதுவுண்டனர் என்க. போது போக்கிய: மலர்கள்
போடப்பட்ட பொழுது போக்குவதற்காக. சிலேடை. அவனிப் போருக்கு
ஆக்கிய மது அன்று இது: அமளிப் போருக்கு என்றே ஆக்கிய
அமிழ்தம் இது என்பார். “சேக்கையின் விளை செருச் செருக்கும்
சிந்தையர் ஆக்கிய அமிழ்தென்” என்றார். சேக்கை: படுக்கை. அமளி.
செரு: போர். வாக்கிய: வார்த்த. செம்பொன் வள்ளம் வளம் மிகுதி
குறித்தது. 6
