ஆர்க்கிமிடீஸ்
ஆர்க்கிமிடீஸ் கி.மு.287இல் சைரகுசின் சிசிலி நகரில் பிறந்தார். ஆர்க்கிமிடீஸ் பிறந்த தேதி , அவர் 75 ஆண்டுகள் வாழ்ந்தார் என்ற பைசான்டின் கிரேக்க வரலாற்று அறிஞர் ஜான் ஜெட்ஸஸின் கூற்றிலிருந்து சொல்லப்படுகிறது. சான்ட் ரெக்கானர் என்னும் தனது வேலைப்பாட்டில் தனது தந்தையின் பெயரை பிடியஸ் என ஆர்க்கிமிடீஸ் குறிப்பிடுகிறார். ப்ளூடார்ச், ஆர்க்கிமிடீஸ் அரசர் இரண்டாம் ஹியரோவுடன் தொடர்பானவர் என்று குறிப்பிடுகிறார். ஆர்க்கிமிடீஸின் சுயசரிதை ஒன்றை அவரது நண்பர் ஹெரக்லிடஸ் எழுதியிருக்கிறார். ஆனால் அது தொலைந்துவிட்டதாதலால் அவரது வாழ்க்கை பற்றிய தகவல்கள் தெரியவில்லை.
ஆர்க்கிமிடீஸ் பற்றி மிகவும் பரவலாக அறியப்படும் நிகழ்ச்சி அவர் ஓர் ஒழுங்கற்ற வடிவம் கொண்ட ஒரு பொருளின் கொள்ளளவை தீர்மானிப்பதற்கான முறையை கண்டுபிடித்ததாகும். விட்ரூவியஸ் கூற்றுப்படி, அரசர் இரண்டாம் ஹியரோ கோவிலொன்றுக்கு தங்க கிரிடமொன்று செய்யச்சொல்லி தூய தங்கம் வழங்கியிருந்தார். ஆனால் கொல்லன் சிறிதளவு வெள்ளி கலந்திருப்பானோ என்று சந்தேகப்பட்டு ஆர்க்கிமிடீஸிடம் அதை கண்டுபிடிக்கச்சொன்னார். இதன்பிறகு ஆர்க்கிமிடீஸ் ஒருநாள் குளிக்கும்போது குளியல் தொட்டியில் தண்ணீரின் உயரம் தான் உள்ளே இறங்கும்போது உயருவதைக் கண்டார். இதை வைத்து அரசரின் கேள்விக்கு விடை கண்டுவிடலாமே என்று உணர்ந்து யுரேகா (கண்டுபிடித்துவிட்டேன்) என்று கத்திக்கொண்டு வீதியில் ஓடினார்.
இந்த தங்க கிரீட கதை ஆர்க்கிமிடீஸின் அறியப்பட்ட படைப்புகளில் சொல்லப்படவில்லை. மேலும், அது விவரிக்கப்பட்ட முறைப்படி நடைமுறையில் தண்ணீரின் உயரமாற்றத்தை அவ்வளவு துல்லியமாக அளவிட முடியாது என்ற கேள்வியும் உள்ளது. பதிலாக , ஆர்க்கிமிடீஸ் 'ஆன் பிலோடிங் பாடீஸ்' என்னும் தனது புத்தகத்தில் குறிப்பிட்ட ஆர்க்கிமிடீஸ் கொள்கை மூலம் இச்செயலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த கொள்கை படி ஒரு பொருள் ஒரு திரவத்தினுள் மூழ்கியிருக்கும்போது எந்த அளவு திரவத்தை பெயர்த்துள்ளதோ அதன் எடைக்கு சமமாக ஒரு மிதப்பு விசையை எதிர்கொள்ளும். இந்த கொள்கையை பயன்படுத்தி, ஒரு தராசில் ஒரே எடைகொண்ட தூய தங்கத்தை ஒருபுறமும் கிரிடத்தை மறுபுறமும் வைத்து அதை நீரில் மூழ்கடித்தால் தராசு தூய தங்கத்தின் பக்கம் சாய்ந்தால் அது வெள்ளி கலக்கப்பட்ட கிரிடமென்று நிரூபணமாகிவிடும். கலிலியோ ஆர்க்கிமிடீஸ் இம்முறையைத்தான் பயன்படுத்தியிருப்பார் என்றார்."
இதே போல, ஆர்கிமிடிஸின் பொறியியல் வேலைப்பாடுகளில் ஒரு பெரும் பகுதி அவரது சொந்த நகர் சைரக்யூஸின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக எழுந்ததாகும். கிரேக்க எழுத்தாளர் அத்தேனயஸ் , இரண்டாம் ஹியரோ என்னும் அரசர் ஆர்கிமிடிசை வைத்து சைரகுசியா என்னும் பெரிய கப்பலை கட்டியதை விவரிக்கிறார். அக்கப்பல் சொகுசு கப்பலாக மட்டுமில்லாமல் ஒரு போர்க்கப்பலாகவும் செயல்படும் திறமை கொண்டது. பழங்காலத்தின் மிகப்பெரிய கப்பலாக சைரகுசியா கருதப்படுகிறது. அத்தேனயஸ் சொல்வதுபடி அது 600 பேர்களை தாங்கிச்செல்லும் திறன்கொண்டது. மேலும் அதில் தோட்டம், உடற்பயிற்சி நிலையம் , கோவில் போன்றவையும் இருந்தன. இந்த அளவு பெரிய கப்பலில் மேலோடு ( கப்பலின் உடற்பகுதி ) மூலம் தண்ணீர் கணிசமான அளவு கசியும் என்பதால் ஆர்கிமிடிஸ் திருகு உருவாக்கப்பட்டது என்று கருதப்படுகிறது. இந்த இயந்திரம் ஒரு உருளைக்குள்ளே சுழலும் திருகு வடிவ தகடு கொண்டதாகும். அது கையால் திருகப்பட்டது. இந்த ஆர்கிமிடிஸ் திருகு இன்றும் திரவங்கள் மற்றும் நிலக்கரி போன்றவற்றை பம்ப் செய்ய பயன்படுத்தப்படுகிறது. விட்ரூவியஸ் குறிப்பிடும் ரோம காலத்து ஆர்க்கிமிடிய திருகு பாபிலோனின் தொங்குதோட்டத்தில் பயன்படுத்திய திருகு பம்பின் முன்னேற்றமாக இருக்கலாம். உலகின் முதல் திருகு உந்தி ( screw propeller ) கொண்ட நீராவிக் கப்பல் "எஸ் எஸ் ஆர்க்கிமிடீஸ்" 1839இல் உருவாக்கப்பட்டது.
2 ஆம் நூற்றாண்டு எழுத்தாளர் லூசியன், சைரக்யூஸ் முற்றுகையின் போது ஆர்கிமிடிஸ் வரிசையாக கண்ணாடிகளை வைத்து அதை சூரிய ஒளியை ரோமானிய கப்பல்கள் மீது குவித்து அக்கப்பல்களை தீப்பிடிக்க வைத்தார் என்று கூறுகிறார். ஆனால் இந்த "ஆர்கிமிடிஸ் வெப்ப கதிர்" ஆயுதத்தின் நம்பகதன்மை பற்றி மறுமலர்ச்சி காலத்திலிருந்து இன்றுவரை விவாதிக்கப்படுகிறது.
ஆர்க்கிமிடீஸ் நெம்புகோலை கண்டுபிடிக்கவில்லை என்றபோதிலும் அதன் கொள்கையை தனது "ஆன் தி இக்விலிபிரியம் ஆப் பிலேன்ஸ்" என்ற புத்தகத்தில் அளித்திருக்கிறார். இதன் முன்பே ஆர்கைடஸ் என்பவர் நெம்புகோல் கொள்கையை கூறியிருக்கிறார். அலெக்ஸாண்ட்ரியாவின் பாப்பஸின் கூற்றுப்படி அர்கிமிடிஸ் ,"எனக்கு நிற்க ஒரு இடம் கொப்பீர்களானால் , நான் இந்த பூமியை நகர்த்திக்காட்டுவேன்" என்றிருக்கிறார். ஆர்க்கிமிடீஸ் "ப்ளாக் அன்ட் டாக்கில்" கப்பி அமைப்புகளை வடிவமைத்த விதத்தை ப்ளூடார்ச் விவரிக்கிறார். இந்த கப்பி அமைப்பின் மூலம் மாலுமிகள் நெம்புகோல் கொள்கையை பயன்படுத்தி மிக கனமான பொருட்களையும் தூக்கலாம். ஆர்க்கிமிடீஸ் மேலும், கவணின் சக்தி மற்றும் துல்லியத்தை மேம்படுத்தியதற்கும் பாராட்டப்பட்டுள்ளார். மேலும் முதல் ப்யூநிக் போரின்போது இவர் ஓடோமீட்டர் கண்டுபிடித்தார். இந்த ஓடோமீட்டரானது ஒரு மைல் சென்ற பிறகு ஒரு பந்தை ஒரு குடுவையில் போடுமாறு வடிவமைக்கப்பட்டதாகும்.
ஆர்க்கிமிடீஸ் கி.மு.212இல் இரண்டாம் புனிக் போரின்போது இறந்தார். ப்ளுடார்ச்சின் கூற்றுப்படி சைரகுஸ் கைப்பற்றப்பட்டபோது ஆர்க்கிமிடீஸ் ஒரு கணித வரைபடம் வரைந்துகொண்டிருந்தார். ஒரு ரோமானிய வீரர் ஆர்க்கிமிடீசை தளபதி மார்செல்லசை வந்து பார்க்க ஆணையிட்டார். ஆனால் ஆர்க்கிமிடீசோ தான் வேலையை முடிக்கவேண்டும் என்று கூறியதால் படைவீரர் கோபமுற்று கத்தியினால் ஆர்க்கிமிடீசை கொன்றுவிட்டார். ஆனால் தளபதியோ ஆர்க்கிமிடீசை ஒரு மதிப்பற்ற அறிவியல் சொத்தாக கருதியதால், இச்செயலினால் மனமுடைந்தார்.
