உடலிற் பஞ்சபேதம்

2122
காயப்பை ஒன்று சரக்குப் பலவுள
மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பையுண்டு
காயப்பைக்கு உள்நின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மண்ணா மயங்கிய வாறே. 1
2123
அத்தன் அமைத்த உடல்இரு கூறினில்
சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால்
சத்த பரிச ரூப ரசகந்தம்
புத்திமான் ஆங்காரம் புரியட்ட காயமே. 2
2124
எட்டினில் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்று கரணமும் ஆயிடும்
ஒட்டிய பாசம் உணர்வுஅது வாகவே
கட்டி அவிழ்ந்திடும் கண்ணுதல் காணுமே. 3
2125
இரதம் உதிரம் இறைச்சிதோல் மேதை
மருவிய அத்தி வழும்பொடு மச்சை
பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி
உருவ மலால்உடல் ஒன்றென லாமே. 4
2126
ஆரே அறிவார் அடியின் பெருமையை
யாரே அறிவார் அங்கவர் நின்றது
யாரே அறிவார் அறுபத்தெட்டு ஆக்கையை
யாரே அறிவார் அடிக்காவல் ஆனதே. 5
2127
எண்சாண் அளவால் எடுத்த உடம்புக்குள்
கண்கால் உடலில் சுரக்கின்ற கைகளில்
புண்கால் அறுபத்தெட்டு ஆக்கை புணர்கின்ற
நண்பால் உடம்பு தன் னால் உடம் பாமே. 6
2128
உடம்புக்கும் நாலுக்கும் உயிராகிய சீவன்
ஒடுங்கும் பரனோடு ஒழியாகப் பிரமம்
கடந்தொறும் நின்ற கணக்கது காட்டி
அடங்கியே அற்றது ஆரறி வாறே. 7
2129
ஆறுஅந்த மாகி நடுவுடன் கூடினால்
தேறிய மூவாறும் சிக்கென்று இருந்திடும்
கூறுங் கலைகள் பதினெட்டும் கூடியே
ஊறும் உடம்பை உயிருடம்பு எண்ணுமே. 8
2130
மெய்யினில் தூல மிகுந்த முகத்தையும்
பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும்
கையினில் துல்லியம் காட்டும் உடலையும்
ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே. 9
2131
காயும் கடும்பரி கால்வைத்து வாங்கல் போல்
சேய இடம்அண்மை செல்லவும் வல்லது
காயத் துகிர் போர்வை ஒன்றுவிட்டு ஆங்குஒன்றிட்டு
ஏயும் அவரென்ன ஏய்ந்திடும் காயமே. 10
2132
நாகம் உடல்உரி போலும்நல் அண்டச
மாக நனாவில் கானாமறந் தல்லது
போகலும் ஆகும் அரன்அரு ளாலே சென்று
ஏகும் இடம்சென்று இருபயன் உண்ணுமே. 11
2133
உண்டு நரக சுவர்கத்தில் உள்ளன
கண்டு விடும்சூக்கம் காரண மாச்செலப்
பண்டு தொடரப் பரகாய யோகிபோல்
பிண்டம் எடுக்கும் பிறப்பு இறப்பு எய்தியே. 12
2134
தான்அவ னாகிய தற்பரம் தாங்கினோன்
ஆனவை மாற்றிப் பரமத்து அடைந்திடும்
ஏனை உயிர்வினைக்கு எய்தும் இடம்சென்றும்
வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே. 13
2135
ஞானிக்குக் காயம் சிவமாகும் நாட்டிடில்
ஞானிக்குக் காயம் உடம்பே அதுவாகும்
மேனிக்கும் யோகிக்கும் விந்துவும் நாதமும்
மோனிக்குக் காயம்முப் பாழ்கெட்ட முத்தியே. 14
2136
விஞ்ஞானத் தோர்க்குஆ ணவமே மிகுதனு
எஞ்ஞானத் தோர்க்குத் தனுமாயை தான்என்ப
அஞ்ஞானத் தோர்க்குக் கன்மம் தனுவாகும்
மெஞ்ஞானத் தோர்க்குச் சிவதனு மேவுமே. 15
2137
மலமென்று உடம்பை மதியாத ஊமர்
தலமென்று வேறு தரித்தமை கண்டீர்
நலமென்று இதனையே நாடி இருக்கில்
பலமுள்ள காயத்தில் பற்றும்இவ் அண்டத்தே. 16
2138
நல்ல வசனத்து வாக்கு மனாதிகள்
மெல்ல விளையாடும் விமலன் அகத்திலே
அல்ல செவிசத்த மாதி மனத்தையும்
மெல்ல தரித்தார் முகத்தார் பசித்தே. 17