இராஜராஜனின் மெய்க்கீர்த்திகள்

இராஜராஜனின் மெய்க்கீர்த்திகள்

bookmark

சில அரசர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மெய்க் கீர்த்திகளை உடையவராக இருந்தனர். முதலாம் இராஜராஜன் மூன்று வித மெய்க்கீர்த்திகளை கையாண்டாலும் 'திருமகள் போல' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையே எட்டாம் ஆண்டிலிருந்து பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டது. இவ்வகை மெய்க்கீர்த்தி இவரது ஆட்சியில் நடைபெற்ற முதற்போரைக் குறிக்கும் வகையில், 'காந்தளூர்ச்சாலை கலமறுத்த' என்ற பட்டத்தைக் குறிப்பிடுகிறது.

கீழ்வருவது இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்திகளில் ஒன்று.

"ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்."

இரண்டாம் வகையான மெய்க்கீர்த்தியிலும் காந்தளூர்ச்சாலை வெற்றிக்கே முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. இவரது 20ம் ஆண்டைச் சேர்ந்த மூன்றாம் வகை மெய்க்கீர்த்தியில் இராஜராஜன் மதுரையை அழித்தார் என்றும். கொல்லம், கொல்ல தேசம், கொடுங்கோளூர் ஆகிய நாட்டு மன்னர்களை வெற்றி கொண்டார் என்றும் கடல் கடந்த பகுதிகளின் மன்னர்கள் அவருடைய பரிவாரமாகப் பணிபுரிந்தனர் என்றூம் கூறுகிறது.

மேலும் இவன் காலத்திலேயே வட்டெழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களாக மாற்றியமைக்கப்பட்டன.