ஆலிவர் கோல்ட்ஸ்மித்

ஆலிவர் கோல்ட்ஸ்மித்

bookmark

ஆலிவர் கோல்ட் ஸ்மித் அயர்லாந்து நாட்டில் 1728 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் நாள் பிறந்தார்.அவருக்கு இளம் வயதிலேயே கவிதை எழுதுவதில் நாட்டம் இருந்தது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, வறுமையை அனுபவித்து வந்தாலும், இவரது தந்தையார் இவரை கல்லூரியில் சேர்க்கத் தவறவில்லை. ஆனால், ஆலிவர் அவர்களுக்கு இலக்கியத்தில் மட்டுமே ஈடுபாடு இருந்ததால், மற்ற பாடங்களை அவர் சரியாகப் படிக்கவில்லை. கணக்குப் பாட புத்தகத்தில் கூட தனது கவிதையை எழுதி வைத்து ஆசிரியரின் கோபத்திற்கு அவர் ஆளான நாட்கள் எல்லாம் உண்டு.எப்படியோ கஷ்டப்பட்டு பி.ஏ பட்டம் பெற்றார். படிப்பு முடித்தவுடன் தனது இலக்கியப் பணியை தொடர்ந்தார் ஆலிவர், நிறைய கட்டுரைகள் மற்றும் கதைகளை எழுதி அவற்றை பல பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்தார். ஆனால், அவைகளில் ஒன்று கூட பிரசுரம் ஆகாமல் திரும்பி வந்தது. பின்பு மருத்துவமும், சட்டமும் கற்றார், ஆனால் அவரால் எந்தத் துறையிலும் நிலைத்து நிற்க முடியவில்லை. அவரது நிலையைக் கண்டு பலர் வெறுத்தனர், சிலர் பரிகசித்தனர்.

பிரான்சு, இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்குள்ள அறிஞர்களை சந்தித்து உரையாடி மகிழ்ந்தார். அதன் மூலம் உலக அறிவையும் வளர்த்துக் கொண்டார். மீண்டும் இங்கிலாந்துக்கு திரும்பி வந்த ஆலிவர் " மன்த்லி ரெவ்யூ" என்ற பத்திரிக்கைக்கு பல கட்டுரைகளை எழுதி அனுப்பினார். அவைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக பிரசுரம் ஆனது.பிற்பாடு அவருக்கு கிழக்கிந்தியக் கம்பனியின் அலுவலகத்தில் மருத்துவ உதவியாளர் பணி கிடைத்தது. ஆனால், அந்த வேலையில் அவர் சேர விரும்பவில்லை.மருத்துவம் பார்த்து சாப்பிட்டு வாழ்வதை விட இலக்கியப் பணியில் ஈடுபட்டு பட்டினியாக இருக்கலாம் " என்பதில் தீர்மானமாக இருந்தார் ஆலிவர். " ஐரோப்பாவில் அறிஞர்களின் நிலை" என்ற கட்டுரையினை 1759 ஆம் ஆண்டு எழுதினார். அது பிரபலமானது.இது தவிர பல பத்திரிக்கைகளுக்கு நகைச்சுவை கட்டுரைகளையும் எழுதி அனுப்பி இருந்தார்.ஆனால் இவரது படைப்புகள் எல்லாம் புகழை தேடித் தந்ததே தவிர பணத்தைத் தேடித் தரவில்லை.குடும்பத்தில் வறுமை நிலை அப்படியே காணப்பட்டது.

சாமுவேல் ஜான்சன் என்ற அறிஞருடைய நட்பு கிடைத்த பின்பு அவருடைய உதவியுடன் ஆலிவர் " வால்ட்டேரின் வாழ்க்கை வரலாறு", மாக்னென் பாக்கின் சரித்திரம்", தி டெஸர்ட்டட் வில்லேஜ்" ,ஷி ஸ்டூப்ஸ் டு காங்க்கர் " போன்ற நூல்களை வெளியிட்டார். இத்துடன் "எட்வினும் ஏஞ்சலினாவும்" என்ற இசை நாடகத்தையும் வெளியிட்டார். 1763 ஆம் ஆண்டு ஆலிவர் எழுதிய "விக்கார் ஆ ஃ ப் வேக் ஃ பீல்டு" என்ற நாவல் வெளிவந்தது. மிகக் குறைந்த அளவிலேயே அவருக்கு அன்பளிப்புத் தொகை வழங்கப்பட்டது. ஆனால் ஆலிவரின் நூல் மூலம் பதிப்பாளருக்கு நல்ல வருமானம் கிடைத்தது.

ஆலிவர் இச்சமயத்தில் நாடகங்கள் பலவும் எழுதினார். " நல்ல மனிதன்", இரவில் நடந்த தவறுகள்" ஆகிய நாடகங்கள் அவருக்குப் பணத்தையும், புகழையும் பெற்றுத் தந்தன. இவ்வாறாக ஆங்கில இலக்கியத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த ஆலிவர், 1774 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 4 ஆம் தேதி இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். அப்போது அவருக்கு வயது 46 மட்டுமே. ஆலிவர் இறந்த பிறகு அவருடைய இரண்டு நூல்கள் பிரசுரமாயின. அவருடைய நினைவுச் சின்னம் வெஸ்ட் மினிஸ்டர் மடாலயக் கல்லறையில் அமைந்து உள்ளது.